(து - ம்,) என்பது, தலைமைகொண்டொழுகும் பரத்தையொருத்தியைக் கலந்து பின்பு அவளைக் கைவிட்டு வேறொரு பரத்தைபாற் சென்ற தலைவனை அம் முதற்பரத்தை நெருங்குதலும் அவளது வெகுளி தணிக்கும்படி அவன் பாணனைவிடுப்ப அப் பாணனை நோக்கிப் பாணனே, நுந்தலைமகன் எமது சேரியில்வந்து காட்டி எந்நெஞ்சங் கொண்டமை விடாதுகண்டாய் ; எம் அன்னை சினமுடையள் இரங்காளாதலின் அவளாலொறுக்கப்படுவதுமுண்டு. அதனால் அவன் யாவராலும் நகைத்தற்குரியன் என இகழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனைப், "புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணும்" (தொல். கற். 10) எனவரும் நூற்பாவின்கண் "இவற்றோடு பிறவும்" என்பதனால் அமைத்துக்கொள்க.
| நகைநன் குடையன் பாணநும் பெருமகன் |
| மிளைவலி் சிதையக் களிறுபல பரப்பி |
| அரண்பல கடந்த முரண்கொள் தானை |
| வழுதி வாழிய பலவெனத் தொழுதீண்டு |
5 | மன்னெயில் உடையோர் போல அஃதுயாம் |
| என்னலும் பரியலோ இலமெனத் தண்நடைக் |
| கலிமா கடைஇ வந்தெம் சேரித் |
| தாருங் கண்ணியுங் காட்டி ஒருமைய |
| நெஞ்சம் கொண்டமை விடுமோ வஞ்சக் |
10 | கண்ணுடைச் சிறுகோல் பற்றிக் |
| கதம்பெரிது உடையள்யாய் அழுங்கலோ இலளே. |
(சொ - ள்.) பாண நும் பெருமகன் நகை நன்கு உடையன் - பாணனே ! நும் பெருமகனாவான் பலராலும் நகுதற்படுதலை நன்றாகவுடையனாயிராநின்றான; மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி அரண் பல கடந்த முரண்கொள் தானை வழுதி பல வாழிய எனத் தொழுது - 'காவலரண் சிதையும்படி பலவாய யானைப் படைகளைப் பரக்கவிட்டுச் சென்று பலபல அரணங்களை வென்று கொண்ட வலிமைமிக்க சேனைகளையுடைய பாண்டியன் மாறன் வழுதி பன்னெடு நாள் வாழ்வானாக!' என்று வணங்கி; ஈண்டு மன் எயில் உடையோர் போல அஃது யாம் என்னதும் பரியல் இலம் என - அடைகின்ற நிலைபெற்ற மதில்களையுடைய குறுநில மன்னர்களைப்போல அதற்காக யாம் சிறிதேனும் வருந்துதலைச் செய்யோம் என்று கூறி; தண் நடைக் கலி மா கடைஇ எம் சேரி வந்து - மென்மையான நடையையுடைய கனைக்கின்ற குதிரையைச் செலுத்தி எமது சேரியின்கண் வந்து; தாரும் கண்ணியும் காட்டி - கொண்டை மாலையையும் அழகுக் கிடுங் கண்ணியையுங் காட்டி; ஒருமைய நெஞ்சம் கொண்டமை விடுமோ - ஒருமைப்பாட்டையுடைய எமது நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்டமை இனி விடுவதமையுமோ? அமையாது காண்!; அஞ்ச யாய் கண் உடைச் சிறுகோல் பற்றிக் கதம் பெரிது உடையள் - நீ அஞ்சுமாறு எம் அன்னை நெருங்கிய கணுக்களையுடைய சிறிய மூங்கிற்கோலைக் கையிலேந்தி வெகுளி பெரிதும் உடையளாயிராநின்றாள்; அழுங்கல் இலள் - சிறிதும் வருந்துகிலள், அவளால் ஒறுக்கப்படுவதுண்டு போலும்; ஆதலின் நீ இங்கே வாராதே கொள்!; எ - று.
(வி - ம்.) மிளை - காவலரண்; காவற்காடுமாம். தண்நடை - மெல்லிய நடை. கண் - மூங்கிற்கணு. அன்னைசினம் தன்னையொறுக்கு மெனவும் பொருள்பயப்பநின்றது.
பரத்தையர்க்குரிய பரியப்பொருளை இனைத்தென அவரது ஏவற்சில தியர்மாட்டளித்து அவராலே தெருவின்கண்ணே கூறப்படு மாலையை வாங்கிப் பரத்தையரிடங்கொடுத்து முயங்குதல் வழக்காதலின் ஈண்டுத் தாருங் கண்ணியுங் காட்டியென்றாள். நெஞ்சங்கொண்டமை விடுமோவென்றது பிற போகாவியல்பினேனுடைய நெஞ்சம்கொண்டு கைவிட்ட தீவினை அவனை விடாது சூழுங்காணென்றதாம். முன்பும் இப்பாணனே இவளை அவன்பாற் புணர்ப்பித்தவனாதலின், தீவினை முன்னின்ற பாணனை விடாதென்றாளெனவுமாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - பாணனைக் கடிதல்.
(பெரு - ரை.) தாருங் கண்ணியும் பரியப் பொருள்கொடுத்து வாங்கிப் பரத்தைக்கு வழங்கினன் எனி்ன் பின்னர் அவன் பிரிவிதற்கு அவள் ஊடல் பொருளற்றதாம். ஆகவே தாரும் கண்ணியும் காட்டி என்றது அவளது தலையிலே கண்ணி சூட்டி அவள் மார்பிற் தன் தார் குழையும்படி முயங்கிய முயக்கத்தைத் தாருங் கண்ணியும் காட்டி என்று இடக்கரடக்கு வகையாற் குறிப்பிட்டாள் எனக் கோடலே சிறப்பென்க. அஃதாவது எம்சேரி வந்து எம்மை மயக்கிக் கூடிப் பின் கைவிடல் நீதியோ என்று புலந்தபடியாம்.
அன்னை இதனால் சினம் பெரிதுடையள் ஆகலின் அவன் வரின் ஒருதலையாகத் தன் கைச் சிறுகோல் கொண்டு அவனைப் புடைப்பது திண்ணம் எனவே அவன் அவ்வழிப் பிறரால் நகைக்கப்படுவன்காண் என்பது கருத்து. பாணனே அவள் நின்னையும் புடைப்பினும் புடைப்பள் என்பது தோன்ற யாய் கோல் பற்றிக் கதம் பெரிதுடையள் என்றாள். ஆதலால் நீ அவன் பொருட்டு ஈண்டு வாராதேகொள் என்பது குறிப்பெச்சம்.
(150)