திணை : குறிஞ்சி.

    துறை : இஃது, இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.

     (து - ம்,) என்பது, இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாகிய தலைமகன் கேட்டு நீட்டியாது வரைதல்வேண்டித் தோழி, தலைவியை நோக்கி 'நினது நுதல் பசந்தாலும் பெரிய தோள் நெகிழ்ச்சியுற்றாலும் மலைநாடன் நின்பொருட்டு இராப்பொழுதிலே கொடிய சாரல் நெறியில் வாராதொழிவானாக'வென்று கடிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.

    
நன்னுதல் பசப்பினும் பெருந்தோள் நெகிழினும் 
    
கொன்முரண் இரும்புலி அரும்புழைத் தாக்கிச் 
    
செம்மறுக் கொண்ட வெண்கோட்டு யானை 
    
கன்மிசை அருவியில் கழூஉஞ் சாரல் 
5
வாரற்க தில்ல தோழி கடுவன் 
    
முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சிக் 
    
கறிவளர் அடுக்கத்தில் களவினில் புணர்ந்த 
    
செம்முக மந்தி செல்குறி கருங்கால் 
    
பொன்இணர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர் 
10
குண்டுநீர் நெடுஞ்சினை நோக்கிக் கவிழ்ந்துதன் 
    
புன்றலைப் பாறுமயிர் திருத்துங் 
    
1குன்ற நாடன் இரவி னானே. 

     (சொ - ள்.) தோழி கறி வளர் அடுக்கத்தில் களவினின் கடுவன் புணர்ந்த செம்முக மந்தி - தோழீ ! மிளகுக் கொடி வளர்ந்து படருகின்ற மலைப்பக்கத்திலே களவுப் புணர்ச்சியிற் கடுவனால் முயங்கப்பட்ட சிவந்த முகத்தையுடைய பெண் குரங்கு; செல் குறி முறி ஆர் பெருங்கிளை அறிதல் அஞ்சி - தனக்குப் புணர்ச்சி வேறுபாட்டானுண்டாகிய குறியைத் தளிர்களைத் தின்னுகின்ற தன் பெரிய சுற்றம் அறியுமே என்று அஞ்சி; கருங் கால் பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர் - கரிய அடியையும் பொன் போல்கின்ற பூங்கொத்தினையுமுடைய வேங்கை மரத்தின் அழகிய கிளைமீது சென்று; குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து - ஆழமாகிய சுனைநீரை நோக்கித் தலைகவிழ்ந்திருந்து; தன் புன் தலைப் பாறுமயிர் திருத்தும் நாடன் - தன் மெல்லிய தலையில் முன்பு புணர்ச்சியாலே குலைந்த முச்சிமயிரை அக்குலைவு தோன்றாதபடி திருத்தாநிற்கும் மலைநாடன்; நல் நுதல் பசப்பினும் பெருந்தோள் நெகிழினும் - நினது நல்ல நெற்றி பசலையூர்ந்து பசந்து காட்டினும் பெரிய தோளின்வளை நெகிழந்தவாயினும்; கொல் முரண் இரும்புலி அரும்புழைத் தாக்கி்ச் செம் மறுக்கொண்ட வெண்கோட்டு யானை - கொல்லுகின்ற வலிய கரிய புலியை நுழைதற்கரிய முழையகிருல் மோதிக் கொன்றுபோகட்டு அதனிரத்தம் பூசுதலானே சிவந்த மறுவைக்கொண்ட வெளிய கோட்டினையுடைய களிற்றியானை; கல் மிசை அருவியில் கழூஉஞ் சாரல் - மலைமேனின்று வருகின்ற அருவியின் கண்ணே சென்று கழுவாநிற்குஞ் சாரல் நெறியில்; இரவினான் வாரற்க - இரவில் எஞ்ஞான்றும் வாரா தொழிவானாக; எ-று.

    (வி - ம்.) தில்: காலத்தின்மேலது. முறி - தளிர். கறி - மிளகு. குண்டு - ஆழம். பாறுதல் - சிதைதல். பசப்பானும் நெகிழ்ச்சியானும் உண்டாய துன்பத்தோடு ஆற்றதேதத்துக்கும் அஞ்சவேண்டுதலின் வாரற்கவென்றதாம். நுதல்பசப்பினுமென்றது, பசலைபாய்தல். தோள் நெகிழினுமென்றது, உடம்பு நனிசுருங்கல், வாரற்கவென்றது, அழிவில் கூட்டத்து அவன் புணர்வு மறுத்தல்.

    உள்ளுறை :- களவினிற் புணரப்பட்ட மந்தி அப்புணர்குறியைத் தம் சுற்றம் நோக்குமென்றஞ்சிப் பாறுமயிர்திருத்துமென்றது, களவொழுக்கத்தாலே புணரப்பட்ட தலைமகள் அப் புணர்ச்சி வேறுபாட்டைத் தன் சுற்றத்தாரறிவரென்றஞ்சி நாள்தோறும் மெய்யை முன்போலாகும்படி திருத்திக்கொள்ளவேண்டியவ ளாகின்றனள்; ஆதலின் இவ் அச்சந் தீர வரைக வென்றதாம்.

    இறைச்சி :- புலியை யானை சென்றழித்துத் தன் கோட்டைக் கழுவு மென்றது, ஏதிலாட்டியர் எடுத்த பழிச்சொல்லைக் கெடுத்து ஓரையும் நாளும் நோக்காது கலந்ததனாலாகிய ஏதத்தை வரைந்து போக்கிக்கொள்வானாக வென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - இரவுக்குறி மறுத்து வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) 'செல் குறி' என்றும் பாடம். அடுக்கத்துக் கடுவன் களவினிற் புணர்ந்த மந்தி என இயைத்துக் கொள்க. 'செம்மறுக்கொண்ட வெண்கோடு' என்புழிச் செய்யுளின்பமுணர்க.

(151)
 (பாடம்) 1. 
குன்றகநாடன்.