திணை : பாலை.

    துறை : இது, பிரிவிடைமெலிந்த தலைவி சொல்லியது.

     (து - ம்,) என்பது, தலைவன் பிரிதலால் மெலிவுற்ற தலைவி தன்னெஞ்சம் எப்பொழுதும் அவன்பாற் சென்றமையும் தன் தனிமையும் குறிப்பாற் கூறுவாள் 'எழிலி சென்றாற்போல என்னெஞ்சம் அவர்பாற் சென்றொழிந்ததனாலே தனிமகன்போன்று என்னுடம்பு இங்கிருக்கலாகிய'தென வருந்திக்கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "ஆவயின் வரூஉம் பல்வேறு நிலை" (தொல். கற். 6) என்பதன்பாற் படுத்துக.

    
குணகடல் முகந்து குடக்கேர்பு இருளி 
    
மண்திணி ஞாலம் விளங்கக் கம்மியர் 
    
செம்புசொரி பானையின் மின்னிஎவ் வாயும் 
    
தன்தொழில் வாய்த்த இன்குரல் எழிலி 
5
தென்புல மருங்கிற் சென்றற் றாங்கு 
    
நெஞ்சம் அவர்வயின் சென்றன ஈண்டொழிந்து 
    
உண்டல் அளித்தென் உடம்பே விறற்போர் 
    
வெஞ்சின வேந்தன் பகையலைக் கலங்கி 
    
வாழ்வோர் போகிய பேரூர்ப் 
10
பாழ்காத் திருந்த தனிமகன் போன்றே. 

     (சொ - ள்.) குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி - கீழ் கடலிலே சென்றிறங்கி நீரை முகந்தெழுந்து மேல்பாலேகி யாங்கும் இருளடையும்படி இருண்டு; மண் திணி ஞாலம் விளங்க - அணுத்திணிந்த இவ்வுலகம் அவ் விருளினின்று புலப்படுமாறு; கம்மியர் செம்புப் பானை சொரியின் மின்னி - கருமகாரர் செம்பினாலே செய்த பானையைக் கடைந்தாற்போல மின்னி; எவ்வாயும் தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி - எங்கும் தனது பெய்யுந் தொழிலை மேற்கொண்ட இனிய இடி முழங்குதலாகிய குரலையுடைய மேகம்; தென்புல மருங்கின் சென்று அற்று ஆங்கு - அங்ஙனம் பெய்யுந் தொழில் முடிந்தவுடன் எழுந்து தென்பாலேகி யொழிந்தாற்போல; நெஞ்சம் ஈண்டு ஒழிந்து அவர் வயின் சென்று அன (ஒழிந்து) - என் நெஞ்சம் இங்கு வைகுவதொழிந்து அவரிடஞ் சென்று அங்கு வைகி அவ்வண்ணமே ஒழிந்து போனதனாலே; விறல் போர் வெம் சினவேந்தன் பகை அலைக் கலங்கி - வலிய போர் செய்யவல்ல வெய்ய சினத்தையுடைய பகைவேந்தனது படை அலைத்தலாலே கலங்கி; வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ் - ஊரில் வாழுங் குடிமக்கள் எல்லாம் குடியோடி அகன்றுவிட்ட பெரிய பாழ் நகரத்தை; காத்திருந்த தனி மகன் போன்று உண்டல் என் உடம்பு அளித்து - காவல் செய்திருந்த ஒரு தனி மகனைப் போன்று உண்ணுதலாலே என்னுடம்பு இங்குக் காக்கப்படுந் தன்மையதாயிராநின்றது; எ - று.

     (வி - ம்.) செம்புசொரிபானை - செம்பாற்செய்து கடைந்துவைத்த பானையுமாம். ஏர்பு - எழுச்சி. மண் - அணு. வாழ்வோர்போகியவூர்: பிற பெயரெஞ்ச நின்றது. இஃது ஆங்குநெஞ்சழிதல். ஏனை மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல். கைகோள் - இரண்டற்கும் பொது. கேட்போர் யாருமின்மையாலே தானே சொல்லி யாறுதல். பாழ்காத்திருந்த தனிமகனென்னும் அடைச்சிறப்பாலே இது பாடிய ஆசிரியர் தனிமகனெனப்பட்டார்போலும்.

     (பெரு - ரை.) நெஞ்சம் அவர்வயிற் சென்றென எனவும் பாடம். இப்பாடமே சிறந்ததாம். என் உடம்பு ஈண்டு ஒழிந்து உண்டல் அளித்து என இயைத்து நெஞ்சம் அவர்வயிற் சென்றதாக என் உடம்பு மட்டும் இங்குத் தங்கி உண்டியாலே பாதுகாக்கப்படுவ தொன்றாயிருக்கிறது எனப் பொருள் கோடல் சிறப்பாம்.

(153)