(து - ம்,) என்பது, இரவுக்குறிவந்த தலைவன் சிறைப்புறத்தானாக ஆற்றது ஏதங்கூறி இரவுக்குறி மறுத்து வரைவுடன்படுத்த வேண்டித் தோழி, தலைவியை நோக்கி 'ஏடீ, இம் மழை முழக்கத்தும் புலி முழக்கத்தும் அயர்ந்து தூங்காநின்றனை போலும்; இவ்விரவு அவர் வாராதிருப்பின் நல்லதாகும்; மலைநெறியை நினைக்குந்தோறும் என்னெஞ்சம் அங்கே இயங்கா நின்ற' தென்று சோர்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும் . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.
| கானமுங் கம்மென் றன்றே வானமும் |
| வரைகிழிப்பு அன்ன மையிருள் பரப்பிப் |
| பல்குரல் எழிலி பாடோ வாதே |
| மஞ்சுதவழ் இறும்பில் களிறுவலம் படுத்த |
5 | வெஞ்சின உழுவைப் பேழ்வாய் ஏற்றை |
| அஞ்சுதக உரறும் ஓசை கேளாது |
| துஞ்சுதி யோஇல தூவி லாட்டி |
| பேரஞர் பொருத புகர்படு நெஞ்சம் |
| நீரடு நெருப்பில் தணிய இன்றவர் |
10 | வாரா ராயினோ நன்றே சாரல் |
| விலங்குமலை யாராறு உள்ளுதொறும் |
| நிலம்பரந்து ஒழுகும்என் நிறையில் நெஞ்சே. |
(சொ - ள்.) இல தூ இல் ஆட்டி - ஏடீ! வலியிலாதாய்!; கானமும் கம் என்றன்று - காடு கம்மென்று ஒலியடங்குவதாயிற்று; வானமும் வரை கிழிப்பு அன்ன மை இருள் பரப்பி பல் குரல் எழிலி பாடு ஓவாது - ஆகாயமும் மலைமுழைபோன்ற கரிய இருளைப் பரப்பிப் பலவாய இடிமுழக்கத்தையுடைய மேகம் முழங்குவதும் நீங்குகின்றிலது; மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம்படுத்த வெஞ்சினம் பேழ்வாய் உழுவை ஏறு - மேகம் தவழும் குறுங்காட்டினிடத்திலே களிற்றை வலத்தே விழக் கொன்ற வெய்ய சினத்தையும் அகன்ற வாயையுமுடைய புலியேறு; அஞ்சுதக உரறும் - யாவரும் அஞ்சுமாறு முழங்காநிற்கும்; ஓசை கேளாது துஞ்சுதியோ - இவ்வோசையனைத்தையும் செவியில் ஏறட்டுக்கொள்ளாது நீ தூங்குகின்றனையோ? பேர் அஞர்பொருத புகர்படு நெஞ்சம் நீர் அடு நெருப்பில் தணிய - பெரிய துன்பம் வந்து மோதுதலானே குற்றப்பட்ட நெஞ்சத்தின் கொதிப்பானது நீர் பெய்த நெருப்புப் போலத் தணியும்படி; இன்று அவர் வாராராயின் நன்று - இன்று அவர் வாராது விட்டாலோ நல்லதாகும்; சாரல் விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும் - சாரலிலே குறுக்கிட்ட மலையின்கண்ணே செல்லுநெறியை நினையுந்தோறும்; நிறை இல் என்நெஞ்சு நிலம் பரந்து ஒழுகும் - நிலையில்லாத என் நெஞ்சமானது அந்த நிலத்தின்கண் பரந்து செல்லாநிற்கும்; யான் யாது செய்யமாட்டுவேன்? எ - று.
(வி - ம்.) கம்மெனல் : ஓசையடங்குங்குறிப்பு. கிழிப்பு - குகை; பிளப்புமாம். பாடு - ஓசை. இறும்பு - சிறுகாடு; மலையுமாம். வலம்படுத்தல் - வலப்புறத்து விழும்படி கொன்று சாய்த்தல். அடிபட்டபொழுது வலப்பக்கத்தில் விழுந்ததனையே புலிதின்னுமென்ப; "இடம்படின் மிசையாப் புலி" என்றார், (29) அகத்தினும். புகர் - குற்றம். இல-ஏடீ என்னும் விளிப் பெயர். "எவன் இல குறுமக ளியங்குதி" என்பது அகம்; (12): தூ - வன்மை. உரறுதல் - முழங்குதல். விலங்குதல் - குறுக்கிடுதல். இஃதழிவில் கூட்டத்தவன் புணர்வு மறுத்தல். வானமும் எழிலி பாடோவாதென்றது இடத்து நிகழ் பொருளின் றொழில் இடத்தின் மேலேற்றிக் கூறப்பட்டது.
அஞ்ச வேண்டுவழி யஞ்சா துறங்குதலாலே துஞ்சுதியோ வென்றாள். மெல்லியலாதலின், தூவிலாட்டியென்றதாம்.மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) மலை ஆர் ஆறு - மலைகளிடையே பொருந்திய வழியென்க. அவர் இத்தகைய இரவின் வருதல் எங்கட்குப் பெருந்துன்பமே நல்குவதாகின்றது. .ஆதலால் வருதலினும் வாராமையே நன்று என இரவுக் குறி மறுத்து வரைவுகடாவியபடியாம்.
(154)