திணை : நெய்தல்.

    துறை : (1) இஃது, இரண்டாங் கூட்டத்துத் தலைவியை எதிர்ப்பட்டுத் தலைவன் சொல்லியது.

     (து - ம்,) என்பது, இடந்தலைப்பாடுகொண்டு கூறுமாறு சென்று தலைமகளை வினாவிய தலைமகன் தன்னெஞ்சை நோக்கி, யான் இங்கு நின்றாளை ஏடீ, நின்றோய், நின்னை வணங்கி வினாவுகின்றேம்; நீதான் ஒரு தெய்வமகளோ பிறளொரு மடந்தையோ கூறாயென வினாவியபொழுது நகைதோன்றியது, கண்பனி பரந்தனவாதலின் முயங்குங்குறிப்புடைய மக்கட்பகுதியள் காணென மகிழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு,"மெய்தொட்டுப் பயிறல்" என்னும் நூற்பாவின்கண் வரும் "பொய்பாராட்டல்" (தொல். கள. 11) என்னும் விதிகொள்க.

    துறை :(2) உணர்ப்புவயின் வாரா ஊடற்கட் டலைவன் சொற்றதூஉமாம்.

     (து - ம்,) என்பது, பரத்தையிற்பிரிந்துறை காலை மனைவி பொறையுயிர்த்தமை வெள்ளணியா லறிந்து போந்து பள்ளியிடத்தானாகிய தலைமகன் ஆங்கு ஊடிய தலைமகளை இரந்துபணிந்து பலவாறுணர்த்தலும் உணராளாய் ஊடனீட அவ்வழி தலைமகன் தன்னெஞ்சைநோக்கி யான் இங்கு நின்றாளை 'நீ யார் நின்னை வணங்கி வினவாநின்றேம், நீதானொரு தெய்வமகளோ பிறளொரு மடந்தையோ' வென வினாயபொழுது நகையுங் கண்ணீருந் தோன்றின வாதலின் முயங்குங்குறிப்புடையள் காணென ஆற்றிக் கூறாநிற்பது.

     (இ - ம்) இதனைக், "கைவிடின் அச்சமும்" (தொல். கற். 5) என்னும் விதியினாற் கொள்க.

    
ஒள்ளிழை மகளிரொடு ஓரையும் ஆடாய் 
    
வள்ளிதழ் நெய்தல் தொடலையும் புனையாய் 
    
விரிபூங் கானல் ஒருசிறை நின்றோய் 
    
யாரை யோநின் தொழுதனம் வினவுதுங் 
5
கண்டோர் தண்டா நலத்தை தெண்டிரைப்  
    
பெருங்கடல் பரப்பின் அமர்ந்துறை அணங்கோ 
    
இருங்கழி மருங்கு நிலைபெற் றனையோ 
    
சொல்லினி மடந்தை என்றனென் அதனெதிர் 
    
முள்ளெயிற்று முறுவலுந் திறந்தன 
10
பல்லித ழுண்கணும் பரந்தவால் பனியே. 

     (சொ - ள்.) ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய் - ஒள்ளிய அணிகலன்களையுடைய ஆயமகளிருடன் கூடிப் பாவையைக்கொண்டு விளையாடும் விளையாட்டையும் ஆடாது; வள் இதழ் நெய்தல் தொடலையும் புனையாய் - பெரிய இதழையுடைய நெய்தன் மலர் மாலையையும் புனையாது; விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய் - விரிந்த பூவையுடைய கடலருகுள்ள சோலையின்கண்ணே ஒரு பானின்ற மாதே!; கண்டோர் தண்டா நலத்தை - நோக்கினோராலே கெடாத நலத்தினையுடையாய்!, மடந்தை நின் தொழுதனம் வினவுதும் - மடந்தாய்! நின்னை வணங்கி வினவுகின்றேம்; தெள் திரைப் பெருங்கடல் பரப்பின்கண் அமர்ந்து உறை அணங்கோ - தெளிந்த அலையையுடைய பெரிய கடற் பரப்பின்கண் விரும்பியுறைகின்ற நீரரமகளோ?; இருங் கழி மருங்கு நிலை பெற்றனையோ - கரிய கழியருகிலுள்ள இங்கு நிலைமைகெண்டுறைகின்ற வொருமாதோ?; யாரையோ இனி சொல் என்றனென் - வேறியாவளோ இப்பொழுது சொல்லுவாயாக! என்று கூறினேன், அங்ஙனம் கூறுதலும்; அதன் எதிர் முள் எயிற்று முறுவலுந் திறந்தன - அதற்கு விடையாக முட்போன்ற கூரிய பற்களினின்று நகையுமுண்டாயின; பல் இதழ் உண்கணும் பனிபரந்த - ஈரிமைகளையுடைய மையுண்ட கண்களும் பனி பரந்தன; ஆதலின் யாம் முன்பு முயங்கிய இவளே இப்பொழுதும் அம் முயங்கற் குறிப்புடையள்காண்; எ - று.

     (வி - ம்.) ஓரை - பஞ்சாய்க்கோரையாலே பாவை செய்து வைத்து விளையாட்டயர்வது. வள்ளிதழ் - பெரிய இதழ். தொடலை - மாலை. கண்டோர் தண்டா நலன் - பார்ப்போராலே கெடாத நலன், கண்ணெச்சில்; (திருட்டிதோடம்.) பல்லிதழ், இதழ் - இமை.

    தொழுதனம் வினவுதுமென்றதனாலே தலைமகன் இளிவந்தொழுகுதல் காரணத்தோடு முயங்குதற்குறிப்பு முணர்த்தவேண்டி நகையெழுதலின் முறுவல் திறந்தமை கூறினான். பெருநாணினளாதலின் அதனாலாய அச்சத்தாலே கண்ணீர் தோன்றியவாறு, மெய்ப்பாடு, முறுவல் திறந்தமை ஐந்தாங்காலத்து மெய்ப்பாட்டின் கண்ணதாகிய கண்ட வழியுவத்தலின் பாற்படுத்தின் அதுதானும் புறத்தார்க்குப் புலனாகி அலரெழக் கண்டு இற்செறிக்கப்பட்டபின்னர் ஒருநாட் கண்டவழிக் கழியுவகைமீதூர்தலின் நிகழ்வதாகலின் ஈண்டைக்கேலாததாகும்; அதனைக்கடியின் இரண்டாங் கூட்டத்துக்கு நிகழ்ச்சி ஆசிரியர் கூறிற்றிலராதலின் முதன்மைப்பாட்டின் கண்ணதாகிய நகுநய மறைத்தலின் ஒருபுடையொப்புமைநோக்கி அதன்பாற் படுத்துக. பயன் - தலைமகன் தேறல்.

    (2) (உரை ஒருபுடைஒக்கும்) ஒரேகாலத்து நகையும் அழுகையும் தோன்றுதலின் முயங்குதற்கண் விருப்பும் பரத்தையிற்பிரிந்ததனால் அழுகையும் உடனுண்டாயதெனக் கொள்க. மெய்ப்பாடு - உவகை. பயன் - வாயில்பெற்றுய்தல்.

     (பெரு - ரை.) இச் செய்யுளை ஆசிரியர் இளம்பூரண அடிகளார் இயற்கைப் புணர்ச்சிக்கண் "காமக் குறிப்புண்மை அறிந்த தலைமகன் வேட்கையாற் சார நினைத்தவழித் தலைமகளும் வேட்கைக் குறிப்புடையளாயினும் குலத்தின் வழிவந்த இயற்கையன்மையான் நாணமும் அச்சமும் மீதூர அக்குறிப்பில்லாதாரைப் போல் நின்றவழி அவளை முன்னிலைப் படுத்துக் கூறிய" தென்று கொள்வர். எனவே இதனை "முன்னிலையாக்கல்" (தொல். கள. 10) என்னுந் துறைக்கு எடுத்துக் காட்டினர்.

    கண்டோர் தண்டா நலத்தை என்பதற்குக் கண்டோர் கண்டு கண்டு அமையாமைக்குக் காரணமான பேரழகுடைய என்றுபொருள் கோடல் நன்று.

(155)