(து - ம்,) என்பது, இரவுக்குறிவந்த தலைவனை வரைவுடன்படுத்தவேண்டி அவனை நோக்கி, நீ இரவு வராநின்றனை; எமர்சீற்றதிற்பெரியர்; மழை வந் திருண்டதுகாண்; யாம் நாளைமுதலாகத் தினைப்புனங்காவலுக்குச் செல்லுகிற்பேம்; அதனால் நமது துன்பந்தீர ஆண்டுப் பகற்பொழுது வருவாயாகவென இரவுக்குறிமறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "களனும் பொழுதும் . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்"(தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| நீயே, அடியறிந்து ஒதுங்கா ஆரிருள் வந்தெம் |
| கடியுடை வியனகர்க் காவல் நீவியும் |
| பேரன் பினையே பெருங்கல் நாட |
| யாமே, நின்னுநின் மலையும் பாடிப் பன்னாள் |
5 | சிறுதினை காக்குவஞ் சேறும் அதனால் |
| பகல்வந் தீமோ பல்படர் அகல |
| எருவை நீடிய பெருவரைச் சிறுகுடி |
| அரியல் ஆர்ந்தவ ராயினும் பெரியர் |
| பாடிமிழ் விடர்முகை முழங்க |
10 | ஆடுமழை இறுத்ததெங் கோடுயர் குன்றே. |
(சொ - ள்.) பெருங்கல் நாட நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து - பெரிய மலை நாடனே! நீ தானும் இரவில் வருநெறி தவறின் அந் நெறியை மெல்ல அடி வைத்து அறிந்து ஒதுங்கிச் செல்லுதற்குங் கூடாத நிரம்பிய இருட்பொழுதினில் வந்து; கடி உடை எம் வியன் நகர்க் காவல்நீவியும் - காவலையுடைய எமது அகன்ற மாளிகையின் உள்ளின்கண்ணதாகிய காவலையுங் கடந்து வந்து கூடி; பேரன்பினையே - பெரிய அன்பினையுடையையாயிராநின்றனை; எருவை நீடிய பெரு வரைச் சிறுகுடி அரியல் ஆர்ந்தனர் ஆயினும் பெரியர் - கொறுக்கச்சி முளைத்தடர்ந்த பெரிய மலைப்பக்கத்துள்ள சிறுகுடியின்கண் எமர் கள்ளை மிகுதியாகவே பருகி மயங்கினவராயினும் அவர் தாம் வெகுளியில் மிகப் பெரியவராயிராநின்றார்; ஆடு மழை பாடு இமிழ் விடர் முகை முழங்க எம் கோடு உயர் குன்றம் இறுத்தது - அன்றியும் இயங்குகின்ற மேகம் தான் முழங்குகின்ற இடியினொலி பிளவுபட்ட மலைமுழையின்கண்ணும் எதிரொலி முழங்கும்படி எமது கொடுமுடியுயர்ந்த குன்றின்கண்ணே வந்து தங்கியிராநின்றது; இரவின் கண்ணே முயங்கி நலனுகருமாறு கருதி வாராதே கொள்!, யாம் நின்னும் நின்மலையும் பாடி பல்நாள் சிறுதினை காக்குவம் சேறும் - மற்றும் யாம் நின்னையும் நின்மலையையும் பாடிப் பற்பல நாளளவும் சிறிய தினைப்புனத்தைக் காக்கும் பொருட்டு நாளையே செல்லாநிற்பேம்; அதனால் பல்படர் அகல பகல்வந்தீம் - அதனால்எம்முடைய பலவாய துன்பமெல்லாம் தீரும்படியாக நீ பகற்பொழுதிலே ஆங்கு வந்து முயங்குவாயாக ! எ - று.
(வி - ம்.) எருவை - கொறுக்கச்சி; கொறுக்காத்தட்டை யென வழங்கப்படுகிறது. அரியல் - கள். விடர் - மலைப்பிளப்பு. முகை - முழை; குகை. கோடு - கொடுமுடி. நீவியும் என்னும் எச்சம் அன்பினையென்னுங் குறிப்பு முற்றினாக்கத்தைக் கொண்டது.
தங்களைப் பிரிதற்கு அவன் உள்ளம் பொருந்தாமையைப் பேரன்பினையென்றதனாலும் அவனைப் பிரிதற்குத் தங்கள் உள்ளம் பொருந்தாமையை நின்னும் நின்மலையும் பாடி யென்றதனாலுங் குறிப்பித்தாள். எமர் சீற்றத்திற் பெரியரெனவே அவர் ஏதமிழைப்பரென்றஞ்சி யச்சுறுத்தி அச்சமிக்க வழி இன்பஞ்சிறவாதாகலின் வரற்பாலையல்லையென் றறிவுறுத்தினாள். ஆரிருளும் காவலும் மழைமிகுதியுங் கூறியது இரவுக்குறி மறுத்ததாயிற்று. முன்பு பகற்குறி இடையீடு பட்டமை யானும் இரவுக்குறி மறுத்தமையானும் வரைவொடுபுகுவாயாக என்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) ஆடுமழை முழங்க எங்குன்று இறுத்தது என்றது, ஒரோவழி மழைமிகின் யாங்கள் தினைகாத்தற்கு வாராதிருத்தலும் கூடும் என அப் பகற் குறியையும் மறுத்தபடியாம். எனவே இவ் வெல்லாப் படரும் அகல நீ வரைந்து கோடலே வழியாம் என வரைவு கடாவியவாறு மாயிற்றென்க. ஒதுங்கா-ஒதுங்கி எனினுமாம்.
(156)