(து - ம்,) என்பது, இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாகிய தலைவன் கேட்டுத் தன்னாலே தலைவியுந் தோழியும் படுந் துன்பமறிந்து விரைய வரையுமாற்றானே தோழி தலைவியை நெருங்கி, 'மலைநாடன் வருநெறியை யான்காணா திருப்பினும் அது மறைந்து வந்து என்னையும் என் கண்ணையும் துன்பஞ் செய்வ தொன்றாயிராநின்றதென அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| அம்ம வாழி தோழி நம்வயின் |
| யானோ காணேன் அதுதான் கரந்தே |
| கல்லதர் மன்னுங் கான்கொல் லும்மே |
| கனையிருள் மன்னுங் கண்கொல் லும்மே |
5 | விடர்முகைச் செறிந்த வெஞ்சின இரும்புலி |
| புகர்முக வேழம் புலம்பத் தாக்கிக் |
| குருதி பருகிய கொழுங்கவுள் கயவாய் |
| வேங்கை முதலொடு துடைக்கும் |
| ஓங்குமலை நாடன் வரூஉம் ஆறே. |
(சொ - ள்.) தோழி வாழி அம்ம - தோழீ! வாழி! யான் கூறுகின்ற இதனைக் கேட்பாயாக!; விடர் முகைச் செறிந்த வெம்சின இரும் புலி புகர் முக வேழம் புலம்பத் தாக்கி - மலையின்கண்ணுள்ள பிளந்த முழையிலே பதுங்கியிருந்த வெய்ய சினத்தையுடைய கரிய புலியானது புள்ளிகள் அமைந்த முகத்தையுடைய யானை வருந்தும்படி மோதி; குருதி பருகிய கொழுங்கவுள் கயவாய் வேங்கை முதலொடு துடைக்கும் - அதன் இரத்தத்தைப் பருகிய கொழுவிய கவுளையுடைய பெரிய வாயை வேங்கையின் அடி மரத்தில் உரிஞ்சித் துடைக்கின்ற; ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறு யான் காணேன் - உயர்ந்த மலைநாடன் வருகிற நெறியை இன்றளவும் நான் கண்டதேயில்லை; அதுதான் கரந்து கல்லதர் மன்னும் கான் கொல்லும் - அங்ஙனமிருந்தும் அந் நெறியானது மறைவாக என்பால் வந்து மலைவழியிலே பொருந்தியிருக்கின்ற காட்டின் வடிவங்கொண்டு என்முன் நின்று இதுதான் அவன் வருகின்ற காடென்பதனை நீ காண் என்று என்னைக் கொல்லாநிற்கும்; கனை இருள் மன்னும் கண் கொல்லும் - மிக்க இருள் வடிவமாய் நின்று இதுதான் அவன் வருகின்ற இருட்பொழுதென்று என் கண்களைக் கொல்லா நிற்கும்; இத்தகைய காட்டின்கண் இருட்பொழுதில் அவன் வருவதனைக் குறித்து யான் யாது செய்யமாட்டுவேன் ? எ - று.
(வி - ம்.) கனை - மிகுதி. கயவாய் - பெரிய வாய்.
நெறியும் அதிலுள்ள காடும் தன்னைக் கொல்லாநிற்குமென்றது அத்தகைய கொடிய நெறியின்கணுள்ள காட்டில் வரற்பாலனல்லனென இரவுக்குறி மறுத்து வரைவுடன்படுத்தியதாயிற்று. இஃது அவன் புணர்வு மறுத்தல்.
உள்ளுறை :- புலி வேழத்தின் குருதிபருகி வேங்கமைரத்திலே சென்று துடைக்குமென்றது, ஊராரெடுக்கும் அலரானது என்னை வருத்தி அன்னைகாதினுஞ் சென்றுவிட்டதென்பதாம். மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் - இரவுக்குறிமறுத்து வரைவுகடாதல்.
(பெரு - ரை.) 'கல் அதர் மன்னும் கால் கொல்லும்' என்றும் பாடம். இப் பாடமே சிறந்தது. நாடன் வரூஉம் ஆறு யான் காணேன் ஆயினும் அஃது என் புறக்கண்ணிற்குக் கரந்து அகக்கண்ணிற்குத் தோன்றிக் கல்லதராய்க் கால்கொல்லும்; கனையிருளாய்க் கண்கொல்லும் என்றாள் என்க. எனவே அவன் வரும் நெறியின் ஏதநினைந்து யான் பெரிதும் வருந்துகின்றேன் என்றாளாயிற்று மன்னும் உம்மும் அசைகள். புலி . . . . . . துடைக்கும் என்றது - வெளிப்படையில் நெறியின் ஏதம் கூறியவாறுமாயிற்று.
(158)