திணை : நெய்தல்.

    துறை : இது, தலைவியின் ஆற்றாமையும் உலகியலுங் கூறி வரைவு கடாயது.

     (து - ம்,) என்பது, பகற்குறிவந்தொழுகுந் தலைமகனைத் தோழி வரைவுகடாவுவாளாய், 'யாம் பகற்பொழுதினை இங்குப்போக்கி மாலையிலே பாக்கம் போகுவமாயின் ஆங்கு வருவதற்குத் தலைவி வருந்தாநிற்கு'மென அவளது ஆற்றாமையும், 'யாமும் வருதியென்றழைக்கும் வலியிலேமாதலின் நினது தேர் எம் பாக்கத்தார் மகிழ்ந்து கொண்டாடும்படி ஆங்குவந்து தங்குவதாக' என்று தலைவன் தங்கும் வழி எதிர்கொண்டு தமர் வருவிருந்தயர்வதாகிய உலகியலுந் தெளியக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியாற் கொள்க.

    
மணிதுணிந்து அன்ன மாயிரும் பரப்பின் 
    
உரவுத்திரை கெழீஇய பூமலி பெருந்துறை 
    
நிலவுக்குவித்து அன்ன மோட்டுமணல் இடிகரைக் 
    
கோடுதுணர்ந்து அன்ன குருகொழுக்கு எண்ணி 
5
எல்லை கழிப்பினம் ஆயின் மெல்ல 
    
வளிசீத்து வரித்த புன்னை முன்றில் 
    
கொழுமீன் ஆர்கைச் செழுநகர்ச் செலீஇய 
    
எழுவெனின் அவளும் ஒல்லாள் யாமும் 
    
ஒழியென வல்ல மாயினம் யாமத்து 
10
உடைதிரை ஒலியின் துஞ்சு மலிகடல் 
    
சில்குடிப் பாக்கங் கல்லென 
    
அல்குவது அகநீ அமர்ந்த தேரே, 

     (சொ - ள்.) மணி துணிந்து அன்ன மா இரும் பரப்பின் உரவுத் திரை கெழீ இய - நீலமணி களங்கமறத் தெளிந்திருந்தாற்போன்ற கரிய பெரிய கடனீர்ப் பரப்பின் வலிய அலையோங்கி மோதுகின்ற; பூ மலி பெருந் துறை நிலவுக் குவித்து அன்ன மோட்டு மணல் இடி கரை - புன்னை மலர் மிக்க பெரிய துறையின் கண்ணே நிலவைக் குவித்து வைத்தாற் போன்ற உயர்ச்சியையுடைய மணன்மேடு இடிந்து சரிந்த கரையின்கண்ணே நின்று; கோடு துணர்ந்து அன்ன குருகு ஒழுக்கு எண்ணி எல்லை கழிப்பினம் ஆயின் - சங்குகளைக் குலையாகத் தொடுத்தாற் போன்ற குருகுகளின் வரிசையை எண்ணிப் பகற்பொழுதை நின்னொடு போக்குவேமாயின்; மெல்ல வளி சீத்து வரித்த புன்னை முன்றில் - மெல்லக் காற்றடித்துப் பெருக்கிக் கோலஞ் செய்த புன்னைமரம் பொருந்திய வாயிலையுடைய; கொழுமீன் ஆர்கைச் செழுநகர்ச் செலீஇய எழு எனின் - கொழுவிய மீனுணவையுடைய வளப்பமிக்க மனையத்துச் செல்லும்பொருட்டு நீ எழுந்துவருவாயாக! என்றால்; அவளும் ஒல்லாள் - அதற்கு அவள் உடன்படுவாளல்லள்; யாமும் ஒழி என அல்லம் ஆயினம் - யாமும் அத்தலைவியை நோக்கி நீ கொண்ட உள்ளக் கருத்தை ஒழிப்பாயாக! என்று கூறும் தகுதிப்பாடுடையேமல்லேம்; ஆதலால், யாமத்து உடை திரை ஒலியில் துஞ்சும் மலி கடல் சில்குடிப் பாக்கம் - சேர்ப்பனே! நடுயாமத்து முரிந்து விழுகின்ற அலையின் ஒலியைக் கேட்டும் துயிலாநின்ற நிரம்பிய கடற்கரையின் கண்ணதாகிய சிலவாகிய குடியிருப்புக்களையுடைய எம்மூரில்; கல் என நீ அமர்ந்த தேர் அல்குவது ஆக - யாவரும் எதிர்கொள்ளும் மகிழ்ச்சியாலே கல்லென்னும் ஒலியுண்டாம்படி நீ விரும்பிய தேர் தங்குவதாக! எ - று.

     (வி - ம்.) துணிவு - தெளிவு. வரித்தல் - கோலஞ்செய்தல்.நீ போயபின் இங்கு நின்னொடு முயங்கிய இடனையும், ஆடியதுறையையும் நோக்கி மெலிந்திரங்காநிற்குமாதலி னெழுகவெனின்ஒல்லாளென்றாள். தான் குற்றேவல் மகளாதலின், அவள் கருதியவழி யொழுகுமியல்பினேனென்பாள், ஒழியெனவல்லமாயினமென்றாள், நீ பாக்கம்புகுந்தனை யென்பதறிவளேல் இரவிடைமுயங்கி மகிழ்தலுமாகுமென்றுகருதி எழுகவெனுமுன் வருவளாதலின் தேர் பாக்கத்து அல்குவதாக என்றாள். எதிர்கொள்ளுமாறு வருதல் வரைந்தாலன்றி இன்மையின் வரைவுகடாயதாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) 'உரவுத்திரை கொழீஇய' என்றும் பாடம். ஒழி என அல்லமாயினம் எனக் கண்ணழித்துக் கொள்க.

(159)