திணை : பாலை.

     துறை : இது, பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை நெருங்கித் தலைவன் செலவழுங்கியது.

     (து - ம்.) என்பது, தலைவியை விட்டுப் பிரிந்து சென்று பொருளீட்டும்படி கருதி முயன்ற தன்னெஞ்சினைத் தலைவன் நோக்கி யான் இவளின் கண்ணாற் கட்டுண்டேன்; இவ்வின்பத்தினுங் காட்டிற் பொருள்சிறவா; அப்பொருள் எங்ஙனமாயினுமாக; இவ்விரண்டினையுமாராய்ந்து சிறந்தது ஒன்றனை நீ யெய்துதற்குரியை எனக்கூறி இல்லத் தழுங்கா நிற்பது. கடைக்கூட்டல் - ஒருப்படுத்தல்.

     (இ - ம்.) இதற்குக் "கரணத்தினமைந்து முடிந்த காலை" (தொல்-கற்- 5) என்னும் நூற்பாவின்கண் 'வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்' என்னும் விதி கொள்க.

    
புணரின் புணராது பொருளே பொருள்வயிற்  
    
பிரியின் புணராது புணர்வே யாயிடைச்  
    
சேர்பினுஞ் செல்லா யாயினு நல்லதற்  
    
குரியை வாழியென் நெஞ்சே பொருளே 
5
வாடாப் பூவின் பொய்கை நாப்பண்  
    
ஓடுமீன் வழியிற் கெடுவ யானே 
    
விழுநீர் வியலகந் தூணி யாக 
    
எழுமா ணளக்கும் விழுநெதி பெறினுங் 

    (சொ - ள்.) என் நெஞ்சே வாழிய - என் நெஞ்சமே ! நெடுங்காலம் வாழ்வாயாக!; பொருள் புணரில் புணராது - நீ இப்பொழுது கருதிய பொருளோ யாம் தலைவியைப் புணர்ந்து இல்லத்துத் தங்கிய வழி அடையப் பெறுவதொன்றன்று; பொருள்வயின் பிரியின் புணர்வு புணராது - இதனைவிட்டுப் பொருள்வயிற் பிரிந்தாலோ இவளைப் புணரும் புணர்ச்சி இனி அடையப்பெறுவதொன்றன்று; ஆயிடை சேர்ப்பினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு உரியை - ஆதலின் இவ்விரண்டினையுஞ் சீர்தூக்கிப் பொருள்வயிற் பிரிந்தாயானாலும் பிரியாதிவ்வழி யிருந்தாயானாலும் இவற்றுள் நல்லதொரு காரியத்தைச் செய்தற்குரியை ஆவாய்; பொருள் வாடாப் பூவின் பொய்கை நாப்பண் ஓடுமீன் வழியின் கெடுவ - ஆயினும் யான் அறிந்த அளவில் பொருள்கள் வாடாத மலரையுடைய பொய்கையிடத்து ஓடுகின்ற மீன் செல்லும் நெறியே போலத் தாமிருந்த விடமும் தெரியாமற் கெடுவனகாண்; யானே விழுநீர்வியல் அகம் தூணி ஆக எழுமாண் அளக்கும் விழுநெதி பெறினும்-யானோவெனில் பெரிய கடல் சூழ்ந்த அகன்ற நிலனே அளக்கு மரக்காலாகக் கொண்டு ஏழு மரக்கால் வரையில் மாட்சிமைப்பட அளக்கத்தக்க பெரிய நிதியைப் பெறுவதாயினும், அந்நிதியை விரும்பேனாகி; கனம் குழைக்கு அமர்த்த சே அரி மழைக்கண் அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனன்-இக் கனவிய குழையையுடையாளுடைய மாறுபட்ட செவ்வரி பரந்த குளிர்ச்சியையுடைய கண்கள் பொருந்தி இனிதாக நோக்கும் நோக்கத்தாற் செகுக்கப்பட்டேனாதலின் நின்னொடு மோதற்கு வாரேன்காண்!; பொருள் ஏனைய ஆகுக வாழிய - இனி அப்பொருள் எத்தன்மையவாயினும் ஆகுக! அவை போற்றுவார்மாட்டு வாழ்வனவாகுக! எ-று.

    (வி - ம்.) தூணி - தானியம் முதலியவற்றை யளக்குங் கருவி; மரக்கால். நெதி - செல்வம். செகுத்தல் - அழித்தல்; ஈண்டு ஆற்றலழியப் பெறுதல், கனங்குழை: அன்மொழி: கனங்குழைக்கு; உருபு மயக்கம் புணர்ச்சியில் வெறுப்படையாத இளமை முழுதும் இன்பம் நுகர்ந்திருப்பின் முதுமையிற் பொருளீட்ட இயையாதென்பான், பொருளே புணராதெனவும் பிரியின் இவள் இறந்துபடுதல் திண்ணமாதலின் இனிப் புணர்ச்சியே யெய்தப் பெறாதெனவுங் கூறிப் பின்னர்ப் பொருள் நிலையாமையை மீனொடு நெறிபோலக் கெடுமென உவமையாலெடுத்துக்காட்டி, நல்லதற்குரியையெனக் குறிப்பால் இன்பத்தின் கண்ணே படுத்தானாம். மெய்ப்பாடு - பிறன்கண் தோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - செலவழுங்குதல்.

     (பெரு - ரை.) செல்லினும் செல்லாயாயினும் என்றும், செகுத்தனென், என்றும் பாடம். யாம் பிரியின் இவள் பிரிவாற்றாமையான் இறந்துபடுதல் ஒருதலை என்பது தோன்றப் பொருள் வயிற்பிரியில் புணர்வு புணராது என்றான்.

(16)