(து - ம்,) என்பது, பாங்கற்கூட்டத்துக், கற்றறிபாங்கன் தலைவனை 'நீ ஒருமடமகளாலே நின்னுள்ளமழிதலின் நினக்கு நயனும், நண்பும், நாணும், பயனும் பண்பும், பிறவுமமைந்திலவாலோ' வென்றாற்கு அவன் 'என்னெஞ்சினுள்ளாளாகிய இவ்வொருத்தியினது கண்ணைநோக்குமுன் நீ கூறியவெல்லாம் உடையேனாயிருந்தேன் கா'ணென அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும்" (தொல். கள. 11) என்னும் விதிகொள்க.
| நயனும் நண்பும் நாணும்நன்கு உடைமையும் |
| பயனும் பண்பும் பாடறிந் தொழுகலும் |
| 1நும்மினும் உடையேன் மன்னே கம்மென |
| எதிர்த்த தித்தி ஏரிள வனமுலை |
5 | விதிர்த்துவிட் டன்ன அம்நுண் சுணங்கின் |
| ஐம்பால் வகுத்த கூந்தல் செம்பொன் |
| திருநுதற் பொலிந்த தேம்பாய் ஓதி |
| முதுநீர் இலஞ்சி பூத்த குவளை |
| எதிர்மலர்ப் பிணையல் அன்னவிவள் |
10 | அரிமதர் மழைக்கண் காணா ஊங்கே. |
(சொ - ள்.) (கம்மென?) எதிர்த்த தித்தி ஏர் இள வனமுலை விதிர்த்துவிட்டு அன்ன அம் நுண் சுணங்கின் - மேன்மேலே தோன்றிய தித்தியையும் எழுச்சியையுடைய இளைய அழகிய கொங்கையின்மேலே அள்ளித் தெளித்தாற் போன்ற அழகிய நுண்ணிய தேமலையும்; ஐம்பால் வகுத்த செம்பொன் திருநுதல் பொலிந்த தேம் பாய் கூந்தல் ஓதி இவள் - ஐம் பகுதியாகப் பகுக்கப்பட்ட சிவந்த விளங்கிய நெற்றிமேலே பொலிவு பெற்ற தேன்பரவிய கூந்தலாகிய ஓதியையும் உடைய இவளுடைய; முதுநீர் இலஞ்சி பூத்த குவளை எதிர் மலர்ப் பிணையல் அன்ன அரிமதர் மழைக்கண் காணா ஊங்கு - நாட்பட்ட நீர் பொருந்திய பொய்கையிலே மலர்ந்த குவளை மலரை ஒன்றோடொன்று எதிர்எதிர் வைத்துத் தொடுத்தாற் போன்ற செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ச்சியையுடைய கண்ணையும் யான் காண்பதன்முன் உவ்விடத்தே; நயனும் - யாருடனும் விளங்கின கலந்த உறவையும், நண்பும் - சுற்றந் தழுவலும் பகைவரை வசித்தலுமாகிய இரு வகை நட்பையும்; நாணும் நன்கு உடைமையும் - தன்னோடொவ்வாத தாழ்ந்தார்மாட்டு ஒன்றும் இரவாதவாறு பெற்ற நாணம் நன்றாகவுடைமையையும்; பயனும் - பிறர் இரந்தவழி நன்னெறியிலே கரவாமலீயும் கொடையையும்; பண்பும் - தீயசெயல் கண்டவிடத்து அச் செயலில் உள்ளஞ் செல்லாதவாறு மீட்டு நன்னெறிக்கண்ணே நிறுத்தும் பண்பையும்; பாடு அறிந்து ஒழுகலும் - உலகவொழுக்கமறிந்து ஒழுகுவதனையும்; நும்மினும் உடையேன் மன் - நும்மினுங்காட்டில் ஆராய்ந்து அவற்றை யானுடையனாகியிருந்தேன்; இப்பொழுது இவள் கண்ணை நோக்கிய வழி அவை யாவும் என்மாட்டு அவ்வண்ணம் இல்லையாகிக் கழிந்து வேறு வண்ணமாயுண்டாயின; இங்ஙனம் வேறுவகை எய்தியபின் நீ இரங்கியாவதென்னை கொலாம்; எ - று.
(வி - ம்.) மன் - கழிவு. விதிர்த்தல் - உதிர்த்தல். கூந்தலோதி: இருபெயரொட்டு, இவள் என்றது தன்னுள்ளத்திடத்தாளென்பதைச் சுட்டியது. தித்தி - வயிற்றின்மேலே தோன்றுவது. தேமல் - கொங்கை முதலியவற்றிலே தோன்றுவது.
அவை யாவும் வேறுவண்ணமாயுண்டாயினவென்றான். வேறாயவாறு:- இனி இவளையன்றிப் பிறருறவு இன்பஞ்செய்யாமையின் அவ்வுறவு வேண்டாமை, இது - நயன். இருவகை நட்பும் அவண்மாட்டன்றியின்மை, இது - நண்பு. தாழ்ந்தபிறப்பாய பெண்பால்மாட்டிரத்தற்குத் துணிதலாலே தான் கோடற்குரிய நாணமின்மை, இது - நாண். பிறப்பாலன்றி இவள் விரும்பின் தன் உயிரையுங் கொடுக்குங் கொடைமை, இது - பயன். களவு தீதென்றறிந்துவைத்தும் அவ்வழியிலே யொழுகும் நன்மக்கட்பண்பின்மை, இது - பண்பு. உலகவொழுக்கம் அறிந்துவைத்தும் அதனைக் கைவிட்டு இணைவிழைச்சு மேற்கொண்டுழக்குந்தன்மை; இது - பாடறிந்தொழுகல். மெய்ப்பாடு - அழுகை. பயன் - ஆற்றாமையுரைத்தல்.
(பெரு - ரை.) நயன் - ஒப்புரவறிந்து ஒழுகும் ஒழுக்கம் எனல் நன்று. 'தாழ்ந்த பிறப்பாய பெண்பால்' எனவரும் விளக்கம் பிழைபட்ட கருத்துடையதென்க. நாணம் - பழிக்கு நாணுதலுடைமை நன்குடைமை என்பதனை நயன் முதலிய அறுவகைப் பண்பிற்குந் தனித்தனி கொள்க.நீ கண்டிலை, கண்டாயாயின் நின்னிலையும் இங்ஙனமேயாம் என்பது குறிப்பென்க. கம்மென உடையேன் என மாறி அமைதியாக உடையேன் என்க. கம்மென என்றது அமைதிக் குறிப்பு. "நும்மினும் அறிகுவன்" என்றும் பாடம்.
(160)
(பாடம்) 1. | நும்மினும் அறிகுவேன். |