163. . . . . . . . . . . . . . . .
    திணை : நெய்தல்.

     துறை : இது, வரைவுமலிந்து சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைமகன் வரைந்துகொள்ளும் வண்ணம் வருகின்றதனை யறிந்த தோழி, கழிபேருவகையளாய்த் தலைவியை நெருங்கி 'நம் துறைவனுடைய குதிரைகள் நாள்தோறும் வந்துவந்தலைதலால் அவற்றை நோக்கி என்னெஞ்சம் வருந்தாநிற்கும்: அது கழிந்தது; இனி மணம்புரிதல் காரணமாக அவற்றுக்குத் துன்பமின்மையால் அவை இளைப்பொழிவனவாக'வென்று மாவின் மேல்வைத்து மகிழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "ஆங்கு அதன் தன்மையின் வன்புறையுளப்பட" (தொல். கள. 23) என்பதன்கண் அமைத்துக்கொள்க.

    
உயிர்த்தன வாகுக அளிய நாளும் 
    
அயிர்த்துகள் முகந்த ஆனா ஊதையொடு 
    
எல்லியும் இரவும் என்னாது கல்லெனக் 
    
கறங்கிசை இனமணி கைபுணர்ந்து ஒலிப்ப 
5
நிலவுத்தவழ் மணற்கோடு ஏறி்ச்செல்வர 
    
இன்றென் நெஞ்சம் போலத் தொன்றுநனி 
    
வருந்துமன் அளிய தாமே பெருங்கடல் 
    
நீல்நிறப் புன்னைத் தமியொள் கைதை 
    
வானம் மூழ்கிய வயங்கொளி நெடுஞ்சுடர்க் 
10
கதிர்காய்ந்து எழுந்தகங் கனலி ஞாயிற்று 
    
வைகுறு வனப்பில் தோன்றும் 
    
கைதையங் கானல் துறைவன் மாவே. 

     (சொ - ள்.) பெருங்கடல் நீல் நிறப்புன்னைத் தமி ஒள்கைதை - பெரிய கடலருகிலுள்ள கரிய நிறத்தையுடைய புன்னையின் பக்கத்தவாகிய தனிமையினிருக்கின்ற தாழையின் ஒள்ளிய மடல்; நெடுஞ் சுடர்க் கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி வானம் மூழ்கிய வயங்கு ஒளி ஞாயிற்று வைகுறு வனப்பின் தோன்றும் - நெடிய சுடரையுடைய கதிரினாலே இருளைப்போக்கி யெழுந்து உள்ளே கொதித்து ஆகாயத்திலே சென்று விளங்கிய ஒளியையுடைய ஆதித்தனது பாடுசாய்கின்ற அலகுபோலத் தோன்றா நிற்கும்; கைதை அம்கானல் துறைவன் மா -அத்தகைய தாழஞ்சோலை சூழ்ந்த துறைவனுடைய குதிரைகள்; நாளும் அயிர்த்துகள் முகந்த ஆனா ஊதையொடு - நாள்தோறும் நுண்மணலாகிய துகளை முகந்தெழுந்த அமையாது வீசும் ஊதைக்காற்றின் கண்ணே; எல்லியும் இரவும் என்னாது கல்எனக் கறங்கு இசை இன மணி - இது பகலென்றும் இஃது இரவென்றும் கருதாமல் ஒலிக்கின்ற இனிய ஒலியையுடைய ஒரு நிகரவாகிய மணிகள்; கைபுணர்ந்து ஒலிப்ப நிலவுத்தவழ் மணல் கோடு ஏறிச் செல்வர - ஒருசேரக் கோத்துக் கழுத்திலே பூட்டப்பட்டுக் கல்லென வொலிக்கும்படியாகத் தன் வெண்மை நிறத்தினால் நிலவு பரந்தாற்போன்ற மணற் குன்றுகளிலே ஏறிச் செல்லுதலானே; என் நெஞ்சம் இன்றுபோலத் தொன்று நனி வருந்தும் மன் - என்னெஞ்சம் இப்பொழுதுபோல முன்பே மிகவும் வருந்தியதாயிருந்தது; அளியது ஆம் - அந் நெஞ்சின் தன்மையைக் காணின் மிக இரங்கத் தக்கதாகும்; அளிய உயிர்த்தன ஆகுக - இன்று துறைவன் வரைவொடு புகுந்ததன் காரணமாக அவனுடைய குதிரைகள் தாம் இனி நாள்தோறும் வருந்துவனவல்ல; ஆதலின் இரங்கத் தக்கனவாகிய அவைகள் இப்பொழுது களைப்பாறுவனவாக ! எ - று.

     (வி - ம்.) துறைவன்மா, என்னாது ஒலிப்பச் செல்வர என்னெஞ்சம் வருந்துமன்; அவைதாம் அளிய உயிர்த்தனவாகுக வெனக் கூட்டுக. கனலியென்னும் செய்தெனெச்சம் மூழ்கிய என்னும் பெயரெச்சத்தைக் கொண்டது. மூழ்கிய ஞாயிறென்க. புன்னை அத்தமனக் குன்றம்போலவும் தாழைமடல் கதிர்மழுங்கிய ஆதித்தன் போலவு மெனக்கொள்க. மன் - கழிவின் கண்ணது.

    இறைச்சி :- புன்னையுந் தாழையும் ஒருசேரவிருக்குந் துறைவனென்றது, அவ்விரண்டன் மணமும் ஒருசேரக் கமழ்ந்து விளங்குதல்போலத் தலைவனுந் தலைவியுமாகிய நீங்களிருவீரும் வதுவையயர்ந்தில்லற நிகழ்த்திப் புதல்வரையீன்று விளங்குவீரென்றதாம். ஏனையுவமம் ஆயினும் ஞாயிற்றுப்புத்தேளை உவமித்தலினிஃ துள்ளுறையன்மை யுணர்க. மெய்ப்பாடு - உவகை. பயன் - தலைவியை ஆற்றியுவப்பித்தல்.

     (பெரு - ரை.) உன்னுடைய துன்பங்களும் ஒழிய இனி நீயும் ஆற்றியிருப்பாயாக! என்பது குறிப்பெச்சம் என்க.

(163)