165. . . . . . . . . . . . . . . .
    திணை : குறிஞ்சி.

     துறை : (1) இது, நொதுமலர் வரையும் பருவத்துத் தோழி தலைவிக்கு அறத்தொடு நிலைபயப்பச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைவன் வரைவுநீட்டித்தலும் அயலோர் மணந்துகொள்ளுதற்குத் தூதுவிடக்கண்ட தோழி தலைவியை நோக்கிக் 'குன்றநாடன் இங்கு வரும்போதெல்லாம் நின்னருமையை அவனுக்குரைத்ததனால் நீ அவனை வெறுப்பதுபோல அவன் நின்னை வெறுத்திலனாதலின், வருந்தாது என்னை அன்னையர் வினவும்போது நீ என்பால் அறத்தொடு நின்றுவிடு; நின்னை விரும்பிய அயலவர்தூது மிகவருகின்றன; அவ் வேற்று வரைவு நமக்குத் தகுதியன்'றெனக் கூறுவதுடன் இறைச்சியாலே, தெய்வம் பொறைகொளச் செல்குவமெனவுங் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "என்பு நெகப் பிரிந்தோள் வழிச்சென்று. கடைஇ அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்", (தொல்-கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.

     துறை : (2) வரைவு மலிந்ததூஉமாம்.

     (து - ம்.) என்பது, தோழி தலைவியை நோக்கிக் 'குன்றநாடனுக்கு நின் அருமையை உணர்த்தலினால் அவன் வெறுப்பின்றி ஏற்றனன்; இடையே வேற்றுவரைவு நேரும்போலத் தோன்றுவதால் நீ அறத்தொடு நின்றுவிடு; நமக்கு இருமணங்கூடுதல் இயல்போவன்றெனத் தெளியக் கூறாநிற்பது. (உரை இரண்டற்கும் ஒக்கும்.)

     (இ - ம்.) இதற்கும் முற்கூறிய விதியே கொள்க.

கொள்கெனக் 
    
அமர்க்கண் ஆமான் அருநிறம் முள்காது 
    
பணைத்த பகழிப் போக்குநினைந்து கானவன் 
    
அணங்கொடு நின்றது மலைவான்  
    
கடவுள் ஓங்குவரை பேண்மார் வேட்டெழுந்து 
5
கிளையொடு மகிழும் குன்ற நாடன் 
    
அடைதருந் தோறும் அருமைதனக்கு உரைப்ப 
    
நப்புணர்வு இல்லா நயனி லோர்நட்பு 
    
அன்ன ஆகுக என்னான் 
    
ஒல்காது ஒழிமிகப் பல்கின தூதே. 

     (சொ - ள்.) அமர்கண் ஆமான் அருநிறம் முள்காது பணைத்த பகழிப் போக்கு நினைந்து - தோழீ! அமர்த்த கண்ணையுடைய ஆமானின் அரிய நெஞ்சிலே பாய்ந்து தங்காது குறிதவறி யொழிந்துபோன அம்பின் போக்கைக் கருதி; கானவன் மலை அணங்கொடு நின்றது வான் கொள்க என - கானவன் தன்னுள்ளத்து 'இம் மலையில் தெய்வம் வெளிப்போந்து நின்றது, மழை பெய்தாலோ அதன் வீறு தணியுமாதலின் மலையை மழைவந்து சூழ்க' என்று; கடவுள் ஓங்குவரை பேண்மார் வேட்டு எழுந்து கிளையொடு - அக் கடவுளை உயர்ந்த அம் மலைமேலே சென்று வழிபடும் பொருட்டு விரும்பி யெழுந்து தன் சுற்றத்தாரொடும் போய்; மகிழும் குன்றநாடன் - அதற்குப் பலியிட்டு நீர்வளாவிய பின்னர் அப் பலியை உண்ணாநிற்கும் மலைநாட்டினையுடைய நந்தலைவன்; அடைதருந்தோறும் அருமை தனக்கு உரைப்ப - இங்கு வரும்பொழுதெல்லாம் நினது அருமையை அவனுக்கு உரைத்தலால்; நம் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு அன்ன ஆகுக என்னான் - 'நம்மைப் புணர்தலில்லாத அன்பற்றவரது நட்பு அப்படியே அன்பில்லாமல் ஒழிவதாக' என்று நீ வெறுத்துக் கூறுவதுபோல அவன் கூறுகின்றிலன்; ஆதலின் நின்பால் மிக்க அன்புடைமையின் இன்னே வரையுமாறு விரைய வாராநிற்பன்; ஒல்காது ஒழி - அதன்முன் அன்னையர் என்னை வினவும் பொழுது நீ வருந்தாது என்பால் அறத்தொடு நிற்பாய் காண் !; தூது மிகப் பல்கின - அயலார் நின்னை மணஞ் செய்து கொள்ளுமாறு விடுக்கின்ற தூது மிகப் பலவாயின; வேற்று வரைவு நமக்குத் தகுதியன்று கண்டாய்; எ - று.

     (வி - ம்.) பணைத்தல் - தவறுதல். முள்கல் - தங்குதல். மழைபெய்தால் தெய்வவீறு தணியுமென்பது வழக்கு. இனி இதன் இறைச்சியாலே தெய்வம் பொறைகொளச் செல்குவமென்னும் அறத்தொடு நிற்றலின் உட்பகுதி யொன்று கூறியவண்ணம் வருமாறு:-

    இறைச்சி :- கானவர் ஆமான்மீது எய்த அம்புபிழைத்தலால் வரையிலே கடவுளின் குறையுண்டென்று பலியூட்டி மகிழாநிற்பரென்பது, நாம் குறித்துக்கூடிய தலைமகனைக் கூடவொட்டாது தவறுபடுத்தலால் அவ் ஊழ் அளிக்குந் தெய்வம் பொறைகொள்ளும் வண்ணம் அதற்குப் பலிக் கடன் கொடுக்கிற்பாமென்றதாம்.

     மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - அறத்தொடுநிற்றல்.

     (பெரு - ரை.) இனி, மலை அணங்கொடு நின்றது வான்கொள்க, எனக் கடவுள் பேண்மார் என இயைத்து, மலைநம்பால் வருத்தத்தோடு நின்றது ஆதலின் அவ்வருத்தம் தணிதற்கு அது மழையைப் பெறுவதாக என்று கருதி அம் மழை பெறும் பொருட்டுக் கடவுளைப் பேணற்கு என்று பொருள் கோடலுமாம். உரையின்கண் "வேற்றுவரைவு நமக்குத் தகுதியன்று கண்டாய்" என்று எழுதிய எச்சவுரை வேண்டா கூறலாதல் உணர்க.

    "நப்புணர்வு இல்லா நயனிலோர் நட்பு அன்னவாகுக!" என்றது தோழி தலைவி கூறியதனைக் கொண்டு கூறியபடியாம். இது தலைவியின் குறிப்புணர்ந்தன்றித் தான் அறத்தொடு நிற்றல் மரபன்மையின் இது மறைவெளிப்படுக்குங் காலம் ஆம் நின் கருத்தென்னை என வினவியபடியாம் என்க.

(165)