166. . . . . . . . . . . . . .
    திணை : பாலை.

     துறை : இது, செலவுக் குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது.

     (து - ம்.) தலைவன் வினைவயிற்செல்லுங் குறிப்பறிந்து தலைவி வேறுபடக் கண்டு அவளைத் தேற்றுகின்றான். 'மடந்தாய், நின் வடிவழகு கண்டு அகமகிழ்ந்து யானும் அறத்தினிலை கைவரப்பெற்றோர் போன்றேன்; புதல்வனும் விளையாடல் பயிலுகின்றான்; நுங்களை எதிர்நோக்கி மகிழ்வதினும் சிறந்த பொருளில்லையாதலின், வேறுவினை யாதுமில்லேன்; இங்ஙனமாக ஏற்றினாற் பிரிகிற்போம்; பிரிவதேயில்லைக்கா'ணெனத் தெளியக்கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப் பரிவு நீக்கிய பகுதிக் கண்ணும்" என்னும் விதிகொள்க. பிரிவு பொதுப்படக் கூறினமையின் பரத்தையிற் பிரிவு முதலிய எல்லாப் பிரிவிற்கும் இவ்விதி அமையும் என்க.

    
பொன்னும் மணியும் போலும் யாழநின் 
    
நன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும் 
    
போதும் பணையும் போலும் யாழநின் 
    
மாதர் உண்கணும் வனப்பின் தோளும் 
5
இவைகாண் தோறும் அகமலிந்து யானும்  
    
அறநிலை பெற்றோர் அனையேன் அதன்தலைப் 
    
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன் 
    
வினையும் வேறுபுலத்து இலனே நினையின் 
    
யாதனிற் 1 பிரிவாம் மடந்தை 
10
காதல் தானுங் கடலினும் பெரிதே. 

     (சொ - ள்.) மடந்தை பொன்னும் மணியும் போலும் நின் நன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும் - மடந்தாய்! பொன்னைப் போலும் ஒளிவீசுகின்ற நினது நல்ல வடிவும், நீலமணியைப் போலும் (நிறமமைந்த) மணங்கமழ்கின்ற நின் கரிய கூந்தலும்; போதுபோலும் நின்மாதர் உண்கணும் - குவளை மலரைப் போலும் அழகிய மையுண்ட நின்கண்களும்; பணைபோலும் வனப்பின் நின் தோளும் - மூங்கிற் போத்தினைப்போலும் அழகையுடைய நின் தோள்களும்; இவைகாண்தோறும் யானும் அகம்மலிந்து அறம் நிலை பெற்றோர் அனையேன் - ஆகிய இவற்றைக் காணும் பொழுதெல்லாம் யானும் உள்ளம் மகிழ்ந்து அறத்தின்கண்ணே நிலைபெற்றோர் அடையும் பயனை அடைந்தேன் ஆகின்றேன்; அதன்தலைப் பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்-அதன்மேலும் பொன்னாலாகிய தொடியணிந்த புதல்வனும் விளையாட்டயர்தல் கற்றிருக்கின்றனன்; வேறு புலத்து வினையும் இலன் - நுங்களைக் கண்டு மகிழ்வதினுங் காட்டிற் சிறந்ததொன்றும் இல்லாமையால் வேற்றிடஞ் சென்று செய்யும் செயல் யாதுமில்லாதேனாகியிராநின்றேன்; காதல் தானும் கடலினும் பெரிது - நின்பால் எனக்குண்டாகிய ஆசையோ கடலினும் பெரிதாயிராநின்றது; நினையின் யாதனின் பிரிவாம்-இவற்றை ஆராயின் எக்காரணத்தை முன்னிட்டு நாம் ஒருவரையொருவர் பிரிகிற்பம்; பிரியகில்லமாதலின் நீ வேறுபட்டுக் காட்டி என்னை வருத்தாதே கொள்!; எ - று.

     (வி - ம்.) யாழ : முன்னிலையசை. மாதர் - காதலுமாம். ஓரனையேன் - ஒரு தன்மையேன். முதல் இவ்விரண்டடிகளிரண்டும் நிரனிறையணி. யானும் என்றதன் உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை, நீ என்பால் வைத்திருக்குங் காதலேயன்றி யெனப் பொருள்படுதலின்; அது வேறுபட்டுக் காட்டலால், நீ வேறுபட்டென்பது முதற் சொல் எச்சம். மெய்ப்பாடு - மருட்கை. பயன் - தலைவியை ஆற்றுவித்தல். கைகோள் - கற்பு. பிரிவறிந்து வருந்துழித் தேற்றலிற் பாலையாயிற்று.

     (பெரு - ரை.) அறம் நிலைபெற்றோர் என்றது, தம்மில் இருந்து தமது பாத்துண்பாரை, அதனினும் சிறந்த இன்பம் இவ்வுலகினின்மையின் அதனை உவமை யாக்கினான்.

    இனி, இச்செய்யுட்கு ஒப்பான சிறந்த செய்யுள் கிடைத்தல் அரிது; தமிழ் இலக்கியத்தின் மணிமுடியாக இதனைக் கொள்ளலாம்.

(166)
 (பாடம்) 1. 
பிரிகோம்.