167. . . . . . . . . . . . . .
     திணை : நெய்தல்.

     துறை : (1) இது, தோழி பாணர்க்கு வாயின்மறுத்தது.

     (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் தன்பால் மனைவி ஊடியதறிந்து ஊடல் நீங்குமாறு தேற்றவேண்டிப் பாணனை விடுப்ப வந்தானை நோக்கித் தோழி, 'பாண! நீ கூறும் பொய்மொழிகள் நலனிழந்த தலைவியினது நுதலினெழுந்த பசலையை நீக்க வல்லன அல்லகண்டாயாதலின், மீண்டு செல்வாயாக'வென வெகுண்டு கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்குப், "பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் குறைவினை எதிரும்" (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.

    துறை : (2) தூதொடு வந்த பாணற்குச் சொல்லியதூஉமாம்.

    (து - ம்.) என்பது, வினைவயிற்சென்ற தலைமகன் தன் வருகையை முன்னரே தெரிவிக்குமாறு தூதாகவிடுத்த பாணனைத், தோழி 'தலைவர் வந்து தலையளி செய்தாலன்றி நீ கூறும் இனியமொழி நலனிழந்த தலைவியினது நுதலின் எழுந்த பசலையை நீக்குமோ?"வெனக் கவன்று கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும் பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனால் அமைத்துக் கொள்க.

    
கருங்கோட்டு்ப் புன்னைக் குடக்குவாங்கு பெருஞ்சினை 
    
விருந்தின்வெண் குருகு ஆர்ப்பின் ஆஅய் 
    
வண்மகிழ நாளவைப் பரிசில் பெற்ற 
    
பண்ணமை நெடுந்தேர்ப் பாணியின் ஒலிக்கும் 
5
தண்ணந் துறைவன் தூதொடும் வந்த  
    
பயன்தெரி பனுவல் பைதீர் பாண 
    
நின்வாய்ப் பணிமொழி களையா பன்மாண் 
    
புதுவீ ஞாழலொடு புன்னை தாஅம் 
    
மணங்கமழ் கானல் மாண்நலம் இழந்த 
10
இறையேர் எல்வளைக் குறுமகள் 
    
பிறையேர் திருநுதல் பாஅய பசப்பே. 

     (சொ - ள்.) புன்னைக் குடக்கு வாங்கு கருங்கோட்டுப் பெருஞ்சினை விருந்தின் வெண்குருகு ஆர்ப்பு - புன்னையினது மேலோங்கி வளைந்த கரிய அடித்தண்டினையுடைய பெரிய கிளையிலே புதுவதாக வந்து தங்கிய வெளிய நாரை நரலுதல; ஆஅய் வண்மகிழ் நாள் அவைப் பரிசில் பெற்ற பண் அமை நெடுந்தேர்ப் பாணியின் ஒலிக்கும் - கடையெழு வள்ளலுள் ஒருவனாகிய ஆஅய் அண்டிரனது பெரிய மகிழ்ச்சியையுடைய நாளோலக்கத்திலே இரவலர் பரிசிலாகப் பெற்ற அலங்காரமமைந்த நெடிய தேரினது ஒலிபோல ஒலியாநிற்கும்; தண் அம் துறைவன் தூதொடும் வந்த பயன்தெரி பனுவல் பைதீர் பாண - குளிர்ச்சியையுடைய துறையை உடைய கடற்கரைத் தலைவனாகிய காதலன் நின்னைத் தூதாக விடுத்தலினாலே வந்த நீ பெறும் பயனுக்குத் தக்கபடி கூறும் பனுவலையுடைய வருத்தமில்லாத பாணனே !; நின் வாய்ப் பணி மொழி - நின் வாயினாலே கூறப்படுகின்ற மெல்லிய பொய்ம்மொழிகள்; பல் மாண் புதுஞாழல் வீயொடு புன்னை தாஅம் மணம் கமழ் கானல் - பல மாட்சிமைப்பட்ட புதிய ஞாழன்மலரொடு புன்னைமலரும் உதிர்ந்து பரவிய மணம் கமழ்கின்ற கடற்கரையிலுள்ள சோலையின்கண்ணே; மாண் நலம் இறை ஏர் எல் வளை இழந்த குறுமகள் - முன்பு நுகரப்பட்டுப் பின்பு தனது மாட்சிமையுடைய நலத்துடனே கையிலுள்ள அழகிய வளையும் இழந்த இளமை மாறாத மடந்தையினது; பிறை ஏர் திரு நுதல் பாய பசப்பு - பிறை போன்ற அழகிய நெற்றியிலுண்டாகிய பசலையை; களையா - நீக்குவனவல்ல காண்; ஆதலின் நீ இங்கு நில்லாது மீண்டு செல்வாயாக! எ - று.

     (வி - ம்.) பணிமொழி - மெல்லிய மொழி; இது துனிதீர்க்க வேண்டி இல்லாதனவற்றைப் புனைந்துகொண்டு வணங்கிக்கூறும் பொய்ம்மொழி. பாணி - ஒலி. கோடு - அடித்தண்டு. வண்மகிழ் - பெரியமகிழ்ச்சி. நலனும் வளையும் இழந்தவென மாறிக்கூட்டுக. ஏர் : உவமவுருபு. ஒடு : அடைமொழிப் பொருளது. சினத்தொடு வந்தானென்பது போலக் கொள்க. ஆர்ப்பின், இன் : அல்வழிச்சாரியை. தண்ணந்துறைவன், அம் : சாரியை. விரிக்கும் விழி விரித்தல்.

    தலைமகன் முயங்கித் தலையளி செய்தவழி நீங்குவதன்றி நின்மொழியாலே பசலை நீங்காதென்றாள், அவனளிக்குங் கொடையளவுக்குரிய சொல்லுடையையெனக் கொண்டு பயன்தெரி பனுவலையுடையையென்றாள். இவளது வருத்தத்திற்குப் படுங் கவற்சி தலைவற்கில்லை யென்பது தோன்றப் பாணன் மீதேற்றிப் 'பைதீர் பாண' என்றாள்.

    இறைச்சி :- (1) நாரை கத்துதல் தேர்ப்பாணியின் ஒலிக்கு மென்றது, பாணன் நயந்து கூறுமொழி எமக்கு இடி இடிப்பது போலிருக்கும் என்பதாம்.

    இறைச்சி :- (2) ஞாழலொடு புன்னைப்பூப் பரவி மணங்கமழுங் கானலென்றது, துறைவனுக்குத் தலைவியொடொப்பப் பரத்தை கருதலாயினாளென்பதாம். அன்றி இனி, கானல் இருவகைமலரையும் பெற்றுக் கமழ்தல்போலத் தலைவன் தலைவியையும் பரத்தையையும் ஒப்பக் கருதி ஏற்று மகிழாநிற்குமெனவுமாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயின்மறுத்தல். ஏனைத்துறைக்கும் பொருளொக்கும். அதற்கு மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியின் ஆற்றாமை கூறுதல்.

     (பெரு - ரை.) பாண நின்மொழி குறுமகள் பசப்புக் களையா என இயைத்துக் கொள்க. பயன் தெரி பனுவல் - இன்பம் உணர்தற்குக் காரணமான பாடலுமாம். பை - வருத்தம்.

(167)