169. . . . . . . . . . . . .
திணை : முல்லை.

துறை : இது, வினைமுற்றி மறுத்தராநின்றான் நெஞ்சிற்கு உரைத்தது.

     (து - ம்.) என்பது. சென்று வினைமுடித்து மீளுந்தலைவன் நெஞ்சை நெருங்கி 'யாம் பிரிந்ததனாலுண்டாகிய தலைவியினது துன்பந் தீரும் வண்ணம் இப்பொழுது நாம் வருவதனை நம்முடைய மாளிகையின் சுவரின்கண்ணுள்ள பல்லி, பலபடியாக இயம்பி அறிவுறுத்தா நிற்குமோ'வெனக் கருதிக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "மீட்டுவரவு ஆய்ந்த வகையின் கண்ணும், அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.

    
முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல் 
    
வருவம் என்னும் பருவரல் தீரப் 
    
படுங்கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி 
    
பரல்தலை போகிய சிரல்தலைக் கள்ளி 
5
மீமிசைக் கலித்த வீநறு முல்லை 
    
ஆடுதலைத் துருவின் தோடுதலைப் பெயர்க்கும் 
    
வன்கை இடையன் எல்லிப் பரீஇ 
    
வெண்போழ் 1 ததைஇய அலங்கலந் தொடலை 
    
மறுகுடன் கமழும் மாலைச் 
10
சிறுகுடிப் பாக்கத்தெம் பெருநக ரானே. 

     (சொ - ள்.) நல்நுதல் முன்னியது முடித்தனம் ஆயின் வருவம் என்னும் பருவரல்தீர - நெஞ்சமே! வினைவயிற் பிரிந்து செல்லும்பொழுது என்று வருவீர்கொலாமென வருந்தி வினவிய தலைவியை நெருங்கி 'நல்ல நுதலையுடையாய்! யாம் சென்று கருதியதை முடித்தனமாயின் அன்றே வருகின்றோம்.' என்று கூறியவுடன் உண்டாகிய அவளுடைய துன்பமெல்லாந் தீரும்படி இன்று நாம் வருகின்ற வருகையை; பரல் தலைபோகிய சிரல்தலைக் கள்ளி மீமிசைக் கலித்த முல்லை நறு வீ - பரல்மிக்க பாலை நிலத்தின்கண் வளர்ந்தோங்கிய சிச்சிலிப் பறவைபோன்ற தலையையுடைய கள்ளியின் மேலே படர்ந்த தழைந்த முல்லையின் நறுமலரை; ஆடு தலைத் துருவின்தோடு தலைப் பெயர்க்கும் வன்கை இடையன் - ஆடுகின்ற தலையையுடைய யாட்டின் தொகுதியை மேய்க்கச் செலுத்துகின்ற வலிய கையையுடைய இடையன்; எல்லிப் பரீஇ வெண் போழ் ததைஇய அலங்கல் அம் தொடலை மறுகு உடன் கமழும் - இரவிலே கொய்து வெளிய பனங்குருத்தின் போழுடனே சேர்த்துத் தொடுத்த அசைகின்ற நறிய மாலையின் நறுமணம் தெருவில் ஒருங்கு கமழாநிற்கும்; மாலைச் சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரான் - இன்று மாலையம் பொழுதிலே சிறிய குடிகளையுடைய பாக்கத்தின்கண் உள்ள எமது பெரிய மாளிகையிடத்து; நெடுஞ் சுவர்ப் பல்லி படுங்கொல் - நெடிய சுவரின்கணிருக்கின்ற பல்லி அறிகுறியாக அடித்துத் தெரிவிக்குங் கொல்லோ? எ - று.

     (வி - ம்.) சிரல் - சிச்சிலி. மீமிசை - மேலிடம். துரு - யாடு. தோடு - கூட்டம். பல்லிபடுதல் - பல்லியடித்தல்; (பல்லிசொல்லுதல்); "வாய்மாண்ட பல்லி படும்" என்றார் கைந்நிலை 18 ஆம் பாடலினும்.

    இறைச்சி :- இடையன்தொடுத்த கண்ணி போழுடனே கமழுமென்றது, பல்லியடிப்பக் கண்ட தலைவி தன் புதல்வனுடன் மகிழ்ந்து நம் வரவினாலே களிப்பெய்தியிருக்கு மென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - நெஞ்சுட னுசாவுதல்.

     (பெரு - ரை.) வருவம் என்றமையால் அவட்குண்டான பருவரல் என்றவாறு, பல்லி படுங்கொல் என்று மாறுக, கள்ளிக்கிளை தன் மலராலே சிரல் பறவை போன்று தோன்றுதலைக் கண்டறிக. ஆடுதலை: வினைத்தொகை. எல்லி - பகலுமாம். மாலைப் பொழுதிற் கமழும் என்பதனால் பகல் எனலே வலியுடைத்து. வெண்போழ் - வெளிய நாருமாம்.

(169)
 (பாடம்) 1. 
தைஇய.