திணை: குறிஞ்சி.

    துறை : இது, முன்னிலைப்புறமொழியாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

    (து - ம்.) என்பது, வரையாது பகற்குறிக்கண் வந்தொழுகுந் தலைமகன் ஒரு பொழுது வாராதிருத்தலாலே வருத்தமுற்ற தலைவி பின்பொருநாள் வந்து ஒரு மறைவிடத்திற் கேட்டிருந்த தலைமகன் விரைவில் வரைந்துகொள்ள வேண்டித் தோழியை நோக்கி யான் அவனை எதிர்ப்பட்ட இடங்கண்டு அழுதுகொண்டிருக்கும்போது வினாவிய அன்னைக்கு, மறந்து தலைவனது மார்பைப் பெறாமல் வருந்துகின்றேனென இம் மறையினைச் சொல்லத் தொடங்கித் தவிர்ந்தேனென்று கவன்று கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்குக் "களவு அறிவுறினும்" (தொல்-கள- 20) என்னும் விதி கொள்க

    
நாண்மழை தலைஇய நன்னெடுங் குன்றத்து  
    
மால்கடற் றிரையி னிழிதரு மருவி 
    
அகலிருங் கானத் 1 தல்கணி நோக்கித் 
    
தாங்கவுந் தகைவரை நில்லா நீர்சுழல்  
5
பேந்தெழின் மழைக்கண் கலுழ்தலின் அன்னை 
    
எவன்செய் தனையோநின் னிலங்கெயி றுண்கென  
    
மெல்லிய இனிய கூறலின் வல்விரைந் 
    
துயிரினுஞ் சிறந்த நாணு நனிமறந் 
    
2 துரைக்கலுய்ந் தனனே தோழி சாரற்  
10
காந்த ளூதிய மணிநிறத் தும்பி 
    
தீந்தொடை நரம்பின்3 முரலும் 
    
வான்றோய் வெற்பன் மார்வணங் கெனவே. 

    (சொ - ள்.) தோழி நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து - தோழீ ! விடியற்காலையில் மழைபெய்துவிட்ட நல்ல நெடிய மலையினின்று; மால் கடல் திரையின் இழிதரும் அருவி - கரிய கடலின் அலைபோல இழிகின்ற அருவி; அகல் இருங்கானத்து அல்கு அணிநோக்கி - அகன்ற பெரிய காட்டினிடத்துச் சென்று தங்கியோடும் அழகை நோக்கி; தாங்கவும் தகைவரை நில்லா ஏந்து எழில் மழைக்கண் நீர் சுழல்பு கலுழ்தலின் - அஃது அவரை எதிர்ப்பட்ட இடமாதலின் அடக்கவும் தகைக்கு மளவின் நில்லாமல் பெரிய அழகினையுடைய குளிர்ந்த கண்கள் நீரைப் பெருக்கி அழுதலானே; அன்னை எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு உண்கு என - அதனைக் கண்ட அன்னை என்னை நோக்கி நீ ஏன் அழுதலைச் செய்கின்றனையோ ? அழாதே கொள்! நின் விளங்கிய எயிற்றினை முத்தங் கொள்வனென்று; மெல்லிய இனிய கூறலின் - மென்மையாகிய இனிய மொழிகளைக் கூறுதலானே; வல் விரைந்து உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து - யான் விரைந்து உயிரினுங் காட்டிற் சிறந்த நாணினையும் மிக மறந்துவிட்டு; சாரல் காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி தீந்தொடை நரம்பின் முரலும் வான்தோய் வெற்பன்மார்பு அணங்கு என - சாரலின்கணுள்ள காந்தளின் தேனையுண்ட நீலமணிபோலும் நிறத்தையுடைய வண்டு யாழிற் கட்டிய இனிய நரம்பு ஒலித்தல்போல ஒலிக்கா நிற்கும் விசும்பி லோங்கிய வெற்பினையுடைய தலைவனது மார்பைப் பிரிந்தமையால் வந்த வருத்தத்திற்கு அழா நின்றேன் என்று; உரைக்கல் உய்ந்தனன் - கூறத் தொடங்கி அப்பால் நினைவுவரத் தவிர்ந்துய்ந்தேன்; எ-று.

    (வி - ம்.) எயிறு உண்க என - பற்கள் மகிழ்ச்சியைக் கொண்டு நகுவனவாகவென வென்றுமாம். இஃது அன்னை களவறிவுற்றவாறு கூறக்கருதி அவன்மாட்டு அயன்மை தோற்றுவித்ததாயிற்று. மார்பணங்கென உரைக்கலுய்ந்தனனென்றது கலங்கி மொழிதல். ஒருகால் அரிதிற் கூடிப் பிரிந்தவர் முன்பு கூடியவிடத்தைக் காண்டலும் அங்கு முயங்கியவெல்லாங் கருதுதலியல்பாதலின், அங்ஙனந் தான் கண்டுழிக்கருதி வருந்தினமை கூறினாள். "உதுக்காண், தையால் தேறென தேற்றியறனிலான், பையமுயங்கியுழி" (கலி. 144) என்றார் பிறரும். மயங்கலின் மார்பணங்கெனக் கூறிவிடின் ஏதம் பயக்குமெனவும் இனி அங்ஙனெய்தாவாறு விரைவின் வரைகவெனவுங் குறிப்பித்தாளாயிற்று.

    இறைச்சி :- காந்தளையூதிய தும்பி, இன்னும் தேனசையால் முரன்று இயங்குமலைநாடனாகி யிருந்தும் முன்பு என்னலனண்டு துறந்தகன்றனன், அவனாட்டஃறிணைப் பொருளினியல்பையேனும் நோக்கி யறிந்திலனென இரங்கியதாம்.

    மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயர்வுயிர்த்தல். இதனைக் களவறிவுற்றவழித் தலைவிகூற்று நிகழ்தற்கு மேற்கோளாகக் கொண்டார் நச்சினார்க்கினியர்; (தொ-பொ- 111, உரை)

(17)
  
 (பாடம்) 1. 
அகலணி.
 2. 
உரைத்தல். 
 3. 
இமிரும்.