(து - ம்.) என்றது, வெளிப்படை. (உரை இரண்டற்குமொக்கும்)
(வி - ம்.) முதற்றுறைக்குக் கூறியதே இதற்குமாம்.
| விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி |
| மறந்தனம் துறந்த காழ்முளை அகைய |
| நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப |
| நும்மினுஞ் சிறந்தது நுவ்வை ஆகுமென்று |
5 | அன்னை கூறினள் புன்னையது சிறப்பே |
| அம்ம நாணுதும் நும்மொடு நகையே |
| விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப |
| வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த் |
| துறைகெழு கொண்கநீ நல்கின் |
10 | நிறைபடு நீழல் பிறவுமா ருளவே. |
(சொ - ள்.) விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப வலம்புரி வான்கோடு நரலும் - புதியராய் வந்த பாணர் பாடுகின்ற இளைதாய (மெல்லிய) இசைப்பாட்டுப் போல வெளிய வலம்புரிச்சங்கு ஒலியாநிற்கும்; இலங்கு நீர்த் துறைகெழு கொண்க!- விளங்கிய நீரையுடைய துறைபொருந்திய நெய்தனிலத்தலைவனே!; விளையாடு ஆயமோடு வெண்மணல் அழுத்தி மறந்தனம் துறந்த காழ்முளை அகைய - யாம் எம்மொடு விளையாடுகின்ற தோழியரோடு சென்று ஒருநாள் வெள்ளிய மணலிலூன்றினேமாகி மறந்தொழிந்த புன்னை (யினது முற்றிய) விதையானது வேரூன்றி முளைத்து முளைதோன்றுதலானே; நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப - மீண்டும் அதனை நோக்கி மகிழ்ந்து நெய் கலந்த இனிய பாலை நீராக வார்த்து இனிமையொடு வளர்க்கு நாளில்; அன்னை நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று கூறினள் - எம் அன்னை எம்மை நோக்கி "நீயிர் வளர்த்துவரும் புன்னையானது நும்மினுஞ் சிறந்ததன்றோ, அது நும்முடன் பிறந்த தங்கையாந் தகுதியுடையது கண்டீர்" என்று இதன் சிறப்பினை விளங்கவுரைத்தனள்; நும்மொடு நகை நாணுதும் - ஆதலின் எந் தங்கையாகிய இப் புன்னையின் எதிரில் நும்மொடு நகைத்து விளையாடி மகிழ்வதற்கு யாம் வெட்கமடையாநின்றோம்; அம்ம நீ நல்கின் நிறைபடு நீழல் பிறவும் உள - அம்மவோ? நீ இவளை அணைந்து நல்குவையோ? நல்குவையாயின் நிறைந்த மரத்தினிழல் பிறவும் ஈங்குள்ளனகாண்; அவ்வயிற் செல்லுதல் நல்லதொன்றாகும், எ - று.
(வி - ம்.) விளர் - இளமை; மென்மையின்மேலது. வான் - வெண்மை. ஆர் : அசை. காழ் - விதை; ஈண்டுப் புன்னைக்கொட்டை. அகைத்தல் - தோன்றுதல். நுவ்வை - நும் தங்கை.
உடன்பிறந்தோர் சுற்றத்தார் முதலானோர் அயலிலே யிருக்கும்பொழுது தன் காதலனொடு அளவளாவுதல் தகுதியுடையதன்றாதலின், 'வெள்கி அஞ்சுதும்' என்றாள். நும்மொடு நகையாடுதற்கு நாணுதுமென்றதனாலே பகற்குறிக்கு உடன்படாமையும், பிறர்காணுதற்கு நாணுதுமென்று போதரலால் களவுக்கு அஞ்சினமென்றமையுங் குறிப்பாற் கூறி மறுத்து வரைவுகடாயது. மெய்ப்பாடு - மருட்கை. பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) இனி, முதற்கூறிய துறைக்கு நீ நல்குவாயேனும் இப் புன்னைநீழல் போன்று நிறைபடு நீழல் பிறவுமுளவோ என்று ஏகாரத்தை வினாவாக்கி இல்லையாகலின் பகலின்கண் வாராதே கொள் எனப் பொருள் காண்க. இதன்கண் தோழியின் படைத்துமொழி ஆற்றவும் இன்பந்தருலுணர்க.
(172)