(து - ம்.) என்பது, சிறைப்புறமாக வந்திருந்த தலைமகன் கேட்டு இனி இல்வயிற் செறிக்கப்படுமாதலால், களவுப்புணர்ச்சிக் கியலாதென்று வரைந்தெய்துமாறு தோழி தலைவியை நோக்கி 'நம் தலைவனுடன் கூட்டம் நிகழ்ந்ததனை அன்னை அறியாதிருந்தும் ஏதிலாட்டியர் கூறுதலால் என்னைச் சுடுவதுபோல நோக்குவளெனவும் இதுபற்றி உள்ளுறையால் இறைமகன் இன்னது செய்தல் வேண்டுமெனவுஞ் சூழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "களனும் பொழுதும் . . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| நெடுங்கடல் அளித்த கொடுந்திமில் பரதவர் |
| கொழுமீன் கொள்கை அழிமணல் குவைஇ |
| மீன்நெய் அட்டிக் கிளிஞ்சல் பொத்திய |
| சிறுதீ விளக்கின் துஞ்சும் நறுமலர்ப் |
5 | புன்னை ஓங்கிய துறைவனோடு அன்னை |
| தானறிந் தன்றோ இலளே பானாள் |
| சேரியம் பெண்டிர் சிறுசொல் நம்பிச் |
| சுடுவான் போல நோக்கும் |
| அடுபால் அன்னஎன் பசலை மெய்யே. |
(சொ - ள்.) நெடுங் கடல் அலைத்த கொடுந் திமில் பரதவர் - நெடிய கடலிலே சென்று வலைவீசி ஆங்குள்ள மீன்களை வருத்திப் பிடித்த வளைந்த மீன்படகுகளையுடைய பரதமாக்கள்; கொள்கைக் கொழுமீன் அழிமணல் குவைஇ - தாம் பிடித்துக்கொண்டுவந்த கொழுவிய மீன்களை நெகிழ்ச்சியையுடைய மணற்பரப்பிலே குவித்து; மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய சிறு தீ விளக்கில் துஞ்சும் - மீன் கொழுப்பாலாகிய நெய்யை வார்த்துக் கிளிஞ்சலில் ஏற்றிய சிறிய சுடர்விளக்கினொளியிலே துயிலுகின்ற; நறுமலர்ப் புன்னை ஓங்கிய துறைவனோடு - நறிய மலரையுடைய புன்னை மரங்கள் உயர்ந்த துறைவனுடனே நாம் களவிலே புணர்ந்ததனை; அன்னை அறிந்தன்று இலள் - நம் அன்னைதான் முன்னரே அறிந்துவைத்தாளும் அல்லள்; பால் நாள் சேரியம் பெண்டிர் சிறுசொல் நம்பி - அங்ஙனமாக இரவு நடு யாமத்தில் நம்முடைய சேரியின்கணுள்ள அயலுறை மாதர் கூறுங் குறிப்புரையாகிய இழிந்த சில சொற்களை விரும்பிக் கேட்டு; அடுபால் அன்ன என் பசலை மெய் - கொதிக்கின்ற பால்போன்ற பசலைபரந்த என் மேனியை; சுடுவான் போல நோக்கும் - சுடுவது போல நோக்கா நிற்கும்; இதனால் இனி இல்வயிற் செறிக்கும் போலும்; எ - று.
(வி - ம்.) வான்: தொழிற்பெயர் விகுதி. இதனாலென்பது முதற் குறிப்பெச்சம்.
தலைவன் பிரிதலாலே பசப்புண்டாகிய தென்பதை அவனுக்கறிவுறுத்துவாள் என் பசலை மெய்யென்றாள். காமத்தீ மிகுதலானே அடுபாலன்ன மெய் என்றாளெனவுமாம். அடுபால்மேல் ஆடை படர்தல் போலக் காமத்தீயால் உடம்பிலே பசலைபரந்ததெனக் கொள்க. இதுவும் தலைவி கூற்றைத் தோழி தன் கூற்றாகக்கொண்டு கூறியது. இது பசலைபாய்தல்.
உள்ளுறை :- கடல் வேட்டையிலே சென்ற பரதவர் கொண்டு வந்த மீனை மணலிலே குவித்துவிட்டு விளக்கொளியிலே துஞ்சுவர் என்றது, தலைவன் வேற்றுநாட்டகன்று பொருளீட்டிக் கொணர்ந்து எமர் விரும்பியவாறு அவர் முன்றிலிலே குவித்துப்போகட்டுப் பலரறிய மணந்து முயங்கி அயாவோம்பி இருப்பானாக வென்றதாம்.
மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவு கடாதல்.
(பெரு - ரை.) முன்னரே பிரிவுத்துயரால் கொதிக்கும் என் மேனியை மேலும் சுடுவான் போன்று நோக்கும் என்றவாறு, இதனால் அலர் எழுந்ததும் தாயறிந்ததும் கூறி இனி இற்செறிப்பர் என்பதனையும் குறிப்பால் உணர்த்தினமையுணர்க.
(175)