177. ........................................
     திணை : பாலை.

     துறை : இது செலவுக்குறிப்பறிந்த தலைமகள் தோழிக்குரைத்தது.

     (து - ம்.) என்பது, தலைவன் வினைவயிற்செல்லுங் குறிப்பை யறிந்த தலைமகள், தோழியை நெருங்கி "நம் காதலர் சுரம்போதலைத் துணிந்தனரென்பது திண்ணம்; வேலைத்துடைப்பர், பலகையணிவர், என்னையும் அளிப்பர் ஆதலின், யாம் துன்பவெள்ளத்தில் நீந்தியுழலு நாள்வந்து எய்தியது போலு"மென அழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, ""கொடுமையொழுக்கம்.........................ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்"" (தொல். கற். 6) என்னும் விதியான் அமைத்துக் கொள்க.

    
பரந்துபடு கூரெரி கானம் நைப்ப 
    
மரந்தீ உற்ற மகிழ்தலை அம்காட்டு 
    
ஒதுக்கரும் வெஞ்சுரம் இறந்தனர் மற்றவர் 
    
குறிப்பிற் கண்டிசின் யானே நெறிப்பட 
5
வேலும் இலங்கிலை துடைப்ப பலகையும் 
    
பீலி சூட்டி மணியணி பவ்வே 
    
பண்டினும் நனிபல அளிப்ப இனியே 
    
வந்தன்று போலுந் தோழி நொந்துநொந்து 
    
எழுதெழில் உண்கண் பாவை 
10
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே. 

     (சொ - ள்) தோழி பரந்துபடு கூர் எரி கானம் நைப்ப மரம் தீ உற்ற மகிழ்தலை அம் காட்டு - தோழீ! நம் காதலர் பரந்து பட்ட மிக்க தீ காடு முழுதும் எரிந்து அழித்தலினால் அதனிடையிருந்த மரங்களெல்லாம் தீந்து மகிழ்ச்சி நீங்கலாகிய காட்டகத்து; ஒதுக்கு அரும் வெஞ் சுரம் இறந்தனர் - ஒதுங்கியிருத்தற்கும் நிழலில்லாத கொடிய சுரத்தின்கண்ணே சென்று விட்டனர் என்பது திண்ணம்; மற்றவர் குறிப்பின் யான் கண்டிசின் - அவர் செய்யுஞ் செய்கையின் குறிப்பினால் யான் கண்டறிந்தேன்மன்; நெறிப்பட வேலும் இலங்கு இலை துடைப்ப - யாங்ஙனம் அறிந்தனையென நீ வினவுதியேல் இயம்புவன்கேள் ! ஒழுங்குபட வேலின் இலங்கிய இலையையும் மாசுபோகத் துடையா நிற்பர்; பலகையும் பீலி சூட்டி மணி அணிய - அன்றிக் கிடுகினையும் மயிற்பீலி சூட்டி மணியை அணியாநிற்பர்; பண்டினும் நனி பல அளிப்ப - மற்றும் முன்போலன்றி என்னையும் பலபடியாகப் பாராட்டி அன்புசெய்யாநிற்பர்; நொந்து நொந்து எழுது எழில் உன்கண் பாவை அழிதரு வெள்ளம் நீந்தும் நாள் - ஆதலின் யான் வருந்தி வருந்தி ஒவியர் எழுதுதற்குத் தகுந்த அழகமைந்த மையுண்ட கண்ணிலே பாவைதோன்றாத வெள்ளம் போன்று கண்ணீர் வடிய அவ் வெள்ளத்தின்கண் விழுந்து நீந்தி யுழலும் நாள்; இனியே வந்தன்று போலும் - இன்னே வந்து இறுத்ததுபோலும்; இனி எவ்வாறு ஆற்றுகிற்பேன்; எ - று.

     (வி - ம்) தலையல் - நீங்குதல். அம் : சாரியை. இறந்தனர் : தெளிவின்கண் வந்த கால வழுவமைதி. பலகை - கிடுகு; இக்காலத்துக் கேடயமென மருவியது. பண்டினும் நனிபல அளிப்ப என்றது, மனைவியை முன்பு அன்புபாராட்டும் அளவினுங்காட்டில் மிகுதிப்படப் பாராட்டுதல்; கண்ணுந் தோளும் நுதலுங் கூந்தலுந் தைவந்து தழுவி முழுவி உறுப்புகளைப் பலகாலும் நோக்கிநிற்றலும் பலபடிசென்று போந்து நோக்கி மீளுதலும் பயனில்லாத வழியும் வாளா உரையாடலும் பிறவுமாம். இது துன்பத்துப்புலம்பல். ஏனை மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) எழுது எழில் உண்கண் பாவை - கோலம் எழுது தலையுடைய அழகிய மையுண்ட கண் எனினுமாம்.

(177)