(து - ம்) என்பது, சிறைப்புறத்தானாகிய தலைவன்கேட்டு வரைவொடு புகுமாற்றானே தோழி தலைவியை இல்வயிற்செறித்தமையை அறிவுறுத்துவாளாய்த் "தலைவனது தேரையும் பார்க்கமுடியாதாயிற்று, நாண்மிகுதலாலே துயிலவும் இல்லை. என்நெஞ்சும் அழிந்த"தென்று கூறி உள்ளுறையாலே தலைவியினுடைய ஏனைய நிலைமையுங் கூறி வரைவுகடாவாநிற்பது.
(,இ - ம்) இதனை, ""களனும் பொழுதும் ......................... அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்"" (தொல். கள. 23) என்னும் விதியினால் அமைத்துக்கொள்க.
| ஆடமை ஆக்கம் ஐதுபிசைந்து அன்ன |
| தோடமை தூவித் தடந்தாள் நாரை |
| நலனுணப் பட்ட நல்கூர் பேடை |
| கழிபெயர் மருங்கின் சிறுமீன் உண்ணாது |
5 | கைதையம் படுசினைப் புலம்பொடு வதியும் |
| தண்ணந் துறைவன் தேரே கண்ணின் |
| காணவும் இயைந்தன்று மன்னே நாணி |
| நள்ளென் யாமத்துங் கண்படை பெறேஎன் |
| புள்ளொலி மணிச்செத்து ஓர்ப்ப |
10 | விளிந்தன்று மாதவத் தெளிந்தஎன் நெஞ்சே. |
(சொ - ள்) ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்து அன்ன - அசைகின்ற மூங்கிலினுள்ளே உரிக்கப்படும் உரியை மடித்து மெல்லிதாகப் பிசைந்துவைத்தாலொத்த; தோடு அமை தூவித் தடந்தாள் நாரை - தொகுதியமைந்த சிறகுகளையும் நீண்ட கால்களையும் உடைய நாரையினால்; நலன் உணப்பட்ட நல்கூர் பேடை - இன்பம் நுகரப் பெற்ற செயலற்ற பேடை; கழி பெயர் மருங்கில் சிறுமீன் உண்ணாது - கழிக்கரையிலே பெயருமிடங்களில் பெயர்ந்து சென்று சிறிய மீனையும் உண்ணாது, கைதை படுசினைப் புலம்பொடு வதியும் தண்ணம் துறைவன் - தாழையின் பெரிய கிளையின்கண்ணே வருத்தத்துடன் உறையாநிற்கும் மெல்லிய துறைகளையுடைய நம் காதலன்; தேர் கண்ணின் காணவும் இயைந்தன்று மன் - ஊர்ந்துவரும் தேரானது முன்பு நம்முடைய கண்ணாலேனும் காணுதற்குப் பொருந்தியிருந்தது, இப்பொழுது அது கழிந்தது; நாணி நள் என் யாமத்தும் கண் படை பெறேஎன் - ஏதில் மாதரார்்கூறுஞ் சிறு சொல்லை நம்பி நம் அன்னை இற்செறித்தலானே நாணமுற்று இரவு நடுயாமத்திலும் கண் துயில்கொளப் பெற்றிலேன்; புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப - அயலிலே பறவைகள் ஒலித்தல் அவர் தேரின் மணியொலிபோலிருத்தலால்; தவத் தெளிந்த என் நெஞ்சு - அவ்வொலியைக் கேட்டு முன்பு மிகத் தெளிந்திருந்த பெருமையுடைய என்னெஞ்சமானது; விளிந்தன்று - இப்பொழுது அழிவு பொருந்தியதாயிற்று; எ - று.
(வி - ம்) ஆக்கம் - ஆக்கப்படுவது; செய்யப்படுவதென்றவாறு. ஐது - மெல்லிது; வியப்புடைத்தாக வென்றுமாம். தோடு - தொகுதி. மன் : கழிவுப்பொருளது. செத்து - ஒத்து : உவமவுருபு. நல்கூர்தல். பல்காற் புணர்தற்கின்றிச் சேவல் நாரையைப் பிரிந்து தனியிருத்தல். மா : அசைச்சொல். அவன் முயக்கங் குறைந்தவழி அருகிலே நோக்கியிருந்தாலும் உள்ளம் தேறும் : நோக்காதவாறு இல்வயிற் செறித்தமையானே தேரினையுங் காணாவண்ணம் அது கழிந்ததென இரங்கினாள். இது துன்பத்துப் புலம்பல். கண்படைபெறேஎ னென்றது கண்டுயில் மறுத்தல். நெஞ்சம் விளிந்ததென்றது ஆங்கு நெஞ்சழிதல். இது தலைவி கூற்றைத் தோழி தன் கூற்றாகக் கூறியது.
உள்ளுறை :- நாரையால் நலனுணப்பட்ட பேடை, பின்பு சேவலின்றித் தனியே மீனுமுண்ணாது சினையின்கண்ணே புலம்பொடு வதியுமென்றது, தலைவனாலே நலனுணப்பட்ட தலைவி மீட்டும் அவனை அடையப்பெறாது உண்டியும் விரும்பாது இற்செறிக்கப்பட்டு வருந்தி உறையாநிற்கும் என்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - இற்செறிப்பறிவுறுத்தி வரைவுகடாதல்.
(பெரு - ரை.) "விளிந்தன்று மாதவர்த் தெளிந்த" என்றும் பாடம். இதற்கு மாது அசைச்சொல் என்க. வருந்தும் தாய் முதலியோர் உடனுறையும் இன்னாமையையுடைய இல்லென்பாள் உள்ளுறைக்கண் முள்ளுடைய கைதையம் படுசினை வதியும் என்றாள்.
(178)