180. ......................................
    திணை : மருதம்.

     துறை : இது, தலைமகற்கு வாயினேர்ந்த தோழி, தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது.

     (து - ம்) என்பது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனை எதிரேற்று முகமன் வழங்கிய தோழி, தலைமகளிடஞ் சென்று கூறுதலும் அவள் சினமிகுந்து உடன்படாமையால் உள்ளங்கலங்கி "ஊரன் பரத்தையர் பால் நசையுடையனாகி இல்வயின் வருகின்றிலன்; வரினுந் தலைவி தான் புலவிநீங்குவாளல்லள்; இவ்விருவருடைய பகையும் யான் இறந்தொழியின் அன்றே தீர்ந்துவிடும் போலு"மென நொந்து கூறா நிற்பது.

     (இ - ம்.) இதற்கு, ""அடங்கா வொழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை, அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும்"" (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.

    
பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை 
    
கழனி நாரை உரைத்தலிற் செந்நெல் 
    
விரவுவெள் ளரிசியின் தாஅம் ஊரன் 
    
பலர்ப்பெறல் நசைஇநம் இல்வா ரலனே 
5
மாயோள், நலத்தை நம்பி விடலொல் லாளே 
    
அன்னியும் பெரியன் அவனும் விழுமிய 
    
இருபெரு வேந்தர் பொருகளத் தொழித்த 
    
புன்னை விழுமம் போல  
    
என்னொடு கழியுமிவ் விருவரது இகலே. 

     (சொ - ள்) பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை - வயலருகிலிருக்கின்ற பலாமரத்திலுள்ள இலைகளைக் கூடாக்கி முயிறுகள் முட்டையிட்டு நெருங்கியுறைகின்ற அக் கூடுகளை; கழனி நாரை உரைத்தலின் கழனியின்கண்ணே இரையுண்ணுமாறு போந்த நாரை சென்றிருந்து உரிஞ்சுதலானே; செந்நெல் விரவு வெள் அரிசியில் தா அம் ஊரன் - அம் முயிறுகளும் அவற்றின் முட்டைகளும் மழுக்கியபடியுள்ள சிவந்த நெல்லொடு கலந்த அரிசியுதிர்ந்து பரவினாற்போல உதிர்ந்து பரவாநிற்கும் வயல்சூழ்ந்த ஊரையுடைய தலைவன்; பலர்ப்பெறல் நசைஇ நம் இல் வாரலன் - பரத்தை மகளிர் பலரைத் தான் பெற்று முயங்குதலை விரும்பி அதனால் நம்மனையகத்து வருகின்றானலன்; மாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாள் - ஒருகால் அவன் வரினும் அப் பொழுது மாமை நிறத்தையுடையளாய தலைவி அவனது நலத்தையுடைய பெருந்தகைமையை விரும்பித் தான் அதன் முன் ஏறட்டுக் கொண்டுடைய துனிவிட் டொழிவாளுமல்லள்; அன்னியும் - ஆகலின் அன்னிகுடியிலிருந்த அன்னி என்பவனும்; பெரியன் அவனும் - தேரழுந்தூரிலுள்ள பெரிய திதியன் என்பவனும் ஆகிய; விழுமிய இருபெருவேந்தர் பொருகளத்து - சிறப்புற்ற இரண்டு பெரிய அரசர்கள் போர்செய்த குறுக்கையின்கணுள்ள போர்க்களத்தில்; ஒழித்த விழுமம் புன்னைபோல - அன்னி வெட்டிச் சாய்த்தலாலே பூவும் மலரும் மிக்க துன்புற்ற புன்னை மரம் விழுதலும் அவ்விருவருடைய பகைமையும் முடிந்தொழிந்தாற்போல; இ இருவரது இகல் - இத் தலைவனும் தலைவியுமாகிய இருவருடைய பகைமையும்; என்னொடு கழியும் - இடையிலுள்ள யான் இறந்துபோனால் என்னொருத்தியொடு நீங்கும் போலும்; எ - று.

     (வி - ம்) பாகல் - பலா. மாயோள்; தலைவி, செந்நெல் முயிற்றுக்கும் அரிசி மூட்டைக்கும் சிறப்பு நிலைக்களமாக முதலொடு முதலும் சினையொடு சினையும் வந்த உருவுவமம். துனி: அவாய்நிலை. இடையிலுள்ள ஏகாரம் இரண்டுந் தேற்றம்.

     உள்ளுறை :-நாரை உரிஞ்சுதலால் குடம்பையுள் முயிறு உதிருமென்றது, தலைவி சினமிகுத்தலினால் என்னுடலினின்று உயிர்நீங்கும் போலுமென்றதாம். மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - தலைவி ஊடல் தீர்தல்.

     (பெரு - ரை) திதியன் என்னும் அரசனுடைய காவல்மரமாகிய புன்னையை அன்னி என்னும் வேந்தன் வெட்டியழித்தமையை ""பெருஞ்சீர் அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன் தொன்னிலை முழுமுதல் துமியப்பண்ணிய நன்னர் மெல்லிணர்ப்புன்னை போல"" (145-10-3) என வரும் அகநானூற்றுப் பகுதியாலும் உணர்க.

(180)