(து - ம்) என்பது, தலைவன் மணம்புரிந்துகொள்ள நீட்டித்ததனாலே தலைவி வருந்துவதறிந்த தோழி; இரவுக்குறிக்கட் சிறைப்புறமான தலைமகன் கேட்டு விரைவில் வரையுமாறு "தலைவியை நிலவு மறைந்தது, இருளுமூடியது, அன்னையுந் துயிலுவள், இப்பொழுது குறிவயின் வந்து நின்ற தலைவனது நிலைகண்டு அவன்மார்பை முயங்கிவருவேமோ சொல்லுவா"யென்று கவன்று கூறாநிற்பது.
(இ - ம்) இதனை, ""களனும் பொழுதும்............................அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்"" (தொல். கள. 23) என்னும் விதியினால் அமைத்துக்கொள்க.
| நிலவு மறைந்தன்று இருளும் பட்டன்று |
| ஓவத் தன்ன இடனுடை வரைப்பின் |
| பாவை யன்ன நப்புறங் காக்குஞ் |
| சிறந்த செல்வத்து அன்னையுந் துஞ்சினள் |
5 | கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு |
| நன்மார்பு அடைய முயங்கி மென்மெலக் |
| கண்டனம் வருகஞ் சென்மோ தோழி |
| கீழும் மேலும் காப்போர் நீத்த |
| வறுந்தலைப் பெருங்களிறு போலத் |
10 | தமியன் வந்தோன் பனியலை நிலையே. |
(சொ - ள்) தோழி நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்று - தோழீ ! நிலாவும் மறைந்தொழிந்தது, இருளும் வந்து பொருந்தியது; ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பின் பாவை அன்ன நம் புறம் காக்கும் - சித்திரத்திலமைந்தாலொத்த அகன்ற இடத்தையுடைய வீட்டின் எல்லையிலே பாவைபோன்ற நம்மைப் பாதுகாக்கின்ற; சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள் - சிறந்த மேம்பாட்டினையுடைய அன்னையுந் துயிலா நின்றனள்; கீழும் மேலும் காப்போர் நீத்த வறுந்தலை பெருங்களிறு போல - தறியிலே பிணித்துக் காப்பவரும் மீதேறி நடத்துபவரு மொழிந்த சிறிய தலையையுடைய பெரிய களிற்றுயானைபோல; தமியன் வந்தோன் பனி அலை நிலை சென்மோ - தனியாக வந்த தலைவனது பனியலைத்தலானே கலக்குண்ட நிலையைச் சென்று நோக்கி; கெடுத்துப்படு நல் கலம் எடுத்துகொண்டு ஆங்கு - கையிலிருந்து தவறுண்டு விழுந்து இழந்து போகிய நல்ல அணிகலனை மீட்டும் கண்டெடுத்தாற்போல நம்மை இற்செறித்தலான் அடையப்படாதிருந்த; நல் மார்பு அடைய முயங்கி மெல்மெல கண்டனம் வருகம் - அவனுடைய நல்ல மார்பைச் சேரப்புல்லி மகிழ்ந்திருந்து அவனைப் பலகாலும் செவ்விதாக நோக்கிப் பின்னர் மெல்ல மெல்ல வருவமோ? ஆராய்ந்து கூறுவாயாக ! எ - று.
(வி - ம்.)வறிது - சிறிது: வறுந்தலை - சிறிய தலை; அலங்கரிக்கப்படாத தலையுமாம்.
நிலாவெழுகின்றதனாலே களவின் முயங்க இடையீடுபடுதலை அறிவுறுத்தி வரைவுடன்படுத்துவாள் நிலவுமறைந்தன்றென்றாள். நெறியினது ஏதங் கூறுவாள் களவுக்கு இன்றியமையாமை போல இருளும் பட்டதென்றாள். அன்னை துயிலுமென்பதனால் அவளது வெகுளியும் இல்வயிற் செறிப்பும் அறிவுறுத்தினாள். கண்டனம் வருகமென்றதனாலே இல்வயிற் காப்புப் பூண்டதே காரணமாக இதுகாறுங் காணப்பெறாமை யறிவுறுத்தினாள் அவன் மார்பு முயங்கப்பெறாது போயதேயென்பதறிவுறுத்துவாள் கையிழந்த நன்கலத்தை உவமித்தாள். அவன் மார்புபெறின் உண்டாகு மகிழ்ச்சியையும் அனைய கலன் கைவந்தாற் போன்ற தென்பதனாற் கூறினாள். வரைந்துகொள்ளென வற்புறுத்துவாரின்மையாலே தன்னுள்ளஞ் சென்றவாறு களவின்வந்து ஒழுகுமென்பாள் காப்போர் நீத்த களிறுபோன்றானென்றாள். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) "நிற்புறங் காக்கும்" என்றும் பாடம். வந்தோன் பனியலை நிலை கண்டனம் முயங்கி வருகம் சென்மோ என்று இயைத்து வருவேம் - செல்வாயாக! என்று முடித்தல் நேரிதாம்.
(182)