(து - ம்) என்பது, வரைதல் காரணமாகப் பொருளீட்டி வருமாறு பிரிதலுறுந் தலைமகனைத் தோழி பிரிதலால் வருகின்ற துன்பம் இன்ன தன்மைய தென்பாள் "உமணர் பிரிதலாலே இன்மையுண்டா தல்போல், நீ பிரிதலால் இன்னாமை தோன்றும்: அவ்வின்னாமை தோன்றுமாறு ஊதையொடு மாலையுந் தோன்றுதலுடையதாயிராநின்றது; இவ்வளவிலே பிரியின் அவள் வாழாள்; அதனை நினையாதோய், நீ அறியாமையுடையை"யென வெகுண்டு கூறாநிற்பது.
(இ - ம்) இதனை, ""ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும்"" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் பாங்கின் என்பதனால் அமைத்துக் கொள்க.
| தம்நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து |
| பிறநாட்டு உப்பின் கொள்ளை சாற்றி |
| நெடுநெறி ஒழுகை நிலவுமணல் நீந்தி |
| அவணுறை முனிந்த ஒக்கலொடு புலம்பெயர்ந்து |
5 | உமணர் போகலும் இன்னா தாகும் |
| 1 மடவை மன்ற கொண்க வயின்தோறு |
| இன்னா தலைக்கும் ஊதையொடு ஓரும் |
| நும்மில் புலம்பின் மாலையும் உடைத்தே |
| இனமீன் ஆர்ந்த வெண்குருகு மிதித்த |
10 | வறுநீர் நெய்தல் போல |
| வாழாள் ஆதல் சூழா தோயே. |
(சொ - ள்) கொண்க உமணர் தம் நாட்டு விளைந்த வெள்நெல் தந்து பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி - கொண்கனே ! மருத நிலத்தின்கணுள்ள உப்பு வாணிகர் தமது நாட்டில் விளைந்த வெளிய நெல்லைப் பண்டிகளிலேற்றிச் சென்று கொடுத்து அந்நெல் விலையாக அயனாடாகிய நெய்தனிலத்திலே விளைந்த உப்பைப் பெற்றுக்கொண்டுபோய் விலைகூறி; நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி - நீண்டநெறியிலே பண்டிகளுடனே நிலாப்போன்ற மணற்பரப்பைக் கடந்து பிரிந்து போதலாலே; அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து போகலும் - தனியே அவ்விடத்திலிருப்பதை வெறுத்த சுற்றத்துடனே அங்குநின்றும் போந்து அவ்வுப்பு வாணிகர் செல்லுதலும்; இன்னாது ஆகும் - அவர் தங் குழுவோடும் பண்டிகளோடும் சென்றொழிந்தமை அவ்வூர்க்கு இன்னாமையைத் தருவதொன்றாயிருக்குமன்றோ? அப்படியே நீயும் எம்மைக் கையிகந்து பெயர்வது எமக்கும் இன்னாமையைத் தருவதொன்றாகும்; வயின்தோறு இன்னாது அலைக்கும் ஊதையொடு - அங்ஙனம் துன்பந்தருதற்கு இடங்கள்தோறும் துன்புறுத்தி வருகின்ற கூதிரின் ஊதைக்காற்றுடனே; நும் இல் புலம்பின் மாலையும் உடைத்து - நீ இல்லாது தமியேமாகிய காலத்துப் போதருகின்ற மாலைப்பொழுதும் ஏதுவாகவுடைத்தாயிராநின்றது; இனம் மீன் ஆர்ந்த வெள் குருகு மிதித்த வறுநீர் நெய்தல் போல - அதனை அறிந்து வைத்தும் நீ பிரியின் மீன் இனத்தை மிகத்தின்ற வெளிய நாரை மிதித்த நீர்வற்றிய குளத்து நெற்தன் மலர்போல; வாழாள் ஆதல் சூழாதோய் அம்ம மன்ற மடவை - இவள் ஒருநொடிப் பொழுதும் உயிர் வைத்திருப்பவள் அல்லள், அங்ஙனம் இறந்துபடும் இவளது செயலை நினையாத நீ அம்மவோ ! திண்ணமாக அறியாமையுடையையாவாய்; எ - று.
(வி - ம்) ஓரும் : அசை. ஒழுகை - பண்டியெனவும் வண்டியெனவும் இக் காலத்து வழங்கப்படுகின்றது. இது பிறிது மொழிதல்.மீனைத்தின்ற செருக்கோடு நாரை வற்றிய குளத்துச் சிறிது சிறிது மலர்ந்து வாட்ட முறுகின்ற நெய்தல் மலரை மிதித்துக் கெடுத்தல் போலப் பொருள்வயிற் கொண்டவுள்ளத்தொடு நீ நெடுநாளைக்கொரோவொரு கால் நின்னைப் பெற்று ஏனைக்காலத்து வாடியிருக்குந் தலைவியை முற்றும் பிரிந்து இறந்துபாடுறுவிக்கின்றனை என உவமையொடு பொருளை ஒற்றுமையாக்குக. வாழாளாத லென்றது துன்பத்துப் புலம்பல். ஏனை மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - செலவழுங்குவித்தல்.
(பெரு - ரை) ஒருநாள் வந்து ஒருபகல் பழகும் ஏதிலராகிய உமணர் பிரிந்துபோதலும் அவரொடு பழகுவோர்க்குப் பெரிதும் இன்னாததாகும். நின்னிற்பிரியேன் என உறுதி கூறி உயிருறக் கேண்மை பூண்ட நீ பிரியின் என்னாம்? என்றிடித்துக் கூறியபடியாம். "மன்ற" என்றும் பாடம்.
(183)