திணை : பாலை.

     துறை : இது, மனை மருட்சி.

     (து - ம்) என்பது, தலைமகன் தலைமகளைக் கொண்டுதலைக்கழிதலும் அதனைச் செவிலியாலறிந்த ஈன்ற தாய் புலம்புவாளாக, அங்ஙனம் புலம்புதல் கண்ட அயல்மனைமாதர் போந்து தேற்றி "அஃது அறத்தாறாதல் கண்டாய்! இனி வருந்தாதேகொ" ளென்றார்க்கு "அறத்தாறாயினும் பிரிவை எவ்வண்ணந் தாங்கமுடியும்? என்மகள் ஆடிய இடங்காணின் என்னுள்ளமும் வேகின்ற தன்றோ?" என எதிரழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்) இதற்கு, ""தன்னும் அவனும் .......................... போகிய திறத்து நற்றாய் புலம்பலும், ஆகிய கிளவி யவ்வழி யுரிய"" (தொல். அகத். 36) என்னும் விதிகொள்க.

    
ஒருமகள் உடையேன் மன்னே அவளுஞ் 
    
செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு 
    
பெருமலை அருஞ்சுரம் நெருநற் சென்றனள் 
    
இனியே, தாங்குநின் அவலம் என்றிர் அதுமற்று 
5
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடை யீரே 
    
உள்ளின் உள்ளம் வேமே உண்கண் 
    
மணிவாழ் பாவை நடைகற் றன்னஎன் 
    
அணியியற் குறுமகள் ஆடிய 
    
மணியேர் நொச்சியுந் தெற்றியுங் கண்டே. 

     (சொ - ள்) அறிவு உடையீரே ஒரு மகள் உடையேன் - அறிவுடைய அயலிலாட்டியரே ! நுங்களைப் போல பல புதல்வியரைப் பெற்றேனில்லை, யான் ஒரோவொரு புதல்வியையே பெற்றுடையேன்; அவளும் செருமிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு நெருநல் பெருமலை அருஞ்சுரம் சென்றனள் - அவளும் போரின் மிக்க வலிமையும் கூரிய வேற்படையையுமுடைய காளையாவான் ஒருவனொடு நெருநலிரவு பெரிய மலையின்கணுள்ள சென்று சேர்தல் அரிதாகிய சுரநெறியே சென்றொழிந்தனள் கண்டீர்; மன்னே - அங்ஙனம் அவள் போயொழிதலானே அவள் பால் யான் கொண்டிருந்த அவாவும் நீங்கியது ஆயினும்; இனியே நின் அவலம் தாங்கு என்றிர் - வேறு புதல்வியரோடு மகிழ்ந்துறையும் பயனெய்திலேனாகலின் அவளொடு பழகியதே காரணமாக இன்று வருந்தும் என்னை நீயிர் இனி நின் அவலத்தை அடக்கிகொள்ளெனக் கூறாநின்றீர்; யாங்ஙனம் ஒல்லும் - அதனை அடக்கிக்கொள்ளுதல் எவ்வாறியலும்கொல்?; உண்கண் மணிவாழ் பாவை நடை கற்று அன்ன என் அணி இயல் குறு மகள் ஆடிய - மையுண்ட கண்ணின் மணியூடு வாழும் பாவை வெளிவந்து நடைபயின்று நடந்தாலன்ன என் அழகிய சாயலையுடைய இளமகள் விளையாடிய; மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டு உள்ளின் - நீல மணிபோன்ற பூவையுடைய நொச்சியையும் திண்ணையையும் நோக்கி நினைந்தால்; உள்ளம் வேம் - அவ்வண்ணம் கருதும் உள்ளமும் வெந்தழியுமன்றே, இனி யான் எவ்வாறு உய்குவேன்? எ - று.

     (வி - ம்) மன்; கழிவு. நொச்சி - முன்றிலின்கணுள்ள வேலியில் நிழல் நிரம்பிய நொச்சி, இது சிற்றில் கோலிச் சிறுசோ றட்டு விளையாடிய இடம். தெற்றி - திண்ணை; இது கழங்கு, பலகறை, பல்லாங்குழி முதலாயின ஆடிய இடம்.

    அவளதருமை கூறுவாள் கண்மணியுள் வாழ்பாவையை உவமித்தாள். சிலநாள் கடந்தாலும் நெஞ்சம் ஆறுமன்றே, அங்ஙனமுமின்றி நெருநல் இரவிலேதான் சென்றளாதலின் அவலம் தாங்குவதெங்ஙன மொல்லும் என்றாள். நன்னெறியில்லாத கொடுஞ்சுரமாதலின் அதனை நினையினும் அவலம் தாங்குவதெங்ஙனமொல்லுமென்றா ளெனவுமாம். மெய்ப்பாடு - உவகைக்கலுழ்ச்சி. பயன் - ஆற்றாமை நீங்குதல்.

     (பெரு - ரை) இது மகட் போக்கிய நற்றாய் தன்னைத் தேற்றுகின்ற அயலிலாட்டியர்க்குக் கூறியது.

(184)