Try error :java.sql.SQLException: Closed Resultset: next

     திணை : குறிஞ்சி.

     துறை : (1) இது, பாங்கற்குத் தலைவன் சொல்லியது.

     (து - ம்) என்பது, பாங்கற் கூட்டத்துக்கட், கற்றறிபாங்கன் கழறக்கேட்ட தலைவன் வருந்திக் "கொல்லிப்பாவை போன்ற அவள் கொலைபுரியச் சூழ்ந்தனளாதலின் அது காரணமாகவுற்ற என் துன்பத்தை நீ கண்ணாலே காணப்பெற்றிருந்தும் அவளை யான் கூடுமாறு

     நீ முயலாதொழியின் அது நின்னால் வந்ததன்று என் ஊழ்வினையால் வந்த"தென அதனை நோவனென்று அழிந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, ""நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும்"" (தொல். கள. 11) என்னும் விதி கொள்க.

     துறை : (2) சேட்படுக்குந் தோழிக்குத் தலைவன் சொல்லிய துாஉமாம்.

     (து - ம்) என்பது சேட்படை முன்பு கூறினமையானே பொருள் வெளிப்படை. (உரை இரண்டற்கும் ஒக்கும்).

     (இ - ம்) இதனை ""தண்டாது இரப்பினும்"" (தொல். கள. 11)என்னும் விதியினால் அமைத்துக்கொள்க.

    
ஆனா நோயோடு அழிபடர்க் கலங்கிக் 
    
காமங் கைம்மிகக் கையறு துயரங் 
    
காணவு நல்கா யாயிற் பாணர் 
    
பரிசில் பெற்ற விரியுளை நன்மான் 
5
கவிகுளம்பு பொருத கன்மிசைச் சிறுநெறி 
    
இரவலர் மெலியாது ஏறும் பொறையன் 
    
உரைசால் உயர்வரைக் கொல்லிக் குடவயின் 
    
அகலிலைக் காந்தள் அலங்குகுலைப் பாய்ந்து 
    
பறவை இழைத்த பல்கண் இறாஅல் 
10
தேனுடை நெடுவரைத் தெய்வம் எழுதிய 
    
வினைமாண் பாவை அன்னோள் 
    
கொலைசூழ்ந் தனளால் நோகோ யானே. 

     (சொ - ள்) பாணர் பரிசில் பெற்ற விரி உளை நல் மான் - பாணர் பரிசிலாகப் பெற்ற விரிந்த புறமயிரையுடைய நல்ல குதிரையின்; கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறுநெறி - கவிந்த குளம்பு மோதுதலாலே செப்பமாகிய மலைமேலுள்ள சிறிய நெறியின்கண்ணே; மெலியாது இரவலர் ஏறும் பொறையன் - மெலியாமல் இரவலர் ஏறுகின்ற பொறையனது; உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின் - புகழமைந்த கொல்லி மலையின் மேல்பால்; அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப்பாய்ந்து பறவை இழைத்த பல் கண் இறாஅல் - அகன்ற இலையையுடைய காந்தளின் அசையும் பூங்குயிலே பாய்ந்து தேனை நுகர்ந்து வந்து வண்டுகளால் வைக்கப்பட்ட பலவாய கண்களையுடைய இறாலின்கண்; தேன் உடை நெடுவரை - மிக்க தேனையுடைய நெடிய அம் மலையிலே; தெய்வம் எழுதிய வினைமாண் பாவை அன்னோள் - தெய்வத்தாற் செய்துவைத்தலிற் செயற்கை மாட்சிமைப்பட்ட பாவை போன்ற அவள்தான்; கொலை சூழ்ந்தனள் -என்னைக் கொலைசெய்யும் வண்ணம் ஆராய்ந்து நன்றாக அறிந்து கொண்டனள்; ஆனா நோயோடு அழிபடர்க் கலங்கி - அங்ஙனம் சூழ்ந்தவளது சூழ்ச்சியிலே பட்டு இன்னும் இறவேனாகி அடங்காத நோயுடனே பலபலவாக எண்ணிக் கழிக்கின்ற துன்ப மிகுதலானே கலக்கமெய்தி; காமம் கைம்மிகக் கையறுதுயரம் காணவும் - காமமானது அளவுகடந்து பெருகுதலானே என் செயலொருங் கழிந்து வருந்துகின்றேன், இங்ஙனம் வருந்தி அழிந்தொழிவதனை நீ கண்ணாலே கண்டுவைத்தும்; நல்காய் ஆயின் - அவளுடன் கூட்டுவிக்கு முயற்சியை நீயே செய்யாதொழியின்; யான் நோகு - அது நின்னால் வந்ததன்று என் ஊழ்வினையால் வந்ததென அவ்வூழினை யான் நோவா நிற்பேன்; எ - று.

     (வி - ம்) ஆனாமை - அமையாமை; அடங்காமை. படராலே கலங்கியென மூன்றனுருபு விரிக்க. கைம்மிகல் - அளவுகடத்தல். கொல்லிப்பாவை - அம் மலையிலுள்ள தேவரையும் முனிவரையும் துன்புறுத்த வருகின்ற அவுணரும் அரக்கரும் அப் பாவையின் நகையைக் கண்டு மயங்கி உயிர்விடும்படி தேவதச்சனாக்கிவைத்த பெண்வடிவினது. அவுணரும் அரக்கரும் போதருகாலை அவர் வாடைப்பட்டவுடன் தானே நகைசெய்யுமாறு பொறியுள் வைக்கப்பட்டது. அது நகைத்துக் கொல்லுமென்பதனை ""திரிபுரத்தைச், செற்றவனுங் கொல்லிச் செழும்பாவை யுந்நகைக்கக், கற்றதெல்லா மிந்த நகை கண்டேயோ"" (சித்திரமடல்) என்றதனாலுமறிக. அது போன்றவளென்றதனால் என்னையும் குறுநகையால் மயக்குவித்துக் கொலை சூழந்தனளென்க.

    இறைச்சி :- (1) பாணரின் குதிரைக் குளம்பாலே செப்பமாகிய நெறியில் இரவலர் மெலியாதேறுமென்றது; நீ சென்று கண்டு இயைவிப்பின் அந்நெறியே யான் வருந்தாது சென்று கூடுவேனென்றதாம்.

    இறைச்சி :- (2) கொல்லிமலையிலுள்ள காந்தளின் தேனை வண்டு கொணர்ந்து இறாலின்கண் வைக்குமென்றது, என்னறிவு என் நெஞ்சினைப் புகுந்து பற்றிக்கொண்டுபோய் அவள்பாலுய்த்த தறிவாயென்றதாம்.

    மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - பாங்கனை உடன்படுவித்தல்.

     (பெரு - ரை.) யான் நோகோ என மாறி ஓகாரத்தை வினாவாக்கி நீ கண்டு வைத்து நல்காய் ஆயின் யான் நின்னை நொந்து கொள்வேனோ அங்ஙனம் நோவதனாற் பயனென்னை என்றானாகப் பொருள்கோடல் சிறப்பு.

    நல்ல நண்பர் உடுக்கையிழந்தவன் கை போல விரைந்து உதவி செய்தல் இயல்பாகலின் நீயும் அவ்வாறு செய்தல் வேண்டாவோ? என்பது குறிப்பென்க.

(185)