(து - ம்) என்பது, தலைவன் பிரிதலானே தலைவி வருந்துவளென நினைந்து மெலிந்த தோழியை அதனையறிந்த தலைமகள் கூறுவாளாய் நம் காதலர் தாஞ்சென்ற ஆறு மரமீதேற இயலாத ஓந்தி யாழோசை யோர்ந்து அசைவு தீர்ந்து ஏறுந்தொழிலையுடையவாகுமென்று உரை செய்வராதலின், அன்னதொரு நெறியில் யாங்ஙனம் செல்வரோவென்று என்னுள்ளம் வருந்துவதாயினும் அவர் வருவரென ஆற்றுவேன் காணென்று இறைச்சியாலே பொருள் கொள்ளுமாறு சூழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்) இதனை, ""கொடுமை யொழுக்கம்.............................ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்"" (தொல். கற். 6) என்னும் விதியான் அமைத்துக்கொள்க.
| கல்லூற்று ஈண்டல கயன்அற வாங்கி |
| இரும்பிணர்த் தடக்கை நீட்டி நீர்நொண்டு |
| பெருங்கை யானை பிடியெதி ரோடும் |
| கானம் வெம்பிய வறங்கூர் கடத்திடை |
5 | வேனில் ஓதி நிறம்பெயர் முதுபோத்துப் |
| பாண்யாழ் கடைய வாங்கிப் பாங்கர் |
| நெடுநிலை யாஅம் ஏறுந் தொழில |
| பிறர்க்கென முயலும் பேரருள் நெஞ்சமொடு |
| காமர் பொருட்பிணி போகிய |
10 | நாமவெம் காதலர் சென்ற வாறே. |
(சொ - ள்) கல் ஊற்று ஈண்டல நீர் இரும்பிணர்த் தடக்கை நீட்டி - கல்லின்கண்ணே ஊறுகின்ற ஊற்றிற் சேர்தலையுடைய நீரைப் பெரிய சருச்சரையுடைய நீண்ட துதிக்கையை நீட்டி; கயன் அற வாங்கி நொண்டு - அவ் வூற்றுக் குழியில் அற வாங்கி முகந்து கொண்டு; பெருங்கை யானை பிடி எதிர்ஓடும் - பெரிய கையையுடைய களிற்றியானை தன் பிடியானையினெதிரே ஓடாநிற்கும்; கானம் வெம்பிய வறம் கூர் கடத்து இடை - காடு முற்றும் வெப்பமடைந்த வறன் மிக்க கற்சுரத்திலே; பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு - தன் வாழ்நாளும் பொருளும் இன்னோரன்ன எல்லாம் பிறர் பொருட்டேயென்று முயன்று முடிக்கும் பெரிய அருள் மிக்க நெஞ்சுடனே; காமர் பொருட்பிணி போகிய - அழகிய பொருளாசை பிணித்தலால்; எம் காதலர் சென்ற நாம ஆறு - எம் காதலர் சென்ற அச்சமுடைய நெறி; வேனில் நிறம் பெயர் முது ஓதி போத்து - வேனிலின்கண் மாறி மாறித் தன்னிறம் வேறுபடுகின்ற முதிய ஓந்திப்போத்துத்தான்; பாண் யாழ் கடைய வாங்கி - ஏற இயலாது வருந்தியவிடத்து ஆண்டுச் செல்லும் பாணர் தம் அசைவு தீரச் சிறிது பொழுது யாழ் வாசிப்ப அதனைக் கேட்டலும் தன் வருத்தந்தீர்ந்து; பாங்கர் நெடுநிலை யாஅம் ஏறும் தொழில் - பக்கத்தில் நீண்டு நிற்றலையுடைய யாமரத்தின் மீது ஏறுந்தொழிலையுடையனவென்பர்; அத்தகைய கொடிய காட்டில் அவர் செல்லுவதனை நினைத்தலான் இனி எவ்வண்ணம் யான் ஆற்றியுளேனாவேன்? எ - று.
(வி - ம்) கயன் - ஊற்றுநிலை. பிணர் - சருச்சரை. ஈண்டல -ஈண்டுதலையுடைய நீர். ஓதி - ஓந்திக்கொரு பெயர். நிறம்பெயர். முதுபோத்தென்றதனாலே பச்சோந்தியெனவுமாம். கடைய - செலுத்துதலால். பொருட்பிணிகாதலரெனக் கூட்டுக. அத்தகைய என்பது முதற் குறிப்பெச்சம். இங்ஙனம் கூறினாள் இறைச்சியால் ஆற்றியிருப்பேனாதலின் நீ வருந்தாதேகொள் என்றாளென்பது.
இறைச்சி :- நீர்வறந்த காலத்துக் கயத்திலூறு நீரைத் தன்பிடி வருந்தாவாறு களிறு கையால் நொண்டுகொண்டு சென்றதென்றதனாலே யான் வருந்தாவாறு தலைவர்தாம் சென்றவிடத்து எய்தப்படும் பொருளொடு விரைந்து போதருவர் ஆதலின் ஆற்றியிருப்பேனென்றதாம்.
மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை) "நம்பெருமான் இல்லறம் இனிது நடத்தற் பொருட்டே நம்மைப் பிரிந்தனர் ஆதலின் அவர் வருங்காறும் யானும் ஆற்றியிருத்தலாகிய என் கடமையை மேற்கொள்ளுவல் வருந்தாதே கொள்" என்பது குறிப்பெச்சமாகக் கொள்க. பிறர்க்கென முயலும் பேரருள் நெஞ்சமொடு பொருளீட்டச்சென்ற காதலர் கருத்திற்கு இயைய ஒழுகுதல் என் கடமையன்றோ என்பது கருத்து.
(186)