(து - ம்) என்பது, தலைமகன் பகற்குறி வந்தொழுகுகின்றானைத் தோழி நோக்கி "வெற்பனே! எங்கள் தலைவி" முதற்கூட்டத்துக் கண்ணே களவொழுக்கம் தீதென நன்றாக அறிந்துவைத்துளளெனின்; நீ வரைதலுஞ்செய்யாது இப்பொழுது அருகியும் வருதல் காரணமாக வாடுநளல்லள்; அது கழிந்தது, இனி மொழிந்து யாது பய"னென மறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்) இதனை, "களனும் பொழுதும்.............................................அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23)என்னும் விதியினால் அமைத்துக்கொள்க.
| படுநீர்ச் சிலம்பின் கலித்த வாழைக் |
| கொடுமடல் ஈன்ற கூர்வாய்க் குவிமுகை |
| ஒள்ளிழை மகளிர் இலங்குவளைத் தொடூஉம் |
| மெல்விரல் மோசை போலக் காந்தள் |
5 | வள்ளிதழ் தோயும் வான்தோய் வெற்ப |
| நன்றி விளைவுந் தீதொடு வருமென |
| அன்றுநன் கறிந்தனள் ஆயிற் குன்றத்துத் |
| தேமுதிர் சிலம்பில் தடைஇய |
| வேய்மருள் பணைத்தோள் அழியலள் மன்னே. |
(சொ - ள்) படு நீர்ச் சிலம்பின் கலித்த வாழைக் கொடுமடல் ஈன்ற கூர்வாய்க் குவிமுகை - ஆழ்ந்த சுனையில் நீரையுடைய மலைப்பக்கத்தில் முளைத்த வாழையின் வளைந்த மடலினின்று போந்த கூரிய நுனியையுடைய குவிந்த முகையானது; ஒள் இழை மகளிர் இலங்குவளைத் தொடூஉம் மெல்விரல் மோசை போல - ஒள்ளிய கலனையுடைய மாதர்களின் விளங்கிய வளையோடு பிணிப்புற்ற மெல்லிய விரலிலணிந்த விரலணிபோல; காந்தள் வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப - செங்காந்தளின் வளவிய இதழிலே தோயாநிற்கும் விசும்பில் நீண்டு பொருந்திய மலையையுடைய தலைவனே!; நன்றி விளைவுந் தீதொடு வரும் என அன்று நன்கு அறிந்தனள் ஆயின் - எம் தலைவி ஒரு காலத்து நன்றாக முடிவதொரு காரியமும் மற்றொரு காலத்துத் தீதாக வரும் என்று நின் இயற்கைப் புணர்ச்சியாகிய முதற் கூட்டத்தின்கண்ணே இரந்து பின்னிலை நின்ற அக் காலத்து நன்றாக அறிந்தனளாயிருப்பின்; குன்றத்துத் தேம் முதிர் சிலம்பில் தடைஇய வேய் மருள் பணைத்தோள் அழியலள் மன்னே - குன்றத்ததாகிய தேன்முற்றிய பக்கமலையில் முளைத்து வளைந்த அடியையுடைய மூங்கில் போலும் பருத்ததோள் இக் காலத்து நெகிழ்வாளல்லள்; அது கழிந்த செயலாகி முடிந்ததாகலின் இனிக் கூறி என்ன பயனாம்? எ - று.
(வி - ம்) படு - நீர்நிலையாகிய பள்ளம். மோசை - விரலணி; வாழைப்பூப் போலக் குவிந்துளதென உவமையாலறியக் கிடத்தலின் மோதிர மன்மை யுணர்க. தடைஇய - வளைந்த. தோள் அழியலள் - சினைவினை முதலொடு முடிந்தது.
நல்லனாயிருந்த நீ கொடிய கருத்தினையாய் வந்தனையென்பாள், நன்றி விளைவுந் தீதொடு வருவது என்றதனாலே குறிப்பித்தாளென்பது. அக்காலத்தே அறிந்துளாளெனின் உடன்படாதே உறையும்; நின் கொடுஞ்செயலை அறியாது கூடி இஞ்ஞான்றை வருந்துகின்றன ளென்றவாறு. இஃது அழிவில்கூட்டத்து அவன் புணர்வு மறுத்தல்.
வாழை முகை மோசைபோலக் காந்தளிலே தோய்ந்தும் மோசை யாகாதன்றே, அங்ஙனமாக நீ நன் மகன்போல வந்து தலைவியைத் தோய்ந்தும் இங்ஙனம் வாடும்படி விட்டு வரையாது அருகிவருதலால், நன் மகனல்லை யென்றாளென்பது. மெய்ப்பாடு - பெருமிதம் பயன் - வரைவு கடாதல்.
(பெரு - ரை) இதன்கண், 'நன்றி விளைவுந் தீதொடு வரும்' என்றதனோடு,
| "வியன்கண் ஞாலத்து இயன்றவை கேண்மின்! |
| நன்றாய் வந்த ஒருபொருள் ஒருவற்கு |
| நன்றே யாகி நந்தினும் நந்தும் |
| நன்றாய் வந்த வொருபொருள் ஒருவற்கு |
| அன்றாய் மற்றஃ தழுங்கினும் அழுங்கும்"" (பெருங்.-2.1 :57-61) |
எனவரும் பெருங்கதைப் பகுதியை ஒப்பு நோக்குக. 'அன்றுநற் கறிந்தன ளாயின்' என்றும் பாடம்.
(188)