(து - ம்.) என்பது, பகற்குறிவைத்துத் தலைவியைக் கூடிச் செல்லுந் தலைவனைத் தோழி நோக்கி 'இங்ஙனஞ் செல்லுவையாயின் மீண்டு நீ வருவதற்குள் இவள் இறந்துபடுமாதலால், அதற்கேற்றது செய்"யென வரைவுதோன்றக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் .... அனைநிலை வகையால் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்பதன்கண் வகை என்பதன்கண் அமைத்துக்கொள்க.
| இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற் |
| சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை |
| பெருங்களிற்று மருப்பின் அன்ன வரும்புமுதிர்பு |
| நன்மா னுழையின் வேறுபடத் தோன்றி |
5 | விழவுக்களங் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப ! |
| இனமணி நெடுந்தேர் பாக னியக்கச் |
| செலீஇய சேறி யாயின் இவளே |
| வருவை யாகிய சின்னாள் |
| வாழா ளாதல்நற் கறிந்தனை சென்மே. |
(சொ - ள்.) இறவுப் புறத்து அன்ன பிணர்படு தடவு முதல் சுறவுக் கோட்டு அன்ன முள் இலைத் தாழை - இறாமீனின் புறம் போன்ற சருச்சரை பொருந்திய பெரிய அடியையுடைய சுறாமீனின் முகத்தில் நீண்டுள்ள கொம்புபோன்ற முட்களையுடைய இலையையுடைய தாழையானது, பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு - பெரிய களிற்றியானையின் மருப்புப்போன்ற அரும்பு முதிர்ந்து; நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி - நல்ல பெண்மான் தலைசாய்த்து நிற்றல் போல வேறாகத்தோன்றி; விழவுக் களம் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப - விழாவெடுக்கும் களமெல்லாம் கமழா நிற்கும் வலியநீரையுடைய கடற்பரப்பிற்குத் தலைவனே!; இனம் மணிநெடு தேர்பாகன் இயக்கச் செலீஇய சேறியாயின் - மிக்க மணிகள் கட்டிய நெடிய நினது தேரைப் பாகன் செலுத்தலாலே நின்னூர்க்குச் செல்லும் பொருட்டுப் போகாநின்றனை யாதலால், வருவையாகிய சின்னாள் - பின்பு நீ வருவாய் என்று குறிப்பிட்ட சிலநாளளவும்; இவள் வாழாள் ஆதல் நற்கு அறிந்தனை செல் - இவள் உயிர்வாழ மாட்டாள் என்பதை நன்றாக அறிந்துகொண்டு செல்வாயாக! (எ-று)
(வி - ம்.) தடவு-பெருமை. பிணர்-சருச்சரை. உரவு-வலிமை; வலிமையுடையார் தம்மை அடைந்தாரைக் கைவிடார்; நீயும் அத் தன்மையனாதி யென்பாள் உரவுநீர்ச் சேர்ப்பனென்றாள். பிரியின் வாழளென்றதனானே வரைந்து பிரியாதுறையுமாறு வரைவுகடாயதாயிற்று. "தேரும் யானையுங் குதிரையும் பிறவும், ஊர்ந்தன ரியங்கலுமுரிய ரென்ப" (தொல்-பொருள்- 212) என்றதனானே 'நெடுந்தேர்பாகனியக்கச், செலீஇய சேறி' என்றதாம். இஃது அவனது செல்வக் குறைபாடின்மை கூறியதாயிற்று. இப்பாட்டு ஏனையுவமமாகவே முற்ற முடிதலின் உள்ளுறையின்மை யுணர்க. வாழாளாதலென்றது சாதலெல்லையாகக் கூறிய கலக்கம். மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் - வரைவுகடாதல். இதனைத் தலைவன் பிரியக் கருதியவழித் தோழி கூற்று நிகழ்வதற்கு மேற்கோளாகக் கொண்டார் நச்சினார்க்கினியர்; (தொல்-பொருள்-சூ- 114, உரை.)
(பெரு - ரை.) இனி, இன்தகண் தாழை அரும்பு முதிர்ந்து வேறுபடத்தோன்றி விழவுக்களம் கமழும் என்றது தலைவி காதற்கேண்மையிற் பெரிதும் முதிர்ந்து தன் சுற்றத்தாரினின்றும் வேறுபட்டு நின்னோடிருந்து நின்மனைக்கண் இல்லறம் நிகழ்த்தும் செவ்விபெற்றனள் என்பது உள்ளுறையாகக் கொள்க. இவ்வுள்ளுறைக்கு இறவுப்புறம் முதலிய ஏனைவுயுவமங்கள் ஆக்கந்தந்து நின்றன என்க. ஆதலால் நீ இவளை இன்னே வரைந்து கோடல் இன்றியமையாதென்பது இவ்வுள்ளுறைக்கண் போந்த குறிப்பெச்சம் என்க. இவ்வுள்ளுறை காணாக்கால் இச் செய்யுள் வெற்றெனத் தொடுத்தலாதலுமுணர்க.
(19)