(து - ம்) என்பது, வினைவயிற்சென்ற தலைமகன் சுரத்திடையே காதலியை நினைந்து மீண்டுவரக்கருதிய நெஞ்சைநோக்கி "அவளது இனிய நகை நோக்கி மகிழ்ந்தோய், அந்த மகிழ்ச்சி மேற்கொண்டு மீளுதலாலே நீ இங்ஙனமே துன்பெய்தி வாழ்வாயாக" வென்றதூஉமாகும். இதற்கு நிலம் பாலை. உரை மூன்று துறைகட்கும் பொருந்துமாறறிக.
(இ - ம்) இதற்கு, ""மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்ணும்,"" (தொல். கள. 5) என்னும் விதிகொள்க.
| நோவினி வாழிய நெஞ்சே! மேவார் |
| ஆரரண் கடந்த மாரி வண்மகிழ்த் |
| திதலை யெஃகிற் சேந்தன் தந்தை |
| தேங்கமழ் விரித்தார் இயல்தேர் அழிசி |
5 | வண்டுமூசு நெய்தல் நெல்லிடை மலரும் |
| அரியலங் கழனி ஆர்க்கா டன்ன |
| காமர் பணைத்தோள் நலம்வீ றெய்திய |
| வலைமான் மழைக்கண் குறுமகள் |
| சில்மொழித் துவர்வாய் நகைக்குமகிழ்ந் தோயே. |
(சொ - ள்) நெஞ்சே மேவார் ஆர் அரண்கடந்த மாரிவண் மகிழத் திதலை எஃகின் சேந்தன் - நெஞ்சமே! பகைவருடைய புகுதற்கரிய அரணங்களை வென்றுகொண்ட மாரி போல்கின்ற கைவண்மையையும் கள்ளுணவையும் திதலை பரந்த வேற்படையையுமுடைய சேந்தன் என்பானுக்கு; தந்தை தேம் கமழ் விரிதார் இயல்தேர் அழிசி - தந்தையாகிய தேன்மணங் கமழும் விரிந்த மாலையையுடைய அழகிய தேரினையுடைய அழிசி என்பவனது; நெல் இடை வண்டு மூசு நெய்தல் மலரும் - நெற்கதிர்களினிடையே வண்டு மூசுகின்ற நெய்தலின் மலர்கின்ற பூவினின்று; அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன - தேன் வடிதலையுடைய வயல் சூழ்ந்த "ஆர்க்காடு" என்னும் ஊரையொத்த; காமர் பணைத்தோள் நலம் வீறு எய்திய வலைமான் மழைக்கண் குறுமகள் - விருப்பம் வருகின்ற பருத்த தோளினழகோடு பெருமையடைந்த வலையிலகப்பட்ட மானினது கண்போன்ற மருண்ட குளிர்ச்சியையுடைய கண்களையுடைய இளமையளாகிய தலைவியின்; சில் மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோய் - சிலவாய் மொழியையுடைய சிவந்த வாயினின்றெழுகின்ற நகைக்கு மகிழ்ந்தோய்; இனி நோ - அங்ஙனம் மகிழ்ந்ததனாலே பின்பு கிடைக்கப் பெறாயாய் இனி நீ துன்புறுவாய் காண்; வாழிய - அவ்வகையாகிய துன்பத்துடனே நெடுங்காலம் வாழ்வாயாக; எ - று.
(வி - ம்) சேந்தன் தந்தையாகிய அழிசியின் ஆர்க்காடன்ன குறுமகளெனக் கூட்டுக. வாழிய: இகழச்சிக் குறிப்பு. பலவாய அரணங்கடந்த அழிசியின் "ஆர்க்காடு" என்னும் ஊரின்கணுள்ள கழனி, பகைவர் நெருங்குதற்கு அரிதாதல் போல யாம் நெருங்குதற்கு அரியளாயினாளென்றவாறு. இது துன்பத்துப்புலம்பல். மெய்ப்பாடு - பிறன்கட் டோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - தன்னுளத்தழுந்தல். ஏனைத் துறைகளுக்கும் மெய்ப்பாடு பயன் ஏற்றபெற்றிகொள்க.
(பெரு - ரை) பொருளீட்டுதற் பொருட்டு முன்னர்த் தன்னை ஊக்கிப் பிரிவு சூழ்ந்த நெஞ்சம் உறுதியுடனில்லாமல் சுரத்திடையே தலைவியின் புன்முறுவலை நினைந்து மயங்குதலான் அதனை வைபவன் இனி நின்னை மீள விடேன்; நீ இங்ஙனமே நொந்து கிடக்கக் கடவை என்று ஒறுத்தபடியாம் என்க. (துறை - 3)
(190)