(து - ம்.) என்பது, வரையாது களவின்வழி வந்தொழுகுந் தலைமகன் ஒருகால் ஒரு சார்பின்கண்ணே வந்துறைதலை யறிந்த தோழி, தலைவியை இல்வயிற்செறிப்பாரென்பதை அறிவுறுத்த வேண்டி நேற்றொரு தேர் வந்ததெனப் பழிச்சொலுண்டாயதன்றி அன்னையும் என்னைக் குறிப்பாக நோக்கினள்; நான் இயங்காதிருப்பின் யான் கொண்ட அழகினுண்மை இத்தகைய இயல்பினதேயென்று காட்டுவதரியதாகும்; அவர்வந்து வறிதேபோதல் அதனினும் அரிய துன்பமுடையதாகுமென நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை ""களனும் பொழுதும்............................அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்"" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.
| சிறுவீ ஞாழல் தேன்தோய் ஒள்ளிணர் |
| நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த |
| வண்டற் பாவை வனமுலை முற்றத்து |
| ஒண்பொறிச் சுணங்கின் ஐதுபடத் தாஅங் |
5 | கண்டல் வேலிக் காமர் சிறுகுடி |
| எல்லிவந் தன்றோ தேரெனச் சொல்லி |
| அலரெழுந் தன்றிவ் வூரே பலருளும் |
| என்னோக் கினளே அன்னை நாளை |
| மணிப்பூ முண்டகங் கொய்யே னாயின் |
10 | அணிக்கவின் உண்மையோ அரிதே மணிக்கழி |
| நறும்பூங் கானல் வந்தவர் |
| வறுந்தேர் போதல் அதனினும் அரிதே. |
(சொ - ள்.) சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் - சிறிய பூவையுடைய ஞாழலின் தேன் பொருந்திய ஒள்ளிய பூங்கொத்துக்கள்; நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த - அழகிய கலன்களையுடைய சிறுமியர் நெடிய மணலில் வண்டலாட்டு அயரும்வழி; வண்டல் பாவையின் - வண்டல் மண்ணாலே செய்த பாவையின்; வனமுலை முற்றத்து ஒண்பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம் - அழகிய கொங்கையில் ஒள்ளிய வரியையுடைய சுணங்குபோல மெல்லிதாகப் படுமாறு பரவாநிற்கும்; கண்டல் வேலிக் காமர் சிறுகுடி எல்லி தேர் வந்தன்றோ எனச் சொல்லி - கண்டல் மரங்களாகிய வேலி சூழ்ந்த கண்டார்க்கு விருப்பம் வருகின்ற சிறிய குடித்தெருவின் கண்ணே நேற்றிரவில் ஒரு தேர் வந்துளதேயன்றோவென உரையாடி; இவ்வூர் அலர் எழுந்தன்று - இவ்வூர் முழுதும் அலரெழுந்ததாக; அன்னை பலர் உளும் என் நோக்கினள் - அவ்வலரைச் செவியில் ஏறட்டுக் கொண்ட நம்மன்னை என் போல்வார் பலருமிருப்ப அவருள் என்னையே குறிப்பாக நோக்கா நின்றனள்மன்; நாளை முண்டகம் மணிப்பூ கொய்யேன் ஆயின் அணிக் கவின் உண்மை அரிது - நாளைக் கழிக்கரையிலுள்ள முள்ளியினுடைய நீலமணி போலும் மலரைக் கொய்யேனாயின் என் மிக்க அழகு உளதாவது அரியதாகும்; மணிக் கழி நறும் பூங் கானல் அவர் வந்து வறுந்தேர் போதல் - இஃதிவ்வண்ணமாக, நீலமணி போலும் கரிய கழியிடத்துள்ள நறிய பூஞ்சோலையில் அவர் வந்து எம்மை யணையாது தேர் மேல் வறிதே செல்லுதல்; அதனினும் அரிது - எம்மை இல்வயிற்செறிக்கும் அதனினுங் காட்டில் அரிய துன்பமுடையதாகும்; எ - று.
(வி - ம்.) ஞாழல் - கடற்கரையிலுள்ளதொரு மரம். கண்டல் - ஒரு மரம். முண்டகம் - கடன்முள்ளி.
பலருள்ளும் யானே தலைவிக்குச் சிறந்த தோழியென அன்னை அறிந்து வைத்தனளென்பதறிவுறுத்துவாள் தன்னையே அன்னை நோக்கினளென்றாள். அங்ஙனம் நோக்கினமையின் இனித் தான் இடைநின்று கூட்டற்கியலாதாதலின் வரைந்தெய்துகவெனக் குறிப்பித்தனளென்பது. நேற்றே தேரொன்று வந்ததென்று அலரெழுந்ததனாலே இனி நினது தேர் இங்குக் களவொழுக்கத்து வாரற்க என்றாளாயிற்று. கொய்யேனாயினெனத் தலைவியை இற்செறித்தமை அறிவுறுத்தினாள். இது தலைவியைத் தானாகக்கொண்டு கூறியது. வறுந்தேர்போதல் அரிதென்றதனாலே வரைந்து தேரேற்றிச் செல்கவெனவும் அன்றேல் வலிந்து கொண்டுதலைக்கழிக வெனவுங் குறிப்பித்தாளென்பது.
உள்ளுறை :- ஞாழலி னொள்ளிய பூங்கொத்து மகளிரிழைத்த வண்டற்பாவையின் மார்பிலே தேமல்போலப் பரக்குமென்றது, அன்னையின் சீற்றம் என்னாற் காவற்பட்ட தலைவியின்மீது ஒறுப்பதுபோலத் தாக்காநிற்குமென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம்: பயன் - செறிப்பறிவுறுத்து வரைவுகடாதல்.
(பெரு - ரை.) அத்தேர் வருதற்குக் காரணம் யாதென வினவுவாள் போன்று அன்னை என்னை நோக்கினள் என்பது எச்சமாம். எனவே அன்னை நங்களவொழுக்கினை அறிந்துகொண்டாள் என்றுணர்த்தினாளாயிற்று. நாளை மணிப்பூமுண்டகம் கொய்யேன் என்றது தலைவி இற்செறிக்கப்படுதல் ஒருதலை என்றவாறாம். அணிக்கவின் உண்மை அரிது என்றது இந்நிகழ்ச்சியினால் தலைவி பெரிதும் நலனழிந்து வருந்துவள் என்றவாறு. எல்லி - பகலுமாம்.
(191)