திணை : குறிஞ்சி.

    துறை : இஃது இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.

    (து - ம்.) என்பது, களவொழுக்கத்து இரவுக்குறி வந்துகூடுந் தலைவனை நோக்கித் தலைவி அவன் இராவருநெறியின் ஏதம்நினைந்து கவன்று இனி நீ இங்ஙனம் வாராதேகொள் என்றாளை, நீ யஞ்சாதொழி, நினது நலனை யான் கருதி வரும்பொழுது நின் மேனியொளியே யாண்டும் வீசி இருளைப் போக்குவதாகத் தோன்றுதலானே, இம் மலையடியிலுள்ள நெறி எனக்கொரு காவலாகியே யிருக்குமெனத் தேற்றிக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, ""பண்பிற் பெயர்ப்பினும்"" என்னும் நூற்பாவின்கண் ""ஆற்றிடை யுறுதலும்"" எனவரும் (தொல். கள. 12) விதி கொள்க.

    
குருதி வேட்கை உருகெழு வயமான் 
    
வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கும் 
    
மரம்பயல் சோலை மலியப் பூழியர் 
    
உருவத் துருவின் நாள்மேயல் ஆரும் 
5
மாரி எண்கின் மலைச்சுர நீளிடை 
    
நீநயந்து வருதல் எவனெனப் பலபுலந்து 
    
அழுதனை உறையும் அம்மா அரிவை 
    
பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப் 
    
பூதம் புணர்த்த புதிதியல் பாவை 
10
விரிகதிர் இளவெயில் தோன்றி யன்னநின் 
    
ஆய்நலம் உள்ளி வரினெமக்கு 
    
ஏமம் ஆகும் மலைமுதல் ஆறே. 

    (சொ - ள்.) குருதி வேட்கை உருகெழு வயமான் வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கும் - இரத்தத்தை யுண்ணும் விருப்பத்தொடு அச்சத்தைச் செய்யும் வலிய புலி தன் எதிரே வலிமிக்க பெரிய இளைய களிற்றியானை வருதலை நோக்காநிற்கும்; மரம் பயில் சோலை மலியப் பூழியர் உருவத் துருவின் மாரி நாள் மேயல் ஆரும் எண்கின் - மரங்கள் பொருந்திய சோலை நிரம்பப் பூழியருடைய நல்ல நிறத்தையுடைய யாட்டு மந்தைபோல மாரிக் காலத்து வைகறைப் பொழுதில் மேய்கின்ற கரடிகளையுடைய; மலைச்சுர நீள் இடை நீ நயந்து வருதல் எவன் என - மலைச்சுரத்து நீண்ட நெறியில் நீ என்னை விரும்பி வருதல் என்னை கொல்? என; பல புலந்து அழுதனை உறையும் அம் மா அரிவை - பலவாகப் புலந்துகூறிக் கலுழந்துகொண்டிராநின்ற அழகிய மாமை நிறத்தினையுடைய மடந்தாய்!; பயம் கெழு பலவின் கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிது இயல் பாவை - பயன் மிக்க பலா மரங்களையுடைய கொல்லிமலையினுள் மேல் பாலாக முன்பு தெய்வத்தாலே செய்துவைக்கப்பட்ட புதுவதான நடைகொண்டு இயங்குகின்ற பாவை; விரி கதிர் இளவெயில் தோன்றி அன்ன நின் ஆய்நலம் உள்ளிவரின் - விரிந்த ஞாயிற்றின் இளவெயிலிலே தோன்றி நின்றாலொத்த நினது அழகிய நலத்தைக் கருதி வருங்காலத்து நின்மேனி யொளியே எங்கும் பரவி இருளைப் போக்குவதாகத் தோன்றுதலானே; மலைமுதல் ஆறு எமக்கு ஏமம் ஆகும் - இம்மலையடியிலுள்ள நெறியானது எமக்குக் காவலையுடையதாகும் கண்டாய்; ஆதலின்; நீ அழுதுறைவதை விட்டொழிப்பாயாக!; எ - று.

    (வி - ம்.) வயமான் - புலி. துரு - யாடு. ஆய்நலம் - அழகிய இன்பம். ஏமம் - காவல். இவ்வுவமைபோல ""தாவி னன்பொன்தைஇய பாவை, விண்டவழ் இளவெயிற் கொண்டுநின் றன்ன"" என்றார் (212) அகத்தினும்.

    தனக்குச் சிறந்தாளென்று தான் கருதியிருப்பதனை அவள் அறிந்து கொள்ளுமாற்றான் நின்னையுள்ளிவரின் ஏமமாகுமென்றான்.

    இறைச்சி :- புலி களிற்றைப் பார்க்குஞ் சோலையின்கண்ணே கரடி அஞ்சாது இயங்குமென்றது. அன்னை காவலாயிருக்கும் மனையகத்து யான் அஞ்சாது வரவல்லேனென்றதாம். மெய்ப்பாடு - வீரம். பயன் - தலைமகளை யாற்றுவித்தல்.

    (பெரு - ரை.) மாரி நாள் மேயல் ஆரும் எண்கின் என மாறுக. புதிது இயல் பாவை என்பதற்கு எஞ்ஞான்றும் புதிதாகவே அழகுற்றுத் திகழும் பாவை என்பதுமாம்.

(192)