திணை : பாலை.

     துறை : இது, பிரிவிடையாற்றாளாகிய தலைமகள் சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைவன் பொருள்வயிற்பிரிதலாலே குறித்த பருவத்து வாராமையால் வருந்திய தலைவி வாடையை நோக்கி வாடையே யாம் நினக்குத் தீது கருதகில்லேம்; காதலரைப் பிரிந்து தனியே வருந்துகின்ற எம்மை வருத்தாதே கொள்ளென இரந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை ""அவனறிவு ஆற்ற "" (தொல். கற். 6) என்னும் நூற்பாவின்கண், "" பல்வேறுநிலை"" என்பதனாலமைத்துக் கொள்க.

    
அட்டரக்கு உருவின் வட்டுமுகை ஈங்கை 
    
துய்த்தலைப் புதுமலர்த் துளிதலைக் கலாவ 
    
நிறைநீர்ப் புனிற்றுப் புலந்துழைஇ ஆனாய் 
    
இரும்புறந் தழூஉம் பெருந்தண் வாடை 
5
நினக்குத் தீதறிந் தன்றோ இலமே 
    
பணைத்தோள் எல்வளை ஞெகிழ்த்தஎங் காதலர் 
    
அருஞ்ெ்சயல் பொருட்பிணிப் பிரிந்தன ராக 
    
யாருமில் ஒருசிறை யிருந்து 
    
பேரஞர் உறுவியை வருத்தா தீமே. 

    (சொ - ள்.) அட்ட அரக்கு உருவின் வட்டுமுகை ஈங்கை துய்த்தலைப் புதுமலர்த் துளிதலைக் கலாவ - உருக்கிய அரக்குப் போன்ற சிவந்த வட்டமாகிய முகையையுடைய ஈங்கையினது பஞ்சு போன்ற தலையையுடைய புதிய மலரின் தேன்துளி நின்பாற் கலப்ப; நிறைநீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ - அத் தேன் துளியுடனே புதுவதாக மழை பெய்து நிறைந்த நீர்ததும்பும் புலங்களுட் புகுந்து அவற்றை அளைந்தும்; ஆனாய் - அங்குத் தங்காமல்; இரும் புறம் தழூஉம் பெருந் தண் வாடை - எமது பெரிய அயற்பக்கமெங்கும் சூழ்ந்து வந்து மோதுகின்ற பெரிய குளிர்ச்சியையுடைய வாடையே!; நினக்குத் தீது அறிந்தன்றோ இலம் - யாம் ஒருபொழுதும் எம் நெஞ்சினுள்ளே நினக்குத் தீதாகிய செயலைக் கருதி யறிந்ததுமில்லையே! அங்ஙனமாக; பணைத்தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் அருஞ் செயல் பொருட்பிணிப் பிரிந்தனராக - எம்முடைய பருத்த தோளிலேற்றிய ஒளியையுடைய வளை நெகிழும்படி செய்த எம் காதலர் தாம் ஈட்டுதற்கரிய பொருளீட்டுமாறு உள்ளம் பிணித்தல் காரணமாக அகன்றனராதலினால்; யாரும் இல் ஒருசிறையிருந்து பேர் அஞர் உறுவியை வருத்தாதீம் - உசாவுந்துணை யாருமில்லாது ஒருபுறத்திருந்து பெரிய துன்பமுறுவேமாகிய எம்மை வருத்தாதே கொள்!; எ - று.

     (வி - ம்.) உறுவி: தன்னைப் படர்க்கையாகக் கூறிய இடவழுவமைதி. துளி கலப்பப் புலந்தழீஇய வாடை - இயற்கையாகத் தனக்குரிய தட்பமுமன்றிச் செல்கையானுஞ் செய்துகொண்ட வாடை யென்றவாறு. நினக்குத் தீதறியாதேம் என்றதனால் நட்புடையே மென்றாளாயிற்று. நின்னட்பினேமாகிய எம்மை இங்ஙனம் வருத்துவித்தவர் காதலராதலின் எம் காரியமாக அவரைச் சென்று வருத்திக் கூட்டுவிப்பாயாக என்றாளென்பதூஉமாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) தான் வாடை முதலியவற்றால் வருந்துதல் கண்டு வைத்தும் தூதுபோக்கித் தலைவனை விரைந்தழைத்தற்கு முயலாது தோழியும் வாளாவிருக்கின்றனள் என்று குறிப்பால் அவளைப் பழிப்பாள் ""யாரும் இல் ஒருசிறை இருந்து பேரஞர் உறுவியை"" என்றாள்.

(1")