திணை : குறிஞ்சி.

     துறை : இது, சிறைப்புறமாகச் செறிப்பறிவுறீஇயது.

     (து - ம்.) என்பது, களவொழுக்கத்து வரையாது வந்தொழுகுந் தலைமகன் ஒருகால் மறைந்துவந்து உறைவதனை யறிந்த தோழி தலைவியை இல்வயிற்செறித்தனரென்பதனை அவன் கேட்டு விரைய வரைவொடு வருமாறு தலைவியை நோக்கி நாம் வெற்பனொடு தமியேமாகி விளையாடும்பொழுது தினைக்கதிரை அழிக்காதொழிந்த யானைக்கும் கிளிகட்கும் கைம்மாறு யாது செய்யவல்லாம் இப்பொழுது இல்வயிற்செறித்தமையால் அவை கொள்வனபோலுமென அழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை ""களனும் பொழுதும்........................அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்"" (தொல். கள. 23) என்பதனால் அமைத்துக்கொள்க.

    
அம்ம வாழி தோழி கைம்மாறு 
    
யாதுசெய் வாம்கொல் நாமே கயவாய்க் 
    
கன்றுடை மருங்கிற் பிடிபுணர்ந் தியலும்  
    
வலனுயர் மருப்பின் நிலன்ஈர்த் தடக்கை 
5
அண்ணல் யானைக்கு அன்றியும் கல்மிசைத்  
    
தனிநிலை இதணம் புலம்பப் போகி 
    
மந்தியு மறியா மரம்பயில் ஒருசிறைக் 
    
குன்ற வெற்பனொடு நாம்விளை யாட 
    
விரும்புகவர் கொண்ட ஏனற் 
10
பெருங்குரல் கொள்ளாச் சிறுபசுங் கிளிக்கே.  

    (சொ - ள்.) தோழி வாழி அம்ம - தோழீ! வாழ்வாயாக! யான் கூறுகின்ற இதனைக் கேள்; கல் மிசைத் தனிநிலை இதணம் புலம்பப் போகி - மலைமேலே சமைத்த தனியாக நிலைபெற்ற கட்டுப் பரண் வறிதாம்படி விடுத்துச் சென்று; மந்தியும் அறியா மரம் பயில் ஒருசிறை - மரமேறுந் தொழிலிலே சிறப்புடைய மந்திகளும் ஒன்றோடொன்று செறிந்திருப்பதால் ஏறியறியாத மரங்கள் நெருங்கிய ஓரிடத்திலே; குன்ற வெற்பனொடு நாம் விளையாட - குன்றுகளையுடைய மலைகிழவனுடன் நாம் முயங்கி விளையாட்டயராநிற்கவும்; (விரும்பு கவர் கொண்ட ஏனல் பெருங்குரல் கொள்ளா) - அப்பொழுது மிக விருப்பங்கொண்ட புனத்திலுள்ள தினையின பெரிய கதிர்களைத் தின்றழித்துவிடாத; கய வாய்க் கன்று உடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும் வலன் உயர் மருப்பின் நிலன் ஈர்த் தடக்கை அண்ணல் யானைக்கு - பெரிய வாயையுடைய கன்றினை, மருங்கிலுடைய பிடியானையோடு புணர்ந்து இயங்குகின்ற வலிமை மிக்க மருப்பினையும் நிலத்தின் கண் ஈர்த்தலையுடைய நெடிய துதிக்கையையும் பெருமையையுமுடைய களிற்றியானைக்கு; நாம் யாது கைம்மாறு செய்வாம் - நாம் யாது கைம்மாறு செய்யக்கடவாநிற்போம்?; அன்றியும் விரும்புகவர் கொண்ட ஏனல் பெருங்குரல் கொள்ளாச் சிறுபசுங்கிளிக்கே - அன்றியும் மிக விருப்பங்கொண்ட பெரிய தினைக் கதிரைக்கொண்டு போகாதொழிந்த சிறிய பசிய கிள்ளைக்கு; (நாம் யாது கைம்மாறு செய்வாம்) - யாது கைம்மாறு செய்யக் கடவா நிற்போம்; இப்பொழுது நம்மை இல்வயின் செறித்தலானே அவை புனம் புகுந்து அழிக்கலாயின; எ - று.

     (வி - ம்.) விரும்புகவர்: ஒரு பொருட்பன்மொழி; விரும்புகின்ற விருப்பமுமாம். வலன்-வலிவை. கொள்ளாயானையெனவும் கொள்ளாக் கிளியெனவுங் கூட்டுக. இப்பொழுதென்பது முதற் குறிப்பெச்சம்.

     காவலொழிந்து சென்று அவனொடு நாம் விளையாட்டயர்ந்ததனையும் மறந்து வரையாதொழிந்தனனே யென்றிரங்கியதாம். இப்பொழுது அழிப்பனபோல நாம் காக்குநாளில் அழிவுசெய்திருந்தால் அன்னையும் ஐயன்மாருங் கொள்ளுஞ்சினம் இன்னும் கொடியதாகுமென்பது.

     இறைச்சி:- கன்றை மருங்கிலுடைய பிடியைக் களிறுபுணர்த்தியலுமென்றது, மணம்புரிந்து இல்லறமேற்கொண்டு புதல்வனைப் பயந்து அப்புதல்வன் மருங்காகத் தலைவன் என்னை இடையறவுபடாது முயங்கி இயங்குவானாகவென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - செறிப்பறிவுறுத்து வரைவுகடாதல்.

     (பெரு - ரை.) களிறும் கிளியும் செய்தவுதவி காலத்தாற் செய்தவுதவியும், செய்யாமற் செய்தவுதவியும் பயன் தூக்காது செய்தவுதவியும் ஆகலின் அதற்கு யாம் கைம்மாறு ஆற்றவல்லேமல்லேம் என்பாள் “கைம்மாறு யாது செய்வாம்” என்றாள். இனி ஏதிலவாகிய அஃறிணை யுயிர்களும் உதவி செய்யாநிற்ப உறஉறக் கேண்மை கொண்ட நீ விரைவில் வரைவொடு வந்து எம் பெருமாட்டியை உய்யக்கோடல் வேண்டும் என்பது பொருட்புறத்தே தோன்றிய இறைச்சிப் பொருள் என்க. இவை வற்புறுத்தற்பொருட்டு “அன்புறு தகுந இறைச்சியிற் சுட்டிய” படியாம். ஆசிரியர் பெயர் "மருதைப் பெருமங்கன் இளநாகனார்" என்றும் காணப்படுகின்றது.

(1")
  
 (பாடம்) 1. 
மருதைப்பெருமங்கன் இளநாகனார்.