(து - ம்.) என்பது, அறத்தொடுநின்று வெளிப்பட்டபின்னும் தலைமகன் வரைந்து கொள்ளாது பொருள்வேண்டி நெடுந்தூரஞ் சென்றுறைதலானே ஆற்றாத தலைமகள், திங்களைநோக்கி நீ அறியாவிடமில்லையாதலின் என் காதலர் உறையுமிடம் நினக்குத் தெரிந்திருந்தும் எனக்குக் கூறினாயல்லை, இங்ஙனம் அறிந்திருந்தும் பொய்த்தலின் நின்புலனழிந்து அது சொல்ல இயலாதவாறு ஆவாயெனக் கடிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு “ வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்” (தொல். கள. 21) என்னும் விதி கொள்க.
| பங்குசெறிந் தன்ன பல்கதிர் இடையிடைப் |
| பால்முகந் தன்ன பசுவெண் ணிலவின் |
| மால்பிடர் அறியா நிறையுறு மதியஞ் |
| சால்புஞ் செம்மையும் உடையை ஆதலின் |
5 | நிற்கரந்து உறையும் உலகம் இன்மையின் |
| எற்கரந் துறைவோர் உள்வழி காட்டாய் |
| நற்கவின் இழந்தவென் தோள்போற் சாஅய்ச் |
| சிறுகுபு சிறுகுபு செரீஇ |
| அறிகரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே. |
(சொ - ள்.) பங்கு செறிந்து அன்ன பல் கதிர் இடை இடைப் பால் முகந்து அன்ன பல வெள் நிலவின் - பல கூறுகள் ஒன்றாகச் செறிந்தாற் போன்ற பலவாய கதிர்களின் இடையே இடையே பாலை முகந்து வைத்தாற்போன்ற குளிர்ச்சியையுடைய வெளிய நிலாவினையுடைய: மால் பிடர் அறியா நிறை உறு மதியம் - மேகத்தின் பிடர் மேலே தோன்றிப் பிறரால் அறியப்படாத எல்லாக் கலைகளும் நிறைவுற்ற திங்களே!; சால்பும் செம்மையும் உடையை ஆகலின் - நீதானும் நிறைவும் நேர்மையும் உடையை ஆதலானும்; நின் கரந்து உறையும் உலகம் இன்மையின் - நினக்குத் தெரியாத வணணம் மறைந்து உறையும் உலகமொன்று இன்மையானும்; எற்கரந்து உறைவோர் உள் வழி காட்டாய் - எனக்குத் தோன்றாது மறைந்தொழுகும் எங்காதலர் இருக்கும் இடத்தினைக் காட்டுவாயாக! என்று இரந்து வேண்டினாள், அவள் அங்ஙனம் இரந்து வேண்டியும் திங்கள் விடை கூறிற்று இல்லையாகாலின் அதன்மேல் வெறுப்புற்று மீட்டும் அதனை நோக்கித் திங்களே!; அறி கரி பொய்த்தலின் - நீ அறிந்த அளவு சான்று கூறாது பொய்யை மேற்கோடல் காரணமாக; நல் கவின் இழந்த என் தோள் போல் சா அய் - நல்ல அழகிழந்த என் தோள்போல் வாட்டமுற்று; சிறுகுபு சிறுகுபு செரீஇ - நாடோறும் சிறுகிச் சிறுகிச் குறைந்து நின் விழிப்புலம் மறைபடுதலாலே; அது ஆகுமோ - நீ காட்டுவதுதான் இயலுமோ ? இயலாதன்றே; என்றாள், எ - று.
(வி - ம்.) மால் - மேகம்; இனி மால்பு இடர் எனக்கொண்டு நிலத்தைக் குறிஞ்சியாக்கி எமர் தேனெடுக்கச் சமைத்த கண்ணேணியாலே இடரப்பட்டறியாத திங்களெனவுரைப்பினுமாம்; இதற்கு “வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத், தேனின் இறாலென ஏணி இழைத்திருக்குங், கானக நாடன்” (கலி. 39) என்றதனை நோக்கியும் அறிக. கரந்துறைவோரென்றதனாலே நெட்டிடைக்கழிந்தமை பெறப்பட்டது.எங்குந் தெரிந்திருந்தும் அவருள்வழி எனக்குக் கூறாதிருத்தலின் அறிகரி பொய்த்தனை என்றாள். அங்ஙனம் பொய்த்தல் காரணமாகவன்றே நாளுந் தேய்ந்தொழிவாய் என்றாள். பொய் ஐம்பெரும் பாதகங்களுளொன்றாதலின் அஃது அமுதமுண்டு சாவாதிருப்போரையும் குறைத்துவிடும் என்பது அமுதகலையையுடைய நீ அழிந்தொழியுமதனாலே காணலாகியது என்றவாறு. அறிகரி பொய்த்தார்க்கு யாதும் கைகூடாதென்பது. மெய்ப்பாடு - அழுகை,. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) "பளிங்கு செறிந்தன்ன பல்கதிர்" என்றும் பாடம். இப்பாடமே சிறந்த பாடமுமாம். பளிங்கு செறிந்தமைந்தாற் போன்ற பலவாகிய கதிர் செறிந்து அவற்றிடையிடையே எனப் பொருள் கூறுக.
இனி, இதன் உரையில் உரையாசிரியர் விளக்கவுரையில் கூற வேண்டிய “ என்று இரந்து வேண்டினாள்; அவள் அங்ஙனம் இரந்து வேண்டியுந் திங்கள் விடை கூறிற்றில்லையாகலின் அதன்மேல் வெறுப்புற்று மீட்டும்்அதனை நோக்கித் திங்களே” என்றும், இயலாதன்றே "என்றாள்" என்றும் இச்செய்யுளைத் தலைவி கூற்றாகவே கூறாமலும் தங்கூற்றேயாகக் கூறாமலும் முறைபிறழ்ந்து கூறியிருத்தல் உணர்க. இவற்றை விளக்கவுரைகளாகவே பிரித்துணர்ந்து கொள்க.
இனிச் இச்செய்யுள் உரையும் பொருந்தியதாகக் காணப்படவில்லை, எனவே இச்செய்யுட்கு.
"பலவாகிய கதிர்களையும் இடையிடையே பால்முகந்தன்ன பசு வெண்ணிலவினையும் உடையச் செல்வச் செருக்குடைமையால் மயங்கி எம்மனோர் இடர் அறியா நிறையுறு மதியமே நீதானும் சால்பும் செம்மையும் உடையை ஆதலின் நினக்கிந்தப் பொச்சாப்பு ஆகுமோ? ஆகாதன்றே! அஃதுண்மையின் எற் கரந்துறைவோர் உள்வழி காட்டாய்; ஆதலின் நீ அறிகரி பொய்த்தாய்; அங்ஙனம் பொய்த்தலின் நீ என் தோள்போல் நாடோறும் சிறுகுபு சிறுகுபு வானத்தினூடே செரித்தொழியக்கடவாய்!" என்று பொருள் கூறிக்கொள்க. இப்பொருட்கு, மால்பு இடர் அறியா எனக் கண்ணழித்துக் கொள்க, மால்பு - மயங்கி. செரீஇ; வியங்கோள். செரித்தல் - சீரணித்தழிதல். அது என்றது அப்பொச்சாப்பு என்றவாறு. அஃதாவது செல்வச் செருக்கால் கடமை மறந்துவிடல். திங்கட்குச் செல்வம் கதிர் உடைமையும் ஒளியுடைமையும் ஆமென்க.
(196)