(து - ம்.) என்பது, வரைந்துகோடல் காரணமாகச் சென்ற தலைமகன் வாராது தாழ்ப்ப அதனால் ஆற்றாளாய தலைமகளைத் தோழி நோக்கி " நீ இறக்க ஏதவாயிற்றேயென்று வருந்தாதேகொள்; காதலர் நாட்டிலே மேகங்கள் செல்லாநிற்கும்; அம்முகிலை அவர் நோக்கியவுடன் விரைந்து வருகுவர்" எனத் தேற்றிக்கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, “ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட” (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| தோளே தொடிநெகிழ்ந் தனவே நுதலே |
| பீர்இவர் மலரிற் பசப்பூர்ந் தன்றே |
| கண்ணுந் தண்பனி வைகின அன்னோ |
| தெளிந்தன மன்ற தேயர்என் உயிரென |
5 | ஆழல் வாழி தோழி நீநின் |
| தாழ்ந்தொலி கதுப்பின் வீழ்ந்த காலொடு |
| வண்டுபடு புதுமலர் ஒண்துறைத் தரீஇய |
| பெருமட மகளிர் முன்கைச் சிறுகோல் |
| பொலந்தொடி போல மின்னிக் கணங்கொள் |
10 | இன்னிசை முரசின் இரங்கி மன்னர் |
| எயிலூர் பல்தோல் போலச் |
| செல்மழை தவழுமவர் நன்மலை நாட்டே. |
(சொ - ள்.) தோழி தோள் தொடி நெகிழ்ந்தன நுதலே இவர் பீர் மலரின் பசப்பு ஊர்ந்தன்று - தோழீ! தோள்கள் வளைகள் நெகிழ்ந்தன நெற்றி படர்ந்த பீர்க்க மலர் போலப் பசலை பரந்தது; கண்ணும் தண் பனி வைகின - கண்களும் தண்ணிய நீர் பெருகின; அன்னோ மன்ற என் உயிர் தேயர் எனத் தெளிந்தனம் - இவை இங்ஙனமாதல் திண்ணமாக எம் உயிர் இறந்தொழிதற் பொருட்டே என்பதனை யாம் நன்றாகத் தெளிந்துகொண்டோம் என்று; ஆழல் நீ வாழி - அழாதே கொள்! இவ்விடரொழிந்து நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; நின் தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு - நினது தாழந்து தழைந்த கூந்தல் போல இறங்கிய காலுடனே; வண்டு படு புது மலர் ஒள் துறைத் தரீஇய - வண்டுகள் பொருந்திய புதிய மலர்களை ஒள்ளிய நீர்த்துறையின்கண்ணே கொய்து கொணர்ந்த; பெருமட மகளிர் முன்கைச் சிறுகோல் பொலந்தொடி போல மின்னி - பெரிய மடப்பத்தையுடைய மகளிரின் முன்கையிலணிந்த சிறிய கோற்றொழிலமைந்த பொன்னாலாகிய தொடிபோல மின்னி; கணம் கொள் இன் இசை முரசின் இரங்கி - கூட்டங்கொண்ட இனிய ஒலியையுடைய முரசுபோல முழங்கி; மன்னர் எயில் ஊர் பல் தோல் போலச் செல் மழை - அரசர்களுடைய அரணாகிய மதில்மேலே பகைவருடைய படைசென்று பாயாதவாறு ஓம்பாநின்ற பலவாகிய கிடுகுபோல விசும்பிலே செல்லும் மேகம்; அவர் நல் மலை நாட்டுத் தவழும் - அவரது நல்ல மலை நாட்டின் கண்ணே தவழாநிற்கும்; அம்மழை நின் கூந்தல் போலிருத்தலானே அதனைக் காண்டலும் நின்னைக் கருதி இன்னே வருகுவர் காண்; எ - று.
(வி - ம்.) வீழ்ந்தகால், காலிறங்குதல்; அஃதாவது மழைபெய்ய இறங்கும் நீர்வீழ்ச்சி. தோள்கொடி நெகிழ்தனவென்றது, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேலேற்றிக் கூறப்பட்டது, கதுப்பு - கூந்தல். தோல் - கடுகு; கடுகு, கேடயம் எனவும் வழங்கப்படுவது. தேயர் - தேயும் பொருட்டு.
போர்முகத்துப் பயின்றவராதலின், அவரை மழை பகைபோல முற்றுதல் நோக்கி அது நின்னையும் வருத்துமன்றோவெனக் கருதி இன்னே வருவர் என்னுங் குறிப்பால் மழையைக் கிடுகுபோலவென உவமித்தாள். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.
(பெரு - ரை.) "தோளே....................................அன்னோ;" என்னுந் துணையும் தோழி தலைவியின் கூற்றைக்கொண்டு கூறினாள். இனி இச் செய்யுளைக் கற்புக்காலத்தே தலைவன் கார்காலத் தொடக்கத்தே வருகுவல் என்று சென்றானாகத் தலைவி வந்திலன் என வருந்துவாட்குத் தோழி கார்ப்பருவ வரவு காட்டி இன்னே வருகுவர் அழாதேகொள்! என்று ஆற்றுவித்ததாகக் கொள்ளினும் இழுக்கின்று. மன்னர் எயில் ஊர் பல்தோல் போல என்பதற்கு மன்னர் பகைவருடைய மதில் வளைத்தற்குச் செலுத்தும் பலவாகிய யானைகளைப்போல எனக் கோடலுமாம்.
(197)