(து - ம்.) என்பது, தலைவன் பிரிதலானே வருந்திய தலைவியை நோக்கி நீ வருந்தாது வலிதிலே பொறுத்திருவென்ற தோழிக்கு நீ என்னைப் பொறுத்திரு என்கின்றனையே; துறைவனுடைய முயக்கம் எய்தாதவிடத்துக் குருகின் ஒலிக்கு உடைந்தும் இன்னும் உளனாயிராநின்றேனே; என்னுயிர் எவ்வளவு வன்மையுடையதென அழிந்து கூறா நிற்பது.
(இ - ம்.) இதனை, “ கொடுமை ஒழுக்கம்..........................ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்” (தொல். கற். 6) என்னும் விதியினால் அமைத்துக் கொள்க.
| ஓங்குமணல் உடுத்த நெடுமாப் பெண்ணை |
| வீங்குமடற் குடம்பைப் பைதல்வெண் குருகு |
| நள்ளென் யாமத்து உயவுதோ றுருகி |
| அள்ளல் அன்னஎன் உள்ளமொடு உள்ளுடைந்து |
5 | உளனே வாழி தோழி வளைநீர்க் |
| கடுஞ்சுறா எறிந்த கொடுந்திமில் பரதவர் |
| வாங்குவிசைத் தூண்டில் ஊங்கூங் காகி |
| வளிபொரக் கற்றை தாஅய் நளிசுடர் |
| நீல்நிற விசும்பின் மீனொடு புரையப் |
10 | பைபய இமைக்குந் துறைவன் |
| மெய்தோய் முயக்கங் காணா ஊங்கே. |
(சொ - ள்.) தோழி வாழி வளை நீர்க் கடுஞ் சுறா எறிந்த கொடுந்திமில் பரதவர் - தோழீ! வாழி! சூழ்ந்த கடனீரில் விரைந்து செல்லும் சுறாமீனைப் பிடிக்க வலை வீசி எறிந்த வளைந்த மீன் பிடிக்கும் படகினையுடைய பரதவர்; வாங்கு விசைத் தூண்டில் ஊங்கு ஊங்கு ஆகி வளி பொர - இழுக்கும் விசையையுடைய தூண்டிலின் இடையிடையே அமைந்து காற்று மோதுதலானே; கற்றை தாஅய் நளிசுடர் நீல் நிற விசும்பின் மீனொடு புரைய - எரிகின்ற கற்றை சாய்ந்து பரவிய நெருங்கிய விளக்கின் ஒளி நீல நிறத்தையுடைய ஆகாயத்தின்கண்ணே ஒளிரும் மீன்களைப் போல; பைபய இமைக்கும் துறைவன் - சிறுகி மெல்ல மெல்ல ஒளி வீசாநிற்கும் துறையையுடைய தலைவனது; மெய்தோய் முயக்கம் காணா ஊங்கு - உடம்பை அணைந்து முயங்கும் முயக்கத்தை யான் அடையப் பெறாத விடத்து; ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை - உயர்ந்த மணல் மிக்க திடர் சூழ்ந்த நீண்ட கரிய பனையினது; வீங்கு மடல் குடம்பைப்பைதல் வெள் குருகு - நெருங்கிய மடலிற் கட்டிய குடம்பையின் கண்ணே யிருக்கின்ற பிரிவுற்று வருந்துதலையுடைய வெளிய நாரை ; நள் என் யாமத்து உயவு தோறு உருகி - இரவு நடுயாமத்தே நரலுந்தோறும் உருகி ; அள்ளல் அன்ன என் உள்ள மொடு உள் உடைந்து உளன் - அள்ளலாகிய குழம்பு போன்ற என்னுள்ளத்தொடு என் மனமும் உடைந்து இன்னும் உயிர் உடையேனாயிரா நின்றேன்; என் உயிர்தான் எவ்வளவு வன்ைமையுடையது காண் ! எ - று.
(வி - ம்.) பைதல் - வருத்தம். அள்ளல் - அள்ளுந் தன்மையதாகிய சேற்றின் குழம்பு, உள்ளுடைந்துளனேயென்றது துன்பத்துப் புலம்பல்.
உள்ளுறை:- காற்றால் வீசப்பட்டும் அவியாது ஒளிமழுங்கித் தோன்றும் விளக்கையுடைய துறையென்றது, அவாமிகுதியால் என் நலம் பசலையால் உணப்பட்டு மழுக்கமடைந்தும் அவர் வருவரென்னும் கருத்தால் இன்னும் உயிருடையேனா யிராநின்றேன் என்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு- ரை.) விண்மீன் போன்று ஒளிர்வன பரதவர் திமிலின்கண் ஏற்றப்பட்ட விளக்குகளாம். எனவே வளைநீர்க் கடுஞ்சுறா எறிந்த பரதவர் கொடுந்திமில் வளிபொர ஊங்கு ஊங்கு ஆகி (அவற்றின்கண் ஏற்றிய விளக்குகளின்) கற்றை தாஅய் விசும்பின் மீனொடு புரைய இமைக்கும் என இயைத்துப் பொருள் கூறுக. பரதவர் திமிலின்கண் விளக்கிடுதலையும் அவை மீன் போன்று தோன்றுதலையும்,
| “முந்நீர் நாப்பண் திமிற்சுடர் போலச் |
| செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்” |
எனவரும் புறநானுற்றானும் (60) உணர்க.
(199)