(து - ம்.) என்பது தலைவனும் தலைவியும் ஒருப்பட்டெழுந்து சுரத்திடைச் செல்லக் கண்டோர் இக் கொடுஞ்சுரத்தில் இம் மெல்லியலாளைக் கொண்டு செல்லும் இவ்விளையோனுள்ளம், இடியினுங் காட்டிற் கொடிதெனக் கவன்று கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, ”சேய்நிலைக் ககன்றோர் செலவினும் வரவினும் கண்டோர் மொழிதல் கண்டதென்ப” (தொல், அகத், 40) என்னும் விதிபற்றிச் செலவின்கட் கூறியதென்க.
| அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத் |
| தொலிவல் ஈந்தின் உலவை யங்காட் |
| டாறுசெல் மாக்கள் சென்னி யெறிந்த |
| செம்மறுத் தலைய நெய்த்தோர் வாய 1 |
5 | வல்லியம் பெருந்தலைக் குருளை மாலை |
| மரல்நோக்கும் இண்டிவர் ஈங்கைய சுரனே |
| வையெயிற் றையள2 மடந்தை முன்னுற்று |
| எல்லிடை நீங்கும் இளையோ னுள்ளங் |
| காலொடு பட்ட மாரி |
| மால்வரை மிளிர்க்கும் உருமினுங் கொடிதே. |
(சொ - ள்.) சுரன் அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத்து - சுரமோ, ஆழ்ந்துபடக் கிடந்த பெரிய குளிர்ச்சியையுடைய குன்றத்து; ஒலி வல் ஈந்தின் உலவையங்காட்டு-தழைத்த வலிய ஈத்த மரங்களையுடைய காற்றுச் சுழன்று வீசும் காட்டின் கண்ணே; ஆறுசெல் மாக்கள் சென்னி எறிந்த செம்மறுத் தலைய-நெறிகொண்டு செல்லும் மக்களுடைய தலையை மோதியதனாலே குருதி படிந்த சிவந்த மாறுபட்ட தலையையுடையனவும்; நெய்த்தோர் வாய பெருந்தலை வல்லியம் குருளை-இரத்தம் பூசிய வாயையுடையனவுமாகிய பெரிய தலையையுடைய புலிக்குட்டிகள்; மாலைமரல் நோக்கும் இண்டு இவர் ஈங்கைய - இம் மாலைப் பொழுதில் தாம் பதுங்கியிருக்கும் மரலின் தூஊகளை நிமிர்ந்து நோக்கா நிற்கும் இண்டங் கொடியுடனே ஒருசேரப் படர்கின்ற ஈங்கையையுடையவாகும், இத்தகைய சுரத்தின்கண்ணே; வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று - கூரிய பற்களையுடைய மெல்லியளாகிய மடந்தையை முன்னே செல்லவிடுத்துப் பின்னே; எல்லிடை நீங்கும் இளையோனுள்ளம்-இவ்விராப் பொழுதிற் செல்லா நிற்கும். இவ்விளைஞனுள்ளமானது; காலொடுபட்ட மாரி மால்வரை மிளிர்க்கும்; உருமினும் கொடிது-காற்றொடு கலந்த மழை பெய்யுங் காலத்திற் பெரிய துறுகற்களைப் புரண்டு விழுமாறு மோதுகின்ற இடியினுங்காட்டிற் கொடியதா யிராநின்றது; எ-று,
(வி - ம்.) ஒலிதல்-தழைத்தல். உலவை-காற்று. நெய்த்தோர்-இரத்தம். வல்லியம் - புலி. இவர்தல் - படர்ந்தேறுதல். வை-கூர்மை. எல் - இராத்திரி. மிளிர்க்குதல்-புரட்டுதல். ஐயள் - மெல்லியள். உற்று என்பதை உற எனத் திரிக்க. அழுந்துபடல்; (தொல்,சொல்-403) “அந்நாற்சொல்லும்” என்பதன்கட் கிடந்த "நாட்டல் வலிய" என்பதனால் குறுக்கல் விரித்தலாகிய இருவகை விகாரமுங் கொள்க.
நடத்தலாற்றாளென்பார் ஐயளென்றார். மடந்தையை முன்னே நடத்தித் தான் பின்னே செல்லுதல்; அவளது முதுகினழகையும் இளைத்த நடையையும் காணுதற்பொருட்டு, மாதர்க்குக் காலணியாகிய சிலம்பு வதுவைக் காலத்துக் கழற்றுதல் மரபு; அங்ஙனமாக இவள் சிலம்பணிந்தபடி ஓராடவனுடன் செல்லக் காண்டலாற் களவினிற் கொண்டு தலைக்கழியப் பெறுவளாமென்று ஏனையோரயிர்த்துக் கூறியதாயிற்று; “சிலம்புஞ் சிறுநுதலும்” “வில்லோன் காலன கழலே தொடியோள், மெல்லடி மேலவுஞ் சிலம்பே” எனவுஞ் சான்றோர் கூறுமாற்றான் அறிக. மெய்ப்பாடு-அழுகை. பயன்-தம்மிற் கூறியாறுதல். இதனைக் கண்டோர் கூற்றுக்கு மேற்கோளாக்கினார் நச்சினார்க்கினியர்; (தொ,பொ-சூ.40, உரை)
(பெரு, ரை.) மான் நோக்கிண்டிவர் என்றும் பாடம். இப்பாடமே சிறப்புடையதாகும். இதற்கு, குருளை மாலைப் பொழுதிலே தமக்கிரையாக மான்களை ஆராய்கின்ற எனப் பொருள் கூறுக.
குடிப்பிறப்புடையாளை மயக்கி அவள் சுற்றத்தினின்றும் பெயர்த்து அழைத்தேகுகின்றான் என்னும் இறைச்சிப் பொருள் தோன்றக் காலொடுபட்ட மாரி மால்வரை மிளிர்க்கும் உரும் என்றார் என்க.
(2)
(பாடம்) 1. | நெய்த்தோர் வல்லியம்; 2. | ஐயள் மாயள், மாயள் - கரிய மேனியள். | |