திணை : மருதம்.

     துறை : இது, தோழி தலைமகளது குறிப்பறிந்து வாயிலாகப்புக்க பாணன் கேட்பக் குயவனைக் கூவி இங்ஙனஞ் சொல்லாயோ என்று குயவர்க்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனால் விடப்பட்ட பாணன் வாயிலாகப் புகுதலும் தலைவி வெகுளுவதனை யறிந்த தோழி வாயில் மறுக்கின்றாள்; அவ்வழித் திருவிழா நடப்பதனை ஊரார்க்குத் தெரிவிக்குமாறு போந்த குயவனை நோக்கி நீ நின் விழா வயர்ச்சி கூறுவதுடனே "மகளிர்களே ! இப் பாணன் கூறும் பொய்ம் மொழியை மெய்யெனக் கொண்டு பின்பு வருந்தாதிர்" என்று இதனையுஞ் சொல்லிப் போவாயாகவென வெகுண்டு கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, “பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்” (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.

    
கண்ணி கட்டிய கதிர அன்ன 
    
ஒண்குரல் நொச்சித் தெரியல் சூடி 
    
யாறுகிடந் தன்ன அகனெடுந் தெருவில் 
    
சாறென நுவலும் முதுவாய்க் குயவ 
5
இதுவும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ 
    
ஆம்பல் அமன்ற தீம்பெரும் பழனத்துப் 
    
பொய்கை ஊர்க்குப் போவோய் ஆகிக் 
    
கைகவர் நரம்பிற் பனுவற் பாணன் 
    
செய்த அல்லல் பல்குவ வையெயிற்று 
10
ஐதகல் அல்குல் மகளிர்இவன் 
    
பொய்பொதி கொடுஞ்சொல் ஓம்புமின் எனவே.  

    (சொ - ள்.) கண்ணி கட்டிய கதிர அன்ன ஒள் குரல் நொச்சித் தெரியல் சூடி - அரும்பு கட்டிய கதிர் போன்ற ஒள்ளிய பூங்கொத்தினையுடைய நொச்சி மாலையைச் சூடி; யாறு கிடந்து அன்ன அகல் நெடுந்தெருவில் சாறு என நுவலும் - யாறு கிடந்தாற் போன்ற அகன்ற நெடிய தெருவின்கண்ணே யாவரும் அறிய இற்றை நாளால் இவ்வூரிலே திருவிழா நடவா நின்றது, எல்லீரும் போந்து காணுங்கோள் என்று கூறிச் செல்லுகின்ற; முது வாய் குயவ - அறிவு வாய்ந்த குயவனே!; ஆம்பல் அமன்ற தீம்பெரும் பழனத்துப் பொய்கை ஊர்க்குப் போவோய் ஆகி - ஆம்பல் நெருங்கிய இனிய பெரிய வயலும் பொய்கையுமுடைய ஊரின்கண்ணே நீ செல்வாயாகி; வை எயிற்று ஐது அகல் அல்குல் மகளிர் - ஆங்குள்ள மகளிரை யழைத்துக் கூரிய எயிற்றினையும் மெல்லிதாயகன்ற அல்குலையுமுடைய மங்கைமீர்!; கை கவர் நரம்பின் பனுவல் பாணன் செய்த அல்லல் பல்குவ - கை விரும்புதற்குக் காரணமான நரம்பினையுடைய யாழிலே பாடும் இசைப்பாட்டு நுவலவல்ல பாணன் செய்த துன்பங்கள் மிகப் பலவாகி வளர்வன வாயின ஆதலின்; இவன் பொய் பொதி கொடுஞ்சொல் ஓம்புமின் எனவே - இப் பாணன் உள்ளால் பொய்யை நிரப்பிவைத்து மேலால் மெயம்மையைக் கொண்டு மூடி நுவலுகின்ற கொடிய சொல்லிலே கண்ணருள் செய்யாது நும்மைப் பாதுகாத்துக் கொள்ளுங்கோள்!; இதுவும் ஆங்கண் நுவன்றிசின் - என்று முதலில் நீ திருவிழா நடப்பதை நுவன்று கொண்டு போவதுடன் இதனையும் கூட்டி அவ்விடத்துள்ளார்க்குக் கூறிப் போவாயாக! எ - று.

     (வி - ம்.) கண்ணிகட்டல் - அரும்புதோன்றுதல். கதிர, அ: சாரியை, சாறு - திருவிழா. அவ்வூரில் நடக்குந் திருவிழாவை ஊர்ப் பொதுநிலத்திருக்குங் குயவனே! ஆங்குள்ள வீடுதோறுஞ்சென்று கூறிப்போவது அவ்வூர் வழக்குப்போலும்.

     இசையால் யாரையும் மயக்கவல்லனாதலின் அதுகொண்டு மயங்காதீரென்பாள் அவ்விசை வன்மையை முதலிற்கூறினாள். அல்லல் ஒரு காலத்தோடொழிவதன்றென அறிவுறுத்துமாறு தலைவிக்குச் செய்த அல்லல் மிகப் பல்குவவெனக் கூறுதியென்றாள். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயில் மறுத்தல்.

     (பெரு - ரை.) ஈதும் ஆங்கண் என்றும் பாடம். அமலுதல் - நெருங்குதல். பொய்பொதி கொடுஞ்சொல் என்னும் தொடராக்கத்தின் இன்பமுணர்க. திருவிழாவைக் குயவர்கள் ஊரார்க்கு அறிவுறுத்துவதும்; அப்பொழுது அவர் நொச்சிமாலை சூடிச்செல்வர் என்பதும் அக்கால வழக்கம் ஆதலை இதனால் உணரலாம்.

(200)