201. பரணர்
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, கழறிய பாங்கற்குத் தலைமகன் உரைத்தது.

     (து - ம்.) என்பது, பாங்கற்கூட்டத்துக்கண் மறுத்துக்கூறிய பாங்கனைத் தலைமகன் நோக்கிக் குறவன்மகள் கடிய காவலினாலே பெறுதற்கரியளாதலின், நீ அவளைக் கருதுதல் கூடாதென்றோய், எவ்வழியானும் கொல்லியம்பாவை அழியாது வைகுமியல்புபோல என்னெஞ்சினின்று நீங்குவாளல்லளாதலின் யான் யாதுசெய்யவல்லேனென அழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, “நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும,்” (தொல். கள. 11) என்னும் விதிகொள்க.

    
மலையுறை குறவன் காதல் மடமகள் 
    
பெறலருங் குரையள் அருங்கடிக் காப்பினள் 
    
சொல்லெதிர் கொள்ளாள் இனையள் அனையோள் 
    
உள்ளல் கூடா தென்றோய் மற்றுஞ் 
5
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித்  
    
தெய்வங் காக்குந் தீதுதீர் நெடுங்கோட்டு 
    
அவ்வெள் அருவிக் குடவரை அகத்துக் 
    
கால்பொருது இடிப்பினுங் கதழுறை கடுகினும் 
    
உருமுடன்று எறியினும் ஊறுபல தோன்றினும் 
10
பெருநிலங் கிளரினுந் திருநல உருவின் 
    
மாயா வியற்கைப் பாவையிற் 
    
போதல் ஒல்லாளென் நெஞ்சத் தானே. 

    (சொ - ள்.) மலை உறை குறவன் காதல் மடமகள் அருங்கடிக் காப்பினள் - மலையின்கண்ணே உறைகின்ற குறவனின் காதலையுடைய இளமகள் அரிய காவலையுடையவள்; பெறல் அருங்குரையள் - அதனால் நின்னாலே பெறுதற்கரியள் கண்டாய்; சொல் எதிர் கொள்ளாள் - நீ கூறிய மொழிகளை ஏற்றுக் கொள்ளும் இயல்புடையள் அல்லள்; இனையள் அனையோள் உள்ளல் கூடா தென்றோய் - அவள் இத்தன்மையளாதலின் அவளை நினைத்தலும் கூடாது என்ற நண்பனே!; செவ்வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித் தெய்வம் காக்கும் - சிவந்த வேரையுடைய பலா மரங்களின் பழங்கள் பொருந்திய தெய்வத்தாலே பாதுகாக்கப்பட்டு வருகின்ற; தீதுதீர் நெடுங் கோட்டு அவ் வெள் அருவிக் குடவரை அகத்து - தீது தீர்ந்த நெடிய கொடு முடியையும் அழகிய வெளிய அருவியையுமுடைய கொல்லி மலைச் சாரலிலே; கால் பொருது இடிப்பினும் உறை கதழ் கடுகினும் உரும் உடன்று எறியினும் - காற்று மோதி யடித்தாலும் வலிய மழை விரைந்து வீசினாலும் சினங்கொண்டு இடிமுழங்கி மோதினாலும்; ஊறு பல தோன்றினும் பெருநிலம் கிளரினும் - இவையேயன்றி வேறுபல ஊறுபாடுகள் தோன்றினாலும் பெரிய இவ்வுலகமே சினங்கொண்டு எதிர்த்தாலும்; திரு நல உருவின்மாயா இயற்கைப் பாவையின் - தன் அழகிய நல்ல வடிவம் கெடாத இயல்பினையுடைய பாவைபோல; என் நெஞ்சத்தான் போதல் ஒல்லாள் - என்னெஞ்சினின்றும் நீங்கி ஒழிபவள் அல்லளாயிராநின்றாள்; ஆதலின் அவளை யான் எவ்வாறு மறந்துய்வேன்? எ - று.

     (வி - ம்.) பலவின்வேர்ப் பயங்கெழுகொல்லி எனமாற்றி, பலா வேரிலே காய்த்துப் பழுக்கின்ற பழம்பொருந்திய கொல்லியெனவுமாம். கிளர்தல் - சினங்கொள்ளுதல். குரை: அசைநிலையிடைச் சொல்.

     நின்பால் அன்புடையளாயினும் காவலினுள்ளாளாதலிற் பெறுதலும் அரியள்; சொல்லுமேற்று விடையளிப்பாளல்லள் என்றானாம். கூடாதென்றதன்காறும் பாங்கன் கூற்றைக்கொண்டு கூறியது. போதலொல்லாள் எனவே எத்திறத்தானும் கூடினாலன்றி உய்கலேனென்றதாயிற்று. தெய்வங் காத்தலானே எத்தகைய ஊறுமில்லாத பாவை போல ஊழ்வினை கூட்டி முடித்தலானே எவ்வண்ணங் கூறினும் நின் கூற்றுப் பயன் படாதெனக் குறிப்பித்தானுமாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - பாங்கனை யுடம்படுவித்தல்.

     (பெரு - ரை.) "சொல்லெதிர் கொள்ளாள் இளையள்" என்றும் பாடம்; இப்பாடமே சிறந்ததாம். மலையுறை.........................கூடாது என்னுமளவும் பாங்கன் கூற்றைத் தலைவன் கொண்டு கூறினன். பெருநிலங் கிளரினும் என்பதற்கு இந்தப் பெரிய நிலம் நடுங்கினும் - அஃதாவது பூகம்பமுண்டாயினும் எனப் பொருள்கோடலே நேரிதாம். பாவை தன்னிலை மாறாமைக்கே இது கூறப்பட்டதாகலின் பாவையை உலகத்துள்ளார் சினங்கொண்டெதிர்ப்பர் என்பது பொருந்தாமையும் உணர்க.

     நான் அவளை எவ்வுபாயத்தான் என்னெஞ்சினும் அகற்ற முயலினும் அவள் அகல்கின்றிலள் எனற்கே சூறைக்காற்றும் பிறவுமாகிய எவற்றானும் தன்னுருக் கெடாத கொல்லிப்பாவையை உவமை எடுத்தான். இன்னும் கொல்லிப்பாவை தெய்வங் காத்தலின் ஊறு படாது நிலைபெறுதல் போல இவளும் தெய்வத்தான் (ஊழால்) என்னெஞ்சிலே நிலைபெறுத்தப்பட்டனள் என்பது தோன்றவே தெய்வங்காக்கும் திருநல உருவின் மாயாப் பாவை என்று உவமைக்கு அடை கூட்டிய நுணுக்கமும் உணர்க. இச்செய்யுளின் கண் இயற்கையின் சீற்றமாகிய கால் பொருது இடித்தல் முதலியவற்றை அழகுற அமைத்திருத்தலுணர்க.

(201)