(து - ம்.) என்பது, தலைவியை இருளிலே கொண்டு தலைக்கழிந்து சுரநெறியே செல்லுந் தலைமகன் அவளை "மடந்தாய்! நுந்தையினது காடு இதனை நீ பாராய்" என அவளது அயாவொழிந்தகலுமாறு கூறி மகிழ்வித்துக்கொண்டு செல்லாநிற்பது.
(இ - ம்.) இதனை, “ ஒன்றாத்தமரினும்” .................. ”கற்பொடு புணர்ந்த கௌவை யுளப்பட, அப்பாற் பட்ட வொருதிறத்தானும்” (தொல். அகத். 41) என்பதனால் அமைத்துக் கொள்க.
| புலிபொரச் சிவந்த புலாவஞ் செங்கோட்டு |
| ஒலிபன் முத்தம் ஆர்ப்ப வலிசிறந்து |
| வன்சுவல் பராரை முருக்கிக் கன்றொடு |
| மடப்பிடி தழீஇய தடக்கை வேழம் |
5 | தேன்செய் பெருங்கிளை இரிய வேங்கைப் |
| பொன்புரை கவழம் புறந்தருபு ஊட்டும் |
| மாமலை விடரகங் கவைஇக் காண்வரக் |
| கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை |
| அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கள் |
10 | செல்சுடர் நெடுங்கொடி போலப் |
| பல்பூங் கோங்கம் அணிந்த காடே. |
(சொ - ள்.) குறுமகள் வாழி - இளமடந்தையே! நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; புலி பொரச் சிவந்த புலாவு அம் செங்கோட்டு ஒலி பல் முத்தம் ஆர்ப்ப - புலியொடு போர் செய்தலாலே இரத்தந் தோய்ந்து சிவந்த புலவு நாற்றத்தையுடைய செவ்விய மருப்பின் அடியிலே தழைத்த பலவாய முத்துகள் ஒலியாநிற்ப; வலிசிறந்து வல் சுவல் (வேங்கை) பராரை முருக்கி - வலிமிக்கு வலிய மேட்டு நிலத்தின்கணுள்ள வேங்கை மரத்தின் பருத்த அடியை முறித்து; கன்றொடு மடப்பிடி தழீஇய தடக்கை வேழம் - தன் கன்றுடனே இளம்பிடியை அணைத்த நீண்ட கையையுடைய களிற்றியானை; தேன் செய் பெருங் கிளை இரிய வேங்கைப் பொன் புரை கவழம் புறந்தருபு ஊட்டும் - தேனைத் தொகுக்கின்ற ஈக்களெல்லாம் ஓடுமாறு அவ் வேங்கையின் பொன் போன்ற பூங்கொத்தாலாகிய உணவைப் பாதுகாத்து நின்று ஊட்டா நிற்கும்; மா மலை விடர் அகம் கவைஇக் காண் வர - கரிய மலைப் பிளப்பிடங்களைச் சூழ்ந்து அழகுமிக; அறுமீன் பயந்த அறம் செய் திங்கள் செல் சுடர் நெடுங்கொடி போல - கார்த்திகை நாளின் பெயராலே பெற்ற அறஞ் செய்தற்குரிய திங்களின் எடுக்கப்பட்ட விசும்பிலே செல்லுகின்ற ஒளியையுடைய நீண்ட விளக்கங்களின் வரிசைபோல; பல் பூங் கோங்கம் அணிந்த நுந்தை காடு கண்டிசின் - பல பூக்கள் நிரம்பிய கோங்கங்கள் அழகு செய்யப்பட்ட நின் தந்தைக்குரிய இக் காட்டினை நீ காண்பாயாக! எ - று.
(வி - ம்.) சுவல் - மேட்டுநிலம். கவழம் - வாய்நிரம்பிய உணவு; கவளமென்பர். அறுமீன் - கார்த்திகைநாள். அஃது உவாமதியோடு சேர்கின்ற திங்களைக் கார்த்திகைத் திங்களென்ப. அத் திங்களில் நீராடி விளக்கேற்றி வைத்துப் பார்ப்பார்க்களித்தல் அறமெனப்படுதலின், அறஞ்செய்திங்களென்றார். சுடர் - விளக்கு. கொடி - விளக்கின் வரிசை.
இளமையளாதலின் வருந்தாதேகுமாறு அவள் தந்தை காட்டினைக் காட்டி மகிழ்வித்து மெல்லக்கொண்டேகுகின்றானாம்; அன்றித் தன் அஞ்சாமையைத் தெரிவிப்பான் தந்தை காட்டினை நீ காண் என அதன் கண் மகிழ்ந்து செல்லுதலானே குறிப்பித்ததூஉமாம்; அதனாலே தமர் வந்து தகைப்பின் ஆற்றவல்லேன் என்பதாயிற்று.
இறைச்சி:- கன்றோடு பிடியைத் தழுவிய வேழம் கவளமூட்டுங் காடு என்றது, காதலியோடு இல்லறம் நிகழ்த்தி அவளிடத்துப் பிறந்த மக்களுடனே அவளையும் பாதுகாத்துக் கொள்வேனெனக் காதலன் குறிப்பித்தாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - தலைமகளை அயாவகற்றல்.
(பெரு - ரை.) வேங்கை என்பதனைப் பராரைக்குமுன்னும் கூட்டுக. தேன் செய் பெருங்கிளை என்றது தேனீக்களின் கூட்டத்தினை. பொன்புரை கவழம் என்றது பொன்போன்ற வேங்கைப் பூவாகிய உணவு என்றவாறு.
கார்த்திகைத் திங்களிலே மலையின்மிசை விளக்கேற்ற அறஞ் செய்யும் வழக்கம் பண்டுமிருந்தமையை இதனால் உணர்க.
(202)