திணை : குறிஞ்சி.

     துறை : இது, பின்னின்ற தலைமகன் ஆற்றனாய்த் தோழிகேட்பத் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, இயற்கைப் புணர்ச்சியின்பின் தலைவியுற்ற வேறுபாட்டையும், பின்பு தலைமகன் கையுறையேந்திவந்து இரந்து நிற்றலையும் அறிந்த தோழி, இவனொரு குறையுடையான் போலும், அதுவும் இவள்கண்ணதேயாகுமென ஆராயும்பொழுது அதுகாறும் பொறானாய்த் தான் கூறுவதனைத் தோழி கேட்டு விரைந்து குறை முடிக்குமாறு தன்னெஞ்சை நோக்கி, "மடந்தாய்! யான் எப்பொழுது நின்னை அணையவருவதோ கூறாய்" என்றலுங் குறியிடத்து வந்து இன்மொழி கூறிப்பெயர்ந்த கொடிச்சி போகும் புறநோக்கிக் கைவிட்டு நின்ற நெஞ்சமே, ஒருத்தி நின்கையிலகப்பட்டால் நுகராது விடலாமோ? விடுதலாகாதேயென வருந்திக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, ""தோழி குறைஅவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்"" (தொல். கள. 11) என்னும் விதி கொள்க.

    
தளிர்சேர் தண்தழை தைஇ நுந்தை 
    
குளிர்வாய் வியன்புனத்து எற்பட வருகோ 
    
குறுஞ்சுனைக் குவளை அடைச்சிநாம் புணரிய 
    
நறுந்தண் சாரல் ஆடுகம் வருகோ 
5
இன்சொன் மேவலைப் பட்டவென் நெஞ்சுணக் 
    
கூறினி மடந்தைநின் கூரெயிறு உண்கென 
    
யான்தன் மொழிதலின் மொழியெதிர் வந்து 
    
தான்செய் குறியில் இனிய கூறி 
    
ஏறுபிரி மடப்பிணை கடுப்ப வேறுபட்டு 
10
உறுகழை நிவப்பின் சிறுகுடிப் பெயருங் 
    
கொடிச்சி செல்புறம் நோக்கி 
    
விடுத்த நெஞ்சம் விடலொல் லாதே. 

    (சொ - ள்.) மடந்தை தளிர்சேர் தண்தழை தைஇ நுந்தை குளிர்வாய் வியன் புனத்து எல் பட வருகோ - மடந்தாய்! தளிர் சேர்ந்த மெல்லிய தழையை யுடுத்து நுந்தந்தையினுடைய கிளி கடி கருவியாலே பாதுகாக்கப்படுகின்ற அகன்ற தினைப்புனத்தின் கண்ணே பொழுது போதலும் வருவேனோ?; குறும் சுனைக்குவளை அடைச்சி நாம் புணரிய நறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ - பறித்த சுனைக்குவளை மலரைச் சூடி நாம் பண்டு புணர்ந்த நறிய தண்ணிய மலைப்பக்கத்தில் விளையாடுவோமாதலால் அதற்கு அங்கு வருவேனோ?; இன் சொல் மேவு அலைப்பட்ட என் நெஞ்சு உண இனிக் கூறு - இவற்றுக்கு விடையாக நின் இனிய மொழியை விரும்புதலால் அம்மொழி பெறாமல் வருந்துகின்ற என்னுள்ளங்கொண்டு மகிழும்படி இப்பொழுது ஒருமொழி கூறிக்காண்!; நின் கூர் எயிறு உண்கு என - நின்னுடைய கூரிய எயிற்றைச் சுவைத்து மகிழ்வேன் என; யான் தன் மொழிதலின் - யான் நெருங்கி அவள்பால் இனிய வார்த்தை பலவற்றைக் கூறலின்; மொழி எதிர் வந்து தான் செய் குறியில் இனிய கூறி - என் சொல்லுக்கு எதிராக வந்து தான் முன்பு செய்த குறியிடத்து அழைத்துக் கொண்டுபோய் "நீ பின்னர் என்னை முயங்குதி" என இனிய மொழிகளைக் கூறி; ஏறு பிரி மடப்பிணை கடுப்ப வேறுபட்டு உறு கழை நிவப்பின் சிறு குடிப் பெயரும் கொடிச்சி - கலைமானைப் பிரிந்து அகல்கின்ற பெண்மானைப்போல் நின்னை வேறாகக் கொண்டு மிக்க மூங்கில் உயர்ந்து தோன்றுதலையுடைய தன் சிறுகுடியின் கண்ணே பெயர்ந்து செல்லும் கொடிச்சி; செல் புறம் நோக்கி விடுத்த நெஞ்சம் - செல்லுகின்ற பின்புறம் நோக்கி அவளைக் கைவிட்டு ஏமார்ந்திருந்த நெஞ்சமே!; விடல் ஒல்லாது - ஒருத்தி நின் கையிலகப்பட்டால் அவளது நலனை நுகர்ந்து மகிழாது கைவிடலாமா, விடலாகாதே! எ - று.

     (வி - ம்.) எயிறு உண்கு - வாயை முத்தமிடுவேனெனவுமாம். மேவு அலைப்பட்ட - விருப்பம் அலைத்தலால் துன்பப்பட்ட.

    தழைதைஇ எற்பட வருகோவென்றது, வேற்றோனென ஐயுறாதபடி குறிஞ்சி நிலத்துக்குரிய தழையை உடையாகப் புனைந்து இரவுக் குறிவரலாமோ என்றானென்பது. சாரலாடுகம் வருகோவென்றது, பகற்குறி வரலாமோவென வினவினானென்பது. தன்மொழிதல் - அவளுள்ளம் அவன்பால் விரும்புமாறு கூறிய பலவகையாய நயமொழிகள்.

     மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய வருத்தம்பற்றிய இளிவரல். பயன் - கேட்ட தோழி குறைமுடிப்பாளாவது.

     (பெரு - ரை.) இதனால் தலைவன் தனக்கும் தலைவிக்கும் இடந்தலைப்பாடுண்மையை தோழிக்குக் குறிப்பானுணர்த்தின்மை யுணர்க.

     எற்பட என்பதற்குக் கதிரவன் தோன்றிய விடியற் காலத்தே எனப் பொருள் கூறலே தகுதியாம். நெஞ்சம் : விளி.

(204)