திணை : பாலை.

     துறை : (1) இது, தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.

     (து - ம்.) என்பது, வினைவயிற் பிரியுந்தலைவன் ஆற்றானாகித் தன் நெஞ்சை நோக்கி, "நீ துன்னருங்கானமென்னாது இவளை இங்கிருக்குமாறு கைவிட்டு வினைமேற் செல்லுவையாயின், இவளது மாமையினழகு இன்றோடு போயிற்றுக்கா"ணென அழுங்கிக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு "வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.

     துறை : (2) தோழி செலவழுங்கச் சொல்லியதூஉமாம்.

     (து - ம்.) என்பது, தோழி வினைவயிற்பிரியுந் தலைவனை நோக்கி "நீ இவளைக் கைவிட்டு வினைமேற் செல்லுவையாயின் இவளது மாமையினழகு இன்றோடு போயிற்றுக்கா"ணென அழுங்கிக் கூறாநிற்பதுமாகும்.

     (இ - ம்.) இதற்கு, ""பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்,"" (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.

    
அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து  
    
ஆளி நன்மான் வேட்டெழு கோளுகிர்ப் 
    
பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி 
    
ஏந்துவெண் கோட்டு வயக்களிறு இழுக்குந் 
5
துன்னருங் கானம் என்னாய் நீயே 
    
குவளை உண்கண் இவளீண்டு ஒழிய 
    
ஆள்வினைக் ககறி யாயின் இன்றொடு 
    
போயின்று கொல்லோ தானே படப்பைக்  
    
கொடுமுள் ஈங்கை நெடுமா அந்தளிர் 
10
நீர்மலி கதழ்பெயல் தலைஇய 
    
ஆய்நிறம் புரையுமிவள் மாமைக் கவினே. 

    (சொ - ள்.) அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து நல் ஆளி மான் - நெஞ்சே! அருவி ஒலிக்கின்ற பெரிய மலைப்பக்கத்தில் நல்ல ஆளி என்னும் விலங்கு; வேட்டு எழு கோள் உகிரப் பூம்பொறி உழுவை தொலைச்சிய - இரை விரும்பி எழுந்த கொல்ல வல்ல நகங்களையும் அழகிய வரியையுமுடைய புலியாலடிக்கப்ட்ட; வைந்நுதி ஏந்துவெண் கோட்டு வயக் கயிறு இழுக்கும் - கூரிய நுனியையுடைய தலையிலே தாங்கிய வெளிய கோட்டினையுடைய வலிய களிற்றியானையை இரையாகக் கொண்டு இழுத்துச் செல்லாநிற்கும்; துன் அருங்கானம் என்னாய் - பிறர் நெருங்குதற்கரிய காடென்று நினையாய்; நீயே குவளை உண்கண் இவள்ஈண்டு ஒழிய ஆள்வினைக்கு அகறியாயின் - நீ தான் குவளை மலர்போன்ற மையுண்ட கண்களையுடைய இவள் இவ்விடததே நிற்குமாறு கைவிட்டு நின்னுள்ளத்து முயற்சியை மேற்கொண்டு வினையிடத்துச் செல்லுவையாயின; படப்பைக் கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர் நீர்மலி கதழ் பெயல் தலைஇய ஆய்நிறம் புரையும் இவள் மாமைக் கவின் - கொல்லையிலுள்ள வளைந்த முள்ளையுடைய இண்டின் நெடிய கரிய அழகிய தளிரின்மீது நீர்மிக்க விரைவையுடைய மழை பெய்துவிட்ட பொழுதுண்டான அழகிய நிறம் போன்ற இவளது மாமையினழகு; இன்றொடு போயின்று - இன்றோடே போயிற்றுக்காண்; ஆதலின் ஆராய்ந்து நினக்கு ஏற்றது செய்வாயாக! எ - று.

     (வி - ம்.) ஆளி - சிங்கத்தின் வேறுபட்டது.

     மாமைக்கவின் இனி எய்துவதரிதென்பான், இன்றோடே போயதென இறந்தகாலத்தாற் கூறினான். இதனினும் ஆள்வினை சிறந்த தாயினும் கானின் கொடுமையைக் கருதின் அஃது அத்துணைச் சிறப்பிலதென நெறியின் தருமை கூறி அறிவுறுத்தினானாம்.

     இறைச்சி:- புலிதொலைச்சிய களிற்றை ஆளி இரையாக உண்ணக் கருதி யிழுத்துண்ணுங் கானமென்றது, நின்னால் நலனுணப்பட்ட இவளது மேனியழகைப் பசலையுண்டு கெடுக்காநிற்குமென்றதாம். மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - செலவழுங்கல்.

     இரண்டாந்துறைக்கு இவையனைத்துந் தோழி தலைவனை விளித்துக் கூறியதாகக் கொள்ள உரையொக்கும். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - செலவழுங்குவித்தல்.

     (பெரு - ரை) ஆளிமான் உழுவை தொலைச்சிய களிற்றை இழுக்கும் என இயைபுகாண்க. வைந்நுதி ஏந்து வெண்கோடு என்பதற்கு கூரியநுனி உயர்ந்த வெளிய கோடு எனினுமாம். கவின் இன்றோடு போாயின்று என இயைக்க. கொல், ஓ: அசைகள்.

(205)