(து - ம்.) என்பது, பகற்குறியின்கண்ணே தலைமகன் ஒருபுறத்தில் வந்து அற்றம் நோக்கி மறைந்திருப்பதை யறிந்த தோழி அவன்கேட்டு விரைந்து மணஞ்செய்து கொள்ளுமாற்றானே தலைவியை நோக்கித் "தினை முற்றியதைக் கவருகின்ற கிளியை ஓட்டிக் காப்பாயென்று எந்தை கூறினன்; அப்பொழுது அன்ையைும் வேங்கைமலர்கவென என் முகத்தைக் குறிப்பாக நோக்கினளாதலின் நாடனது கேண்மையை அறிந்தனளோ யாதோ தெரிகிலேனே"யென மயங்கிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, “களனும் பொழுதும்.......................ஆங்கதன் றன்மையின் வரைதல் வேண்டினும்” (தொல். கள. 23) என்னும் விதியினான் அமைத்துக் கொள்க.
| துய்த்தலைப் புனிற்றுக்குரல் பால்வார் பிறைஞ்சித் |
| தோடலைக் கொண்டன ஏனல் என்று |
| துறுகல் மீமிசைக் குறுவன குழீஇச் |
| செவ்வாய்ப் பாசினங் கவருமின் றவ்வாய்த் |
5 | தட்டையும் புடைத்தனை கவணையுந் தொடுக்கென |
| எந்தைவந் துரைத்தனன் ஆக அன்னையும் |
| நன்னாள் வேங்கையும் மலர்கமா இனியென |
| என்முகம் நோக்கினாள் எவன்கொல் தோழி |
| செல்வாள் என்றுகொல் செறிப்பல் என்றுகொல் |
10 | கல்கெழு நாடன் கேண்மை |
| அறிந்தனள் கொல்லஃது அறிகலேன் யானே. |
(சொ - ள்.) தோழி துய்த்தலைப் புனிற்று ஏனல் குரல் - தோழீ! பஞ்சு நுனிபோன்ற தலையையுடைய அப்பொழுது ஈன்ற தினைக் கதிர்கள் எல்லாம்; பால் வார்பு இறைஞ்சித் தோடு அலைக் கொண்டன என்று - பால் நிறைந்து முற்றித் தலைசாய்த்து மேலேயுள்ள தோடுகள் அலைதல் கொண்டன. அவற்றை நோக்கி இனி உண்ணத்தகுமென்று கருதி; குறுவன - அக்கதிர்களைக் கொய்து போக வேண்டி; துறுகல் மீமிசைச் செவ்வாய்ப் பாசு இனம் குழீ இ - துறுகல்மீது சிவந்த வாயையுடைய பசிய கிளியின் கூட்டம் கூடி; கவரும் இன்று அவ் வாய்த் தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என - இனிக் கவர்ந்து கொண்டே போய்விடுமாகலின் நீ ஆங்கே சென்று கிளியோப்புந் தட்டையைப் புடையிலுள்ள குற்றியிலேயே புடைத்து ஒலியெழுப்பினையாகிக் கவண் கல்லும் வீசுக என; எந்தை வந்து உரைத்தனன் ஆக - எந்தை வந்து கூறினான்; இனி அன்னையும் நல்நாள் வேங்கையும் மலர்க என என்முகம் நோக்கினள் - அப்பொழுது எம் அன்னையும் இனி நல்ல நாளை அறிவுறுத்தும் வேங்கையும் மலர்க என்று கூறி என் முகத்தைக் குறிப்பாக நோக்கினள் கண்டாய்; செல்வாள் என்று கொல் செறிப்பல் என்றுகொல் எவன்கொல் - என்னைத்தான் இவள் தினைப்புனம் காக்கச்செல்வாளென்றோ? அல்லது தன்னுள்ளத்தே தான் நின்னை (தலைவியை) இல்வயிற் செறிப்பலென எண்ணியோ? வேறு ஏதேனுங் கருதிய துண்டோ!; கல்கெழு நாடன் கேண்மை அறிந்தனள் கொல் - மலை பொருந்திய நாடன்பால் வைத்த நம்முடைய கேண்மையை அவ்வன்னைதான் அறிந்துகொண்டனளோ? யான் அஃது அறிகலேன் - அவளது எண்ணம் இன்னதென்று நான் அறிந்திலேன்; நீ அறிந்தனையாயிற் கூறிக்காண்! எ - று.
(வி - ம்.) பாசினம் - கிளியின் கூட்டம். ஆக: பிரிவிலசைநிலை. இஃது அவன்புணர்வுமறுத்தல். தினைவிளைவு உணவுக்குக் கொண்டு வரப்படும் நாளாகலின் அது நன்னாளெனப்பட்டது.
வேங்கைமலர்க வென்றது தினை கொய்யுங்காலம் அதுவாதலால் விரைவிலே கொய்யக் கருதி கூறினாளென்பது. அங்ஙனம் கூறுதலால் இனித் தலைவி இற்செறிக்கப்படுவளென்றதாம். காரணமின்றிக் கூற்றுமின்றி நோக்கினமையின் நாடனது கேண்மை அறிந்தனள் கொலென்றாள். வேங்கை மலர்தலை அவன் கேட்குமாற்றானே கூறியது அந்நாள் வதுவை அயர்தற்கு ஏற்றதாதலின் வரைவொடு வருகவென அறிவுறுத்தினாளுமாம். மெய்ப்பாடு - பெருமிதம் பயன் - வரைவுடன்படுத்தல்.
(பெரு - ரை.) வேங்கை மலருங்காலமே தினையரியும் காலமாகலின் தந்தை தினைகாக்க ஏவினமை கேட்ட தாய் விரைவில் தினையரியும்படி வேங்கை மலர்க என்று விரும்பிக் கூறினாள், அங்ஙனம் கூறற்குக் காரணம் அவள் நங் களவொழுக்கத்தை யறிந்தமையேயாம்; எனவே அவள் விரைவில் இற்செறிப்பள் என்று குறிப்பான் உணர்த்தியபடியாம்.
(206)