திணை: பாலை.

     துறை: இது, செலவுற்றாரது குறிப்பறிந்து ஆற்றாளாய தலைமகள் உரைப்பத் தோழி சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைமகன் பொருள்வயிற் பிரிந்தானது குறிப்பறிந்து தலைமகள் வருந்துதலும் அதுகண்ட தோழி "நீ ஏன் வாடுகின்றனை, அவர் செல்பவரல்லர்: செல்லிற் காமநோய் பொறுப்பவருமல்லர், பொருள் முடியாதாயினும் வருவர்காண்: இம்மழைக் குரல் பிரிந்தோரை நாடித் தருவதுபோலு"மெனத் தேற்றிக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, “பெறற்கரும் பெரும்பொருள்“ (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனால் அமைத்துக் கொள்க.

    
விறல்சாய் விளங்கிழை நெகிழ விம்மி 
    
அறல்போல் தெள்மணி இடைமுலை நனைப்ப 
    
விளிவிலா 1 கலுழுங் கண்ணொடு பெரிதழிந்து 
    
எவனினைபு வாடுதி சுடர்நுதற் குறுமகள் 
5
செல்வர் அல்லர் 2 நங்காதலர் செலினும் 
    
நோன்மார் அல்லர் நோயே மற்றவர் 
    
கொன்னு நம்பும் குரையர் தாமே 
    
சிறந்த அன்பினர் சாயலும் உரியர் 
    
பிரிந்த நம்மினும் இரங்கி அரும்பொருள் 
10
முடியா தாயினும் வருவர் அதன்றலை 
    
இன்றுணைப் பிரிந்தோர் நாடித் 
    
தருவது போலுமிப் பெருமழைக் குரலே. 

    (சொ - ள்.) சுடர் நுதல் குறுமகள் - விளக்குகின்ற நெற்றியையுடைய இளமடைந்தையே!; விறல்சாய் விளங்கு இழை நெகிழ - நின் வலிமையெல்லாம் குறைந்து போய் விளங்கிய கலன்கள் நெகிழாநிற்ப; தெள் மணி போல் அறல் முலையிடை நனைப்ப - முத்துப்போன்ற கண்ணீர்த்துளி கொங்கையினிடையே விழுந்து நனைத்தலைச் செய்ய; விளிவு இலா விம்மிக் கலுழும் கண்ணொடு - நீங்காதபடி விம்மி விம்மி அழுகின்ற கண்ணுடனே; பெரிது அழிந்து எவன் நினைவு வாடுதி - பெரிதும் அழிந்து வருந்தி என்ன கருதி வாடுகின்றனை?; நம் காதலர் செல்வர் அல்லர் செலினும் நோய் நோன்மார் அல்லர் - நம் காதலர் நின்னைப் பிரிந்து செல்பவரல்லர்; அங்ஙனம் பிரிந்து சென்றாலும் சென்ற விடத்தே தமக்குண்டாகிய காம நோய் பொறுப்பவரல்லர்; அவர் கொன்னு நம்பும் குரையர் - அவர்தாம் நின்னிடத்துப் பெரியதொரு விருப்பமுடையவர் கண்டாய்; சிறந்த அன்பினர் சாயலும் உரியர் - நின்பாற் சிறந்த அன்புடையரா யிராநின்றார், மிக்க மென்மையும் பொருந்தினவராயினார்; பிரிந்த நம்மினும் இரங்கி - அவரைப் பிரிந்துறையும் நம்மினும்காட்டில் இரக்கமுற்று; அரும்பொருள் முடியாதாயினும் வருவர் - தாம் சென்றவிடத்து ஈட்டுதற்குரிய பொருள் முற்றுப் பெறாதாயினும் அது நிமித்தமாக அங்கே நீட்டியாது உடனே மீண்டு வருவர்; அதன்தலை இப் பெரு மழைக்குரல் - அதன் மேலும் இப்பெரிய மேகத்தின் முழக்கமானது; இன் துணைப் பிரிந்தோர் நாடித் தருவது போலும் - இனிய துணையைப் பிரிந்தோரை நாடித் தருவது போலுமாய் இராநின்றது ஆதலின் நீ வருந்தாதே கொள்! எ - று.

     (வி - ம்.) விறல் - வலிமை. சாய்தல் - உள்ளுதனுணுக்கம். அறல் - நீர். நினைபு - நினைத்து. நோன்றல் - பொறுத்தல்: நோன்மார் - பொறுப்பவர். கொன்: பெருமையுணர்த்திய உரிச்சொல். நம்பு - விருப்பம். குரை : அசைநிலை இடைச்சொல். சாயல் - மென்மை. ஆதலின் நீ வருந்தாதேயென்பது குறிப்பெச்சம். பெரிதழிந்து வாடியது - துன்பத்துப்புலம்பல்.

     அங்ஙனம் வாராது நீட்டித்தாலும் இம் மழையைக் கண்டவளவிலே தமியராய் ஆங்குத் தங்கலரென்னுங் கருத்தால் குரல் தருவதுபோலுமெனக் கூறினாள். மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை.) தெண்மணி போல் அறல் என மாறுக. மணி -ஈண்டுமுத்து. இவன் இனைபு வாடுதி எனக் கண்ணழித்துக் கோடலுமாம். அப்பொழுது கார்ப்பருவந் தொடங்குதல் காட்டி இப்பருவத்தே அவர் பிரிவு சூழார்காண் என்று ஆற்றுவிப்பாள் பெருமழைக் குரல் நாடித் தருவது போலும் என்றாள் என்க.

(208)
  
 (பாடம்) 1. 
கலிழும்.
 2. 
நுங்காதலர்