திணை : குறிஞ்சி.

     துறை : இது, குறைமறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைமகன், ஆற்றனாய் நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைவன் தோழியிடத்துச் சென்று தலைவி இன்றியமையாமையாகிய குறைகூறி இரந்தவழி அவள் மறத்து விட்டுத் தனியேயிருந்து அவன் குறைக்குக் காரணம் யாதென்று ஆராய்கின்ற காலத்தில் அதுகாறும் பொறானாய் ஆற்றாது தன்னெஞ்சை நோக்கி "இக் கொல்லை காப்பாளுடைய இனிய குரலைக் கிளியும் அறிந்திருக்கும்; அத்தகையாள் எனது அருகிருப்பின் எனது நோய் தீரும்; பொருந்தாளாயின் என்னுயிரோடெல்லாம் அழிந்தொழியு"மென நொந்து கூறாநிற்பது,

     (இ - ம்.) இதற்கு, “தோழி குறை அவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்” (தொல். கள. 11) என்னும் விதிகொள்க.

    
மலையிடம் படுத்துக் கோட்டிய கொல்லைத் 
    
தளிபதம் பெற்ற கானுழு குறவர் 
    
சிலவித்து அகல விட்டுடன் பலவிளைந்து 
    
இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள் 
5
மழலையங் குறுமகள் மிழலையந் தீங்குரல் 
    
கிளியுந் தாமறி பவ்வே எனக்கே 
    
படுங்காற் பையுள் தீரும் படாஅது 
    
தவிருங் காலை யாயினென் 
    
உயிரோ டெல்லாம் உடன்வாங் கும்மே. 

     (சொ - ள்.) மலை இடம் படுத்துக் கோட்டிய கொல்லைத் தளிபதம் பெற்ற கான்உழு குறவர் - மலைச்சார்பிடத்தில் அகலப்படுத்தி வளைத்த கொல்லையாகிய மழை பெய்யும் பதம் பெற்ற காட்டினை உழுகின்ற குறவர்; சில வித்து அகல விட்டு உடன் பல விளைந்து இறங்குகுரல் பிறங்கிய ஏனல் - சிலவாய விதைகளைக் கலப்பாக விதைத்து ஒருசேரப் பலவாக விளைந்து சாய்ந்து கதிர் விளங்கிய தினைக்கொல்லையின்கண்; உள்ளாள் மிழலை இம் குறுமகள் மழலை அம் தீம்குரல் கிளியும் அறிப - உள்ளாளாகிய மழலை மாறாத இளமடந்தை பேசுகின்ற இனிய குரலைக் கிளிகளும் அறிந்திருப்பனவே; எனக்கே படுங்கால் பையுள் தீரும் - அவ்வினியகுரல் என் அருகிருந்து மிழற்றின் அன்றே எனது காமநோய் தீரும்; படாஅது தவிருங் காலை ஆயின் - அங்ஙனம் அருகிருந்து மிழற்றப்படாது என்னினின்று நீங்கி அகல்வதாயின்; என் உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே - என் அறிவு முதலாய குணங்களுடன் என் உயிரையும் சேர எல்லாவற்றையும் கைக்கொண்டு அகலா நிற்கும்; இப்படியாயின் அவள் இன்றி யான் எவ்வாறு உய்ய மாட்டுவேன்? எ - று.

     (வி - ம்.) கோட்டுதல் - வளைத்தல்; வேலியிட்டு அகலப்படுத்தி வளைத்தல். கொல்லைக் கானுழுகுறவர் - கொல்லைக்காட்டை யுழுகின்ற குறவரென்க.

     இறைச்சி :- சிலவாய விதையை விதைத்துப் பலவாய பயனைப் பெறும் ஏனல் காவலி னிவளை விரும்பிய யானும் நின்பாற் கூறும் சிலவாய கூற்றினாற் பெற்று இவள் கொடுக்கின்ற பலவாய இன்பந் துய்ப்பேனாக வென்றதாம். மெய்ப்பாடு - தன்கட்டோன்றிய அவலம். பயன் - தோழி கேட்டுக் குறை முடிப்பாளாவது.

     (பெரு - ரை.) மழலை - இளஞ்சொல்; மிழலை - நிரம்பா மெல்லிய இன்சொல் என வேற்றுமையுணர்க. கிளியும் தாமறிப என்புழி உம்மையான் அறிந்ததன்றியும் எனப் பொருள்பட்டுத் தலைவிக்கும் தலைவற்கும் கூட்ட முண்மையைக் குறிப்பாக வுணர்த்தி நின்றது. எனக்குப் படுதல் - என் பொருட்டுப் பேசப்படுதல்.

(209)