(து - ம்.) என்பது, சென்று பொருள் செயல் வினைமுடித்து மீளுந் தலைமகன் தேர்ப்பாகனை நோக்கி 'வலவ, நம் மழவர் பின்னே வருவாராக; நீ விரைந்து தேரைச் செலுத்து; கானவாரணம் இரையைப் பெற்றுப் பெடையை நோக்குகின்றதனைப் பாராய்' என யாமும் அங்ஙனம் தலைவியை நோக்கி மகிழ்வேமென்னுங் குறிப்புப்படக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்" (தொல்-கற்- 5) என்னும் விதி கொள்க
| விரைப்பரி வருந்திய வீங்குசெலல் இளையர் |
| அரைச்செறி கச்சை யாப்பழித் தசைஇ |
| வேண்டமர் நடையர் மென்மெல வருக |
| தீண்டா வைமுள் தீண்டி நாஞ்செலற் |
5 | கேமதி வலவ தேரே உதுக்காண் |
| உருக்குறு நறுநெய் பால்விதிர்த் தன்ன |
| அரிக்குரல் மிடற்ற அந்நுண் பல்பொறிக் |
| காமரு தகைய கான வாரணம் |
| பெயனீர் போகிய வியனெடும் புறவிற் |
10 | புலரா வீர்மணன் மலிரக் கெண்டி |
| நாளிரை கவர மாட்டித்தன் |
| பேடை நோக்கிய பெருந்தகு நிலையே. |
(சொ - ள்.) வலவ விரைப் பரிரி வருந்திய வீங்கு செலல் இளையர் - பாகனே ! விரைந்து செல்லுதலாலே வருந்திய மிக்க செலவினையுடைய நம் வீரர்; அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ வேண்டு அமர் நடையர் மெல்மெல வருக. இடையிற் செறித்த கச்சையின் பிணிப்பை நெகிழ்த்து ஆங்காங்குத் தங்கித் தாம் தாம் விரும்பிய வண்ணம் அமர்ந்த நடையராய் மெல்ல மெல்ல வருவாராக; உருக்குறு நறுநெய் பால் விதிர்த்து அன்ன அரிக்குரல் மிடற்ற அம் நுண்பல் பொறிக் காமரு தகையகான வாரணம் - உருக்கலுற்ற நறிய நெய்யிற் பாலைச் சிதறினாற் போன்ற கடைகின்ற குரலையுடைய மிடற்றினையுடைய அழகிய நுண்ணிய பலவாகிய புள்ளிகளமைந்த கண்டார்க்கு விருப்பம் வரும் தகுதிப்பாட்டினையுடைய கானங்கோழி; பெயல்நீர் போகிய வியல் நெடும் புறவில் புலரா ஈர்மணல் மலிரக்கெண்டி - மழை பெய்தநீர் வடிந்த அகன்ற நெடிய காட்டிலே சுவறாத ஈரமணலை நன்றாகப் பறித்து; நாள் இரை கவர மாட்டி - நாட்காலையில் இரையாகிய நாங்கூழைக் கவர்தலும் அதனைக் கொன்று; தன் பெடை நோக்கிய பெருந்தகை நிலை உதுக்காண் - தன் பெடைக்கு ஊட்ட வேண்டி அப் பெடையை நோக்கிய பெருமை தக்கிருக்கின்ற நிலையை உங்கே பாராய்!; நாம் செலற்கு தீண்டா வை முள் தீண்டி ஏமதி - ஆதலின் நாம் முன்னே விரைந்து செல்லுமாறு இதுகாறுந் தீண்டாத கூரிய தாற்றுமுள்ளாலே குதிரையைத் தூண்டித் தேரைச் செலுத்துவாயாக!; எ - று.
(வி - ம்.)பரி-செலவு. உதுக்காண்-உங்கே பாராய். அரிக்குரல் மிடறு - தேரையின் குரல்போன்ற குரலையுடைய மிடறு எனவுமாம். மலிர - விளங்க வெனவுமாம். கெண்டுதல்-பறித்தல். மாட்டல்-அழித்தல். நெய்பால் விதிர்த்தல்: திணைக்கேற்றவுவமை பெயனீர் போகிய புறவென்றதனானே மழைபெய்துவிட்டமை கூறினான். குறித்த பருவத்துத் தாழ்த்தமையின் விரைந்து ஏமதி யென்றான். நாளிரை கொண்டு பெடையை நோக்குதல் காணெனவே அதுபோலப் பொருளீட்டிவரும் யாமும் மனைவியை நோக்கவிரும்புவதும் எனப்பொருள்படுதலால் இது பொருள்வயிற் பிரிவாயிற்று. மெய்ப்பாடு - உவகை. பயன் - கேட்ட பாகன் விரைந்து தேர் கடாவல்.
(பெரு - ரை.) இதன்கண் கானவாரணம் புறவில் மணல் கெண்டிப் பெற்ற நாங்கூழாகிய நாளிரையைத் தன் பெடையை யூட்டி மகிழ்தற்கு அதனை விரும்பி நோக்கியிருத்தல் போன்று யாமும் வேற்று நாட்டின்கட் சென்று ஊக்கத்தோடு முயன்றீட்டிய நம் பொருளை மனையோடிருந்து அறஞ்செய்து இன்புறுதற்கு இன்றியமையாத் துணையாகிய எங்காதலியைக் காண்டற்குப் பெரிதும் கண்விதுப்புறா நின்றோம் என்பது உள்ளுறை. இப்பொருள் விரைந்து செலுத்தற்குக் குறிப்பேதுவாய் நிற்றல் காண்க.
(21)