திணை : பாலை.

     துறை : இது, பொருண்முடித்துக் தலைமகனோடு வந்த வாயில்கள் வாய் வரைவுகேட்ட தோழி தலைமகட்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, பொருள்வயிற்சென்ற தலைவன் மீண்டுவரும் பொழுது அதனுடன் வந்த இளைஞர் முதலானோர் முன்னரே மனையகம் புகுந்து தலைவன் வருகையைத் தெரிவிப்பக் கேட்ட தோழி, தலைமகளை நெருங்கிச் "சுரத்தின் கண்ணே சென்ற நங்காதலர் மீண்டுவந்தெய்தினர்காண்; ஆதலின் அவரும் நீயும் நெடுங்காலம் வாழ்க"வென உவந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, “பெறற்கரும் பெரும் பொருள்“ (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதன்கண் அமைத்துக் கொள்க.

    
பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ 
    
நெடுங்கால் கணந்துளம் புலம்புகொள் தெள்விளி 
    
சுரஞ்செல் கோடியர் கதுமென இசைக்கும் 
    
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண் 
5
கடுங்குரல் பம்பைக் கதநாய் வடுகர் 
    
நெடும்பெருங் குன்ற நீந்தி நம்வயின் 
    
வந்தனர் வாழி தோழி கையதை 
    
செம்பொற் கழல்தொடி நோக்கி மாமகன் 
    
கவவுக்கொள் இன்குரல் கேட்டொறும் 
10
அவவுக்கொள் மனத்தேம் ஆகிய நமக்கே. 

    (சொ - ள்.) தோழி பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ நெடுங்கால் கணந்துளம் புலம்புகொள் தெள்விளி - தோழீ! பார்வை ஒன்றனை வைத்து வேட்டுவன் அமைத்த வலையைக் கண்டு வெருவி நெடிய காலையுடைய "கணந்துள்" என்னும் பறவை தான் தனிமையினிருந்து கத்தாநின்ற தெளிந்த ஓசை; சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும் நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண் - அச்சுரத்தின் கண்ணே செல்லுகின்ற கூத்தாடிகள் தம் வழிவருத்தம் நீங்குமாறு தங்கி விரைவில் ஒலியெழுப்பி இசைபாடுகின்ற யாழோசையோடு சேர்ந்து ஒத்து ஒலியாநிற்கும் அரிய நெறியிலே; கடுங்குரல் பம்பைக் கதநாய் வடுகர் நெடும்பெரும் குன்றம் நீந்தி - கடிய ஒலியையுடைய பம்பையையும் சினங்கொண்ட நாயையுமுடைய வடுகர் இருக்கின்ற நெடிய பெரிய குன்றங் கடந்து; கையது (ஐ) செம்பொன் கழல் தொடி நோக்கி - நம்முடைய கையிலுள்ளதாகிய செம்பொன்னாற் செய்து பூட்டப்பட்டு இப்பொழுது கழன்று விழுகின்ற தொடியை நோக்கி; மாமகன் கவவுக் கொள் இன் குரல் கேள் தொறும் - நம் (அரிய) சிறந்த புதல்வன் நம்மை அணைத்துக்கொண்டு அழுகின்ற இனிய குரலைக் கேட்குந் தோறும்; அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கு - ஆசைகொள்ளுகின்ற மனத்தை யுடையேமாகிய நமக்கு மனமகிழச்சி உண்டாகும்படி; நம்வயின் வந்தனர் வாழி - நம்மிடத்து வந்தெய்தினர் கண்டாய்! ஆதலின், இனி நீங்கள் இருவீரும் மனையறஞ் செய்துகொண்டு நெடுங்காலம் வாழ்வீராக! எ - று.

     (வி - ம்.) கோடு - ஊதுகொம்பு; அதனை யுடைமையிற் கோடியரெனவுமாம். நரம்பு : யாழுக்குச் சினையாகு பெயர். பம்பை - ஒரு வகை வாச்சியம். கவவு - உள்ளே அணைத்துக் கொள்ளுதல். கணந்துளம், அம்: சாரியை; இது நீர்வாழ்பறவை என்று கூறப்படுதலின், “எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்” (தொல். பொ. 19) என்றபடி பாலைக்கண் வந்ததெனக் கொள்க. கைகோள் - கற்பு.

     தலைவன் பிரிதலினாலே மெய் இளைத்தலிற் கழுறொடியென்றாள்; அதனையும் மெய்சோர்ந்து காட்டுதலையும் நோக்கவே மகனுக்கு அழுகை பிறந்தமை கூறினாள்.

     இறைச்சி :- கணந்துட் பறவையினோசை யாழோசையோடு சேர்ந்து இசைக்கு மென்றது, நீ தலைவனோடு கூடி எங்கும் இசைபரவ வாழ்வாய் என்றதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - மகிழ்ச்சி.

     (பெரு - ரை.) மழலைக் குரல் ஆகலின் அழுகுரலேனும் இன்குரல் என்றாள். அவா: உகரம் பெற்று அவவு என்றாயிற்று. இரா - இரவு, கனா - கனவு, நிலா - நிலவு என வருவன போல வந்தது எனக் கொள்க. “குறியதன்கீழாக் குறுகலு மதனோ, டுகரமேற்றலு மியல்பு மாந்தூக்கின்“ (நன். சூத். 172) என்னும் விதியின் அமைத்துக் கொள்க. “அங்கண் என்பது ஆங்கண்” என்று நீண்டு நின்றது; நீட்டல் விகாரம்.

(212)