(து - ம்.) என்பது, இயற்கைப்புணர்ச்சி புணர்ந்தபின் வாயில் பெற்றுய்ந்த தலைமகன் பின்னர்த் தலைமகளுந் தோழியும் ஓரிடத்திலிருப்பதை யறிந்து மதியுடன்படுப்பான் ஆங்கேகிப் புதுவோன்போல நின்று "சிறுமிகளே, நுமது சிறுகுடி யாதென வினவவும் நீங்கள் சொல்லுகின்றிலீர்; அது கிடக்க, இத் தினைப்புனங்காவலும் நும்முடையதேயோ இதனையேனுங் கூறுமினோ" என்று தன் கருத்தொடு அவ்விருவர் கருத்தினையும் ஒன்றுபடுத்துணரக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, “ஊரும் பெயரும் கெடுதியும் பிறவும், நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித், தோழியைக் குறையுறு பகுதியும்" (தொல். கள. 11) என்னும் விதியில் பிறவும் என்பதனால் அமைத்துக் கொள்க.
| அருவி ஆர்க்கும் பெருவரை நண்ணிக் |
| கன்றுகால் யாத்த மன்றப் பலவின் |
| வேர்க்கொண்டு தூங்குங் கொழுஞ்சுளைப் பெரும்பழம் |
| குழவிச் சேதா மாந்தி அயலது |
5 | வேய்பயில் இறும்பின் ஆம்அறல் பருகும் |
| பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதெனச் |
| சொல்லவும் சொல்லீ ராயிற் கல்லெனக் |
| கருவி மாமழை வீழ்ந்தென எழுந்த |
| செங்கேழ் ஆடிய செழுங்குரற் சிறுதினைக் |
10 | கொய்புனம் காவலும் நுமதோ |
| கோடேந்து அல்குல் நீள்தோ ளீரே. |
(சொ - ள்.) கோடு ஏந்து அல்குல் நீள் தோளீரே - பக்கம் உயர்ந்த அல்குலையும் பெருத்த தோளையுமுடைய சிறுமிகளே!; அருவி ஆர்க்கும் பெருவரை நண்ணி - அருவியொலிக்கின்ற பெரிய மலையை யடைந்து! கன்று கால் யாத்த மன்றப் பலவின் வேர்க்கொண்டு தூங்குங் கொழுஞ்சுளைப் பெரும்பழம் - ஆவினது இளங்கன்றைக் காலிலிட்ட கயிறு பிணித்த தழைந்த மன்றம் போன்ற பலாமரத்தின் வேரிலே காய்த்துத் தூங்காநின்ற கொழுவிய சுளையையுடைய பெரிய பழத்தை; குழவிச் சேதா மாந்தி - அவ்விளங்கன்றையுடைய சிவந்த பசுவானது தின்று; அயலது வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் - பக்கத்திலுள்ளதாகிய மூங்கில் நெருங்கிய சிறுமலையின்கணுள்ள குளிர்ந்த நீரைப் பருகாநிற்கும்; பெருங்கல் வேலிச் சிறுகுடி யாது எனச் சொல்லவும் சொல்லீர் ஆயின் - பெரியமலையை அரணாகவுடைய நுமது சிறிய குடிதான் யாதோ என யான் வினவ அதற்கு விடையொன்று சொல்லுதலையுஞ் செய்திலீர்! ஆயினும் அதுகிடக்க; கருவி மா மழை கல்லென வீழ்ந்தென - மின்னல் முதலாய தொகுதியையுடைய கரிய மேகம் கல்லென்னும் ஒலியோடு மழையைப் பெய்ததனாலே; எழுந்த செங்கேழ் ஆடிய செழுங்குரல் சிறுதினைக் கொய்புனம் காவலும் நுமதோ - விளைந்த சிவந்த நிறம் பொருந்திய செழுவிய கதிர்களையுடைய கொய்யத்தக்க இத்தினைப் புனங்காவலும் நும்முடையதுதானோ? இதனை யேனுங் கூறுங்கோள்; எ - று.
(வி - ம்.) இறும்பு - சிறிய மலை. ஆம் - ஈரம். அறல் - நீர். கருவி - மின்னல் முதலியவற்றின் தொகுதி. கேழ் - நிறம். முன்றிலின்கண்ணே பலர் கூடி வைகுமாறு மன்றுபோல நிற்றலின் மன்றப் பலவென்றார். ஊர்ப்பொது மரமுமாம்.
கோடேந்து அல்குலெனத் தான் முன்பு கண்டு வைத்ததாகக் கூறலின் முன்னுறு புணர்ச்சி் அறிவுறுத்தினான். வேற்றுமையிலீ ரென்பான் நீள்தோளீ ரென்றான். இதனானே தலைவியுள்ளக் கருத்தின்வழி நீ யொழுக வேண்டுமென்று ஒற்றுமைநயத்தாற் கூறினானுமாம். புனமழிந்தாற் கூட்டமின்மை கூறுவான் கொய்கின்ற புனமென்றான். கொய்தழிந்தவழித் தலைவி மனையகம் புகுமாதலின் ஆண்டு இரவுக்குறி வேண்டுவான் சிறுகுடியாதென வினாவினமை கூறினான்.
உள்ளுறை:- கன்றையுடைய சேதா ஆண்டுள்ள பலாப்பழத்தைத் தின்று அயலிலுள்ள இறும்பின் நீரைப் பருகுமென்றது, இத்தலைவியை முன்பே இயற்கைப்புணர்ச்சியாலே பெற்றுடைய யான் இங்குப் பகற்குறியிற் கூடி அப்பால் இரவுக்குறியுங் கூடி நுகர்ந்து மகிழ்வேனென்றதாம். மெய்ப்பாடு - இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன் - மதியுடம்படுத்தல்.
(பெரு - ரை.) கொடுஞ்சினைப் பெரும்பழம் என்றும் பாடம்.
(213)