(து - ம்.) என்பது, இரந்தோர்க் கீதல் முதலாய காரணத்தானே பொருள்வயிற பிரியுந் தலைமகன் இன்னபருவத்து வருவேனென்றபடி வாராமையாலே அவன் குறித்த பருவம் வரக்கண்ட தலைவி, போதணிய வருவே னென்று சூளுரை கூறியகன்ற நம் தலைவர் தாங்கூறிய பருவத்துக்குரிய இடிமுழக்கத்தைக் கேட்டிலரோவென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, “தோழிக் குரியவை.............................ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்” (தொல். கற். 6) என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் |
| அசையுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இன்மென |
| வினைவயிற் பிரிந்த வேறுபடு கொள்கை |
| அரும்பவிழ் அலரிச் சுரும்புண் பல்போது |
5 | அணிய வருதுநின் மணியிருங் கதுப்பென |
| எஞ்சா வஞ்சினம் நெஞ்சுணக் கூறி |
| மைசூழ் வெற்பின் மலைபல இறந்து |
| செய்பொருட்கு அகன்ற செயிர்தீர் காதலர் |
| கேளார் கொல்லோ தோழி தோள் |
10 | இலங்குவளை நெகிழ்த்த கலங்கஞர் எள்ளி |
| நகுவது போல மின்னி |
| ஆர்ப்பது போலும்இக் கார்ப்பெயல் குரலே. |
(சொ - ள்.) தோழி இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசையுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இனம் என - தோழீ! இம்மைக்குரிய புகழும் இருமைக்குமுரிய இன்பமும் அங்ஙனம் மறுமையிலும் இன்புறுதற்கேதுவாகிய இரந்தோர்க்கீதல் முதலாகிய கொடைமையும் ஆகிய இம்மூன்றும் தமது இல்லின்கண்ணே செயலற்றிருந்தோர்க்கு அருமையாகவும் கைகூடுவதில்லை எனக் கருதி; வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை - பொருள் செயல் வினையிடத்துப் பிரிந்த வேறுபட்ட கோட்பாட்டுடனே; நின் மணி இருங் கதுப்பு அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போது அணிய வருதும் என நெஞ்சு உண - என்னை நோக்கி "நின்னுடைய நீலமணிபோலுங் கரிய கூந்தலுக்குக் கார்காலத்து அரும்பு மலர்ந்த இதழ்களில் வண்டுகள் தேனைப் பருகாநின்ற பலவாய மலர்களை அணியும் பொருட்டு யாம் வருகின்றோம் என்று என் மனங்கொள்ளுமாறு; எஞ்சா வஞ்சினம் கூறி - குறையாத கடுஞ்சூள் பலவுங் கூறி; மை சூழ் வெற்பின் மலை பல இறந்து செய்பொருட்கு அகன்ற செயிர்தீர் காதலர் - மேகந்தவழும் வெற்பாகிய மலைகள் பலவற்றைக் கடந்து பொருளீட்டும் வண்ணம் 0சென்ற யாதொரு குற்றமும் இல்லாத நங்காதலர்; தோள் இலங்குவளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி நகுவது போல மின்னி - என்னுடைய தோளிலுள்ள இலங்கிய வளைகளை நெகிழும்படி செய்ததனாலாகிய கலங்கிய துன்பத்தை நோக்கி இகழ்ந்து நகைபுரிவது போல மின்னி; ஆர்ப்பது போலும் இக் கார்ப்பெயல் குரல் கேளார்கொல் - ஆரவாரஞ்செய்வது போலுகின்ற இந்த மழைபெய்யும் மேகத்தின் இடி முழக்கத்தைக் கேட்டிலர் கொல்லோ?; எ - று.
(வி - ம்.) அசை - செயலறவு.
தேயந்தோறும் பருவவேறுபாடுண்மையின் அவர் சென்ற நாட்டு இக் கார்ப்பருவமில்லை போலும், இருந்தால் அறிந்துகொள்வாரே என்பாள், கேளார்கொல்லோ வென்றாள். அவர் தவறுநரல்ல ரென்பாள் செயிர்தீர் காதலரென்றாள். இஃது அருண்மிகவுடைமை. வஞ்சினங் கூறிச் சென்றனர் என்றது குறித்த பருவத்து, வாராவிடின் வஞ்சினத்தான் அணங்கப்படுவர்கொலென இரங்கினாளாயிற்று; இது தெய்வமஞ்சல். ஏனை மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) "அரும்புணர்வு ஈன்ம் என" என்றும் பாடம்; இப்பாடமே சிறப்புடையதுமாகும். ஈனும் எனற்பாலது, ஈற்றுயிர் மெய்கெட்டு நின்றது. இல்லை என்னுஞ் சொல் இன்ம் என வருவதற்கு விதியின்மையும் நோக்குக. இசை இம்மைப் பயனாதலும் இன்பம் இருமைக்கும் பயனாதலும் ஈதல் இவ்விரண்டிற்கும் காரணம் ஆதலும் பற்றி இம்முறையே நிறுத்திய நயம் உணர்க.
அகன்ற காதலரை, அஃது அவன் அறக்கடமை என்பது பற்றிச் செயிர்தீர் காதலர் என்று பாராட்டிய தலைவியின் மாண்பு உணர்க. இதன்கண் தலைவன் வஞ்சினம் பிழைக்குமோ என்றே தலைவி வருந்துகின்றனள் என்க. “இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசையுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இன்ம்” என்னும் இவ்வருமையான பொருள் பொதிந்த சொற்றொடர் தலைவன் கூற்றாகும். இதனைத் தலைவி கொண்டு கூறுகின்றனள்.
(214)