திணை : நெய்தல்.

     துறை : (1) இது, பகற்குறி வந்து மீள்வானை "அவள் ஆற்றுந் தன்மையள் அல்லள்; நீயிர் இங்குத் தங்கற்பாலீர்; எமரும் இன்னதொரு தவற்றினர்" எனத் தோழி தலைமகற்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, வெளிப்படை.

     (இ - ம்.) இதற்கு, “வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தும்” (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

     துறை : (2) இரவுக்குறிமறுத்து வரைவுகடாயதூஉமாம்.

     (து - ம்.) என்பது, களவொழுக்கத்து இரவுக்குறி வருந் தலைமகனை அங்ஙனம் வாராதபடி தடுத்து மணம்புரிந்து கொள்ளும் வண்ணங் குறிப்பாற் கூறாநிற்பதுமாகும்.

     (இ - ம்.) இதனை, “களனும் பொழுதும் ............................. அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்” (தொல். கள. 23) என்னும் விதியால் அமைத்துக் கொள்க.

    
குணகடல் இவர்ந்து குரூஉக்கதிர் பரப்பிப் 
    
பகல்கெழு செல்வன் குடமலை மறையப் 
    
புலம்புவந் திறுத்த புன்கண் மாலை 
    
இலங்குவளை மகளிர் வியனகர் அயர 
5
மீன்நிணந் தொகுத்த ஊன்நெய் ஒண்சுடர் 
    
நீல்நிறப் பரப்பின் தயங்குதிரை உதைப்பக் 
    
கரைசேர்பு இருந்த கல்லென் பாக்கத்து 
    
இன்றுநீ இவணை யாகி எம்மொடு 
    
தங்கின் எவனோ தெய்ய செங்கால் 
10
கொடுமுடி அவ்வலை பரியப் போகிய 
    
கோட்சுறாக் குறித்த முன்பொடு 
    
வேட்டம் வாயாது எமர்வா ரலரே. 

    (சொ - ள்.) குணகடல் இவர்ந்து குரூஉக் கதிர் பரப்பிப் பகல் கெழு செல்வன் குடமலை மறைய - சேர்ப்பனே! கீழ்க்கடலினின்றெழுந்து நல்ல நிறத்தையுடைய கதிர்களைப் பரப்பிப் பகற்பொழுதைச் செய்து விளங்கிய ஆதித்தன் மேல்பால் உள்ள மலையிலே மறைந்து செல்லலும்; புலம்புவந் திறுத்த புண்கண் மாலை - துன்பத்தை முற்படுத்து வந்து தங்கிய புன்கண்ணையுடைய மாலைப் பொழுதினை; இலங்கு வளை மகளிர் வியன் நகர் அயர - இலங்கிய வளையணிந்த மகளிர் தத்தம் மாளிகையிலே எதிர் கொண்டு அழையாநிற்ப; மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒள் சுடர் - மீன் கொழுப்பைச் சேர்த்து உருக்கிய ஊனாகிய நெய்வார்த்து ஏற்றிய ஒள்ளிய விளக்கின் ஒளியையுடைய; நீல்நிறப் பரப்பில் தயங்குதிரை உதைப்பக் கரைசேர்பு இருந்த கல் என்னும் பாக்கத்து - நீல நிறமுடைய பரப்பின்கண் விளங்கிய அலைமோதக் கரையிடத்துப் பொருந்தியிருந்த கல்லென்னு மொலியையுடைய பாக்கத்து; இன்று நீ இவணை ஆகி எம்மொடு தங்கின் எவன் - இன்று நீ இவ்விடத்து இருந்தனையாகி எம்மொடு தங்கியிருப்பின் உனக்கு ஏதேனும் குறைபாடுளதாகுமோ?; செங்கால் கொடுமுடி அவ் வலை பரியப்போகிய கோள் சுறாக் குறித்த முன்பொடு - சிவந்த நூலாகிய காலையும் வளைந்த முடியையுமுடைய அழகிய வலை கிழியும்படி அறுத்துக் கொண்டு புறத்தே ஓடிப்போன கொல்ல வல்ல சுறாமீனைக் கருதி மிக்க வலியுடனே; வேட்டம் வாயாது எமர் வாரலர் - அவற்றைத் தம் வேட்டையிலகப்படப் பிடித்துக் கொண்டு வாராது எஞ்சுற்றத்தார் வறிதே மீண்டுவருபவரல்லர்; எ - று.

     (வி - ம்.) அயரவென்னு மெச்சம் இருந்த வென்பதனைக் கொண்டது.

     தலைவிக்கு வருத்த மிகுதியுண்டா மென்பதனை அறிவுறுத்துவாள் புன்கண்மாலை யென்றாள். தலைவியொடு கூடி நலந்துய்க்க வென்று குறிப்பிப்பாள் எம்மொடு தங்கினெவனோ என்றாள். அச்சமும் கண் படையும் இன்றி இரவுமுழுதுந் துய்க்கலாமென்பாள் எமர் வாரலரென்றாள். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

     (2) இரவுக்குறி மறுத்து வரைவுகடாதற்கு மணஞ்செய்து கொண்டால் அன்றி வெளிப்படையாகத் தலைவிபால் வைகுதற்கு இயலாதாதலானும், வேட்டம் வாய்ப்பின் எமர் உடனே வருவராதலால் அவர் அறியின் ஏதம் நிகழும் ஆகலானும், மாலை புன்கணுடையதாதலால் நீ தங்காவிடின் தலைவி ஆற்றகிலாளெனக் குறிப்பாற் கூறுதலானும் மணஞ்செய்து கொள்கவெனக் களவுமறுத்து வரைவுகடாயதறிக. மெய்ப்பாடும் பயனும் அவை.

     (பெரு - ரை.) புன்கண்ணைச் செய்கின்ற மாலை என்க. காதலரோடு கூடியிருக்கும் மகளிர் என்பாள் இலங்குவளை மகளிர் என்றாள். அவர் மாலையை மகிழ்ந்து வரவேற்ப இவள்மட்டும் வருந்தியிருப்பதோ என்றிரங்கியபடியாம்.

(215)